Thursday, October 10, 2019

அபிவிருத்தி எனும் மதுவில் மயங்கிய தமிழர் தலைமை குளத்தில் போட்டதை ஆற்றில் தேடலாமா? சிவா குருபரன்

UNP கட்சி தமிழர் பிரச்சனையில் பலவிதமான முயற்சிகளை முன்னெடுத்திருந்தாலும் அவை அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தது இவ்விடயத்தில் UNP ஒரு தோல்வி கட்சி ஆகும், இந்த தோல்வி சிலவேளைகளில் ரணிலின் நேர்மையற்ற தன்மையால்கூட நிகழ்ந்திருக்கக்கூடும். தமிழர் பிரச்சனையை தீர்க்கும் படிமுறையை புறப்புலன் இலக்காக முன்னிறுத்தி தமிழரை சிறுக்க சிதைத்து அழிக்கும் உண்மையான இலக்கை அவர் கொண்டிருப்பதை ஏனையோர் அவரது செயற்பாட்டின் இடைகாலங்களில் முறியடிப்பதாலும் நிகழ்ந்திருக்கக்கூடும்.

சந்திரிக்கா காலம், புலிகள் காலம், அண்மைய புதிய அரசியலமைப்பு என சகல காலங்களிலும் தொடர்தோல்விகளை பெற்றமை உதாரணங்களோடு உள்ள வெளிப்படை ஆகும்.

ஆனால் மகிந்த தலைமை அல்லது கூட்டானது பெரும்பாலான முயற்சியளில் வெற்றிகளை, இலக்குகளை நடைமுறைப்படுத்தி இலகுவாக அடைந்துகொள்கிறது. இங்கு யுத்தம் , கொலைகள், கடத்தல்கள் என்பனவற்றை ஒருபக்கமாக வைத்துக்கொண்டு இலக்கை அடைதல் என்ற கருப்பொருளை நோக்குமிடத்து மஹிந்த தலைமை அல்லது கூட்டு மிகவும் செயற்பாடு அடைவுகளை இலகுவாக அடையும் அணி, உதாரணமாக ரணிலில் புலிகளுக்கு ஏற்பட்ட கசப்பை தனக்கு சாதகமாக்கிக்கொண்டு புலிகளுக்கே லஞ்சம் கொடுத்து ஆரம்பத்தில் மஹிந்த ஜனாதிபதியானதும், பின்னர் உலகநாடுகள் அனைத்தினதும் அழுத்தங்களை சமாளித்து இறுதிப்போரை நிகழ்த்தியமை, போரின்போது ஐநாவின், மனிதநேய முகவரகங்கள், அரசசார்பற்ற வெளிநாட்டு உதவு அமைப்புக்கள், வெளிநாட்டு ஊடகங்களை வெளியேற்றியமை அதன் பின்னர் ஐநாவின் செயலாளர்நாயகத்தை வரவேற்று அவர்களோடு உடன்படிக்கை செய்து அவர்களது முகவரகங்கள் ஊடாக போரில் பாதிக்கப்பட்டோரை மீள்கட்டமைக்க ஆரம்பித்தமை, அந்த திட்டங்களை ஜனாதிபதி செயலணி மூலம் கட்டுப்படுத்தியமை, சரணடைந்த கீழ்மட்ட புலி உறுப்பினர்களை வைத்து புனர்வாழ்வுக்கு என இரட்டை மும்மடங்கு பணத்தினை ஐரோப்பியஒன்றியம், ஐக்கியராச்சியம் என்பவற்றிடம் பெற்றுக்கொண்டு சிங்கள மக்கள், பௌத்த மகா சங்கங்களின் எதிர்ப்பையும் தாண்டி படிப்படியாக அவர்களை சமூகத்தில் இணைத்தமை, ஐநாவின் செயலாளர்நாயகத்தின் வருகையில் செய்துகொண்ட அல்லது கற்றுக்கொண்ட பாடங்கள் அறிக்கைக்கு அமைவாக அரசியல் தீர்வு நோக்கிய படிமுறையாக வடமாகாண தேர்தலை நாடாத்தியமை என பல அளவீட்டு முறையில் எண்ணிக்கையடிப்படை பல விடயங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

மஹிந்த தரப்புக்கு தமிழரின் ஆதரவு தேவையில்லை என அவர்கள் கூறினாலும் கூட எதிர்கால தேர்தல்களில் JVP ஒரு கருதத்தக்க போட்டியாளராக உருவாக்கி வருவதனால் மகிந்த தரப்புக்கு நிச்சயம் தமிழரின் ஆதரவு தேவை. அதுவும் UNP JVP ஆகிய கட்சிகள் வெறும் கட்சி வேட்பாளர்களை கட்சியை நோக்கி முன்னிறுத்தி நகருகிறார்கள் ஆனால் மஹிந்த தரப்பில் கோத்தாவின் பின் நாமல் ராஜபக்ச என்ற ஒரு வலுவான குடும்பத்தேவை அவர்களுக்கு உள்ளது எனவே மஹிந்தராஜபக்ஷ கூட்டணியை தமிழர்கள் தங்களுக்கான அர்ப்பணிப்புள்ள தமிழ்த் அரசியல்தலைமைகளூடாக தமிழருக்குரிய அரசியல் சமவுரிமையை இலகுவாக பெற்றுக்கொள்ள முடியும் என்பது கணிப்பு

மஹிந்தவும் அவரது கூட்டும் சிறந்தவர்கள் நல்லவர்கள் என நியாயப்படுத்துவது இந்த எழுத்தின் நோக்கமல்ல ஆனால் அந்த கூட்டு எவ்வளவு வினைத்திறனானனது, திட்டங்கங்களில் எத்தனை வீதத்தை நடைமுறைப்படுத்தினார்கள் எவ்வளவு விரைவாக நடைமுறைக்கு கொண்டுவந்தார்கள் அடைவுமட்டம் போன்றவற்றை தெளிவுபடுத்துவதே ஒரே நோக்கமாகும்.

மேற்கூறிய நோக்கத்தை அடிப்படையாக வைத்து தமிழரசியல் சிக்கல்களை பிரச்சனைகளை ஏன் அவர்களிடம், அவர்கள் மூலம் இலகுவாக பெற்றுக்கொள்ள முடியும் என்பதை இந்த கட்டுரை முடிந்தளவில் ஆராய்கிறது. இங்கு வெற்றியை இலகுவாக அடையும் பெற்றுகொள்ளும் ஒரு குழுமம் அல்லது நிறுவனத்திடம் வேலையை கொடுத்து அதன்மூலம் தமிழர்களது அரசியல் தேவையை வெற்றிபெற செய்வது பற்றி நாம் சிந்திக்க வேண்டும், தொலைத்த இடத்தில் தேடினால் தான் இழந்த பொருள் கிடைக்கும், சேதம் விளைவித்த நபரிடம் தான் இழப்பீடு அல்லது பரிகாரத்தை எடுத்துக்கொள்ள முடியும் அதேபோல மஹிந்த தலைமையை கூட்டை எதிர்க்கும் மேற்குலகின் அழுத்தங்களையும் இலகுவாக எமக்கு சாதகமாக பயன்படுத்தவும் முடியும் என்பது மேலே நிகழ்த்தப்பட்ட போரின் பிந்தைய அடைவுகளை உதாரணமாக கொண்ட ஒரு கணிப்பு ஆகும்.

உண்மையில் அபிவிருத்தி என்பது மஹிந்த காலத்தில் வெளிநாட்டு அழுத்தங்களை போர்க்குற்றங்களை சமாளிக்க வெளிநாட்டு மற்றும் இலங்கையின் நிதியில் பாரியளவில் நிகழ்ந்தது, ஆனால் TNAஆதரவு UNP அரசில் போரின் பிந்தைய வழமையான அடிப்படை முறைமைகள் ஊடான நிபுணத்துவ பொறிமுறை மீள்கட்டுமானங்கள் (standardized methodological reconstruction) கூட நிகழவில்லை அதேவேளை அடிப்படை அலகுகளை பிரதான இன அடையாளங்களை தெளிவாக இனங்கண்டு அவற்றை அழிப்பதனூடாக இனத்தை சிறுக சிதைத்து அழிக்கும் செயற்பாடுகள் வீரியமாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. இருந்தாலும் அந்த கட்டமைக்கபட்ட அழிப்பு நடவடிக்கைகள் மக்கள் உயர்வடைந்த அல்லது அபிவிருத்தி பெற்ற மாயை ஒன்று கடன்கள் ஊடாக அல்லது பகட்டு போலி வாழ்க்கையூடாக ஏற்படுத்தப்பட்டு மக்கள் இலகுவாக நம்பவைக்கப்பட்டு அழிக்கப்படுகிறார்கள். உதாரணமாக வீதி செப்பனிடலை TNA என்ற UNP முகவரகத்தின் தலைவரான சுமந்திரன் அபிவிருத்தி என்ற சொற்பதத்தில் அழைக்கத் தொடங்கியிருக்கிறார். ஊடகங்களும் அதன் தாற்பரியம் தெரியாமல் அதே சொற்றொடரையே பாவித்து ஏமாற்றுகிறார்கள்.

சில இடங்களில் ஒழுங்கைகளை வெறும் 100 200 மீட்டர்கள் மட்டுமே தார் ஊற்றி மீதி பின்னர் அபிவிருத்தி செய்யப்படும் எனவும் அறியக்கிடைக்கிறது, தவிர வீதி செப்பனிடல் போன்றன ஒரு அரசு தனது மக்களுக்கு செய்யவேண்டிய வழமையான சாதாரண கடமைகளில் ஒன்றாகும். ஆனால் அதையே UNP TNA கூட்டரசு அபிவிருத்தியாக காட்டி நிற்கிறது அப்படிப்பார்த்தால் மஹிந்த காலத்து புகையிரத மீள் கட்டுமானம், பெருந்தெருக்களின் புனரமைப்பு போன்றவற்றை எவ்வாறு அழைப்பது?

மஹிந்த காலத்து பெறுகைகள் அடைவுகள் அனைத்தும் கநதியானவை நீள அகல கால நிலைபேறு பரிமாணம் கொண்டவை.

UNP ஆட்சியில் அவ்வாறு அல்ல ஒரு தந்தை தன்குடும்பத்துக்கு வழங்கவேண்டிய மூன்றுவேளை உணவையும் அபிவிருத்தி என்ற சொல்லாடலில் அடக்குகிறார்கள், தாங்கள் செய்யவேண்டிய மக்களுக்கான சாதாரண கடமையை எங்களுக்கு மேலதிக ஆடம்பர விடயமாக காண்பிக்கிறார்கள்.

உங்கள் குடும்பத்தில் ஒருவர் இறந்திருந்தால் அவரை நினைத்திக்கொண்டு வாழ்வை அல்லது பிள்ளைகளின் கல்வியை திருமணத்தை பிறந்தநாளை சாமத்திய வீட்டு கொண்டாட்டங்களை செய்யாமலிருப்பதில்லை, அதுபோலவே முள்ளிவாய்க்காலை சொல்லி மிகுதி காலங்களை தோற்றுப்போகும் குழுவான அல்லது ராசி இல்லாத குழுமமான UNPயிடம் மீள ஒப்படைக்காமல், மாயையில் போலி வாகுறுதிகளில் தொலைக்காமல் எப்போதும் வெற்றிபெறும் மகிந்த குழுமத்தில் ஒருமுறை முயன்று பார்ப்பதில் தவறெதுமில்லை ஆனால் எவ்வகையான எங்களுக்கான கோரிக்கையை யாரூடாக வைக்கிறோம் என்பதிலும் கேள்வி அடங்கி உள்ளது அத்தோடு அழித்த ஒருவனூடாக மீள்கட்டுமானத்தை மறுவாழ்வை பரிகாரத்தை செய்யவைப்பதும் செய்விப்பதும் ஒருவகை வீரமும் இறுதிப்போரில் உயிரீர்ந்த மக்களின் ஆன்ம சாந்திக்கு நாங்கள் செய்யும் கைமாறும் ஆகும்.

சர்வதேசம் ஒருபோதும் தீர்வை பெற்றுதரப்போவதில்லை, போர்க்காலத்தில் மக்களை கூட காப்பாற்றாமல் விட்டோடிய சர்வதேசம் அரசுக்கு எதிராக இனிமேலும் எதையும் செய்யாது சர்வதேசத்துக்கு இசைவான UNPஐ எப்படியாவது மீள் கொண்டுவருவது மட்டுமே அவர்களுக்கு ஒரே இலக்கு அது தவிர ஒரு பட்டம் அல்லது விமானம் பறக்க எதிர் காற்று மிக அவசியமாகும் அத்தோடு இயந்திர பொறிமுறையில் எதிரெதிர் திசைகளில் பற்கள் கொண்ட சக்கரங்கள் முட்டி மோதிக்கொண்டு சுழல்வதால் தான் அதிக விரைவான விசை கொண்ட வெளியீடு கூட கிடைக்கிறது.

இந்தக்கட்டுரை பிரதானமாக "வெற்றி பெற்றுத்தரும் குதிரை"யிடம் எங்கள் வேலையை செய்விக்கலாமா அல்லது எவ்வளவு விரைவாக ஓடினாலும் "இறுதியில் தோற்றுப்போகும் குதிரை"யிடம் நாம் தொடர்ந்து வேலையை ஒப்படைத்து தொடர்ந்து தோற்றுப்போக வேண்டுமா என்பதை ஆராய விளக்க முற்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com