Thursday, October 10, 2019

ஆதரவளிக்கும் அரசியல் கட்சிகளின் மௌனம் கவலையளிக்கிறது - கணேஸ் வேலாயுதம்

ஜனாதிபதியான மறுநாளே சிறையிலுள்ள இராணுவ வீரர்களை விடுதலை செய்வேனென ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளமை தொடர்பில் அவருக்கு ஆதரவளிக்கும் தமிழ்க் கட்சிகள் மௌனம் காக்கின்றமை கவலையளிக்கின்றது” என, மக்கள் முன்னேற்றக் கூட்டணியின் செயலாளர் கணேஸ் வேலாயுதம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “பொதுஜன பெரமுனவின் முதலாவது தேர்தல் பிரசார கூட்டம் அநுராதபுரத்தில் நேற்று நடைபெற்றது. இதன்போது ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ, தான் ஜனாதிபதியானதும் நவம்பர் 17 ஆம் திகதி சிறையிலுள்ள இராணுவ வீரர்கள் அனைவரும் விடுவிக்கப்படுவர் என தெரிவித்துள்ளார்.

“அவரது பேச்சில் சிறையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.

"அரசியல் கைதிகள் தமது விடுதலைக்காக பல போராட்டங்களை நடத்தியுள்ளனர். இதன்போது வாக்குறுதிகள் வழங்கி உண்ணாவிரதங்கள் முடித்து வைக்கப்பட்டன. ஆனால் அவர்களின் விடுதலை என்பது முடிவின்றி தொடர்ந்து செல்கின்றது.

“இவ்வாறான சூழ்நிலையில் சிறையிலுள்ள இராணுவ வீரர்கள் விடுவிக்கப்படுவர் என்ற கோட்டாபயவின் கருத்து இனவாதத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

"மேலும், நல்லாட்சியில் 4 1/2 வருடமாக மறைந்திருந்த கடந்த கால இருண்ட யுகத்தை மீண்டும் நினைவு படுத்துவதாக அமைந்துள்ளது. இக்கருத்து தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ள தமிழ் கட்சிகள் மௌனம் காக்கின்றன.

“இது கவலையளிக்கின்றது. எனவே, கோட்டாபயவின் கருத்து தொடர்பில் அவருக்கு ஆதரவளிக்கும் தமிழ்க் கட்சிகள் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும்” என்றார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com