Monday, October 28, 2019

எவனோ ஒருவனை சிம்மாசனத்தில் அமர்த்துவதற்காக அப்பாவிகளை பாடையேற்ற தயாராகும் குண்டுத்ததாக்குதல்கள். பீமன்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை நற்பெட்டிமுனைப் பிரதேசத்தில் சில ஆயுததாரிகளின் நடமாட்டம் காணப்படுவதாக பாதுகாப்புத் தரப்பினருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பிரகாரம் பிரதேசத்திற்குச் சென்ற படையினரால் குறித்த நபர்களை கைது செய்ய முடியாது போயுள்ளது.

ஆயுததாரிகளின் நடமாட்டம் தொடர்பான தகவல் போலியானது என்று எடுத்துக்கொள்வதற்கு இல்லை. காரணம் ஆயுததாரிகள் பாதையால் சென்ற நாவிதன்வெளிப் பிரதேசத்தைச் சேர்ந்த முச்சக்கரவண்டி ஓட்டுனர் ஒருவரை தாக்கியுள்ளனர். தாக்கப்பட்ட நபர் கல்முனைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இது இவ்வாறிருக்க இன்று காலை தெருவோரத்தில் வெடிகுண்டு ஒன்றை அவதானித்த நபர் ஒருவர் பாதுகாப்பு தரப்பிரனருக்கு அறிவித்ததை தொடர்ந்து குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினரால் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதுடன், இடம்பெறவிருந்த அனர்த்தம் ஓரளவிற்கு தடுக்கப்பட்டுள்ளது எனலாம்.

யார் இந்த ஆயுததாரிகள்? இவர்களது நோக்கம் என்னவாக இருந்திருக்கவேண்டும் என்பது இங்கு தெட்டத்தெளிவானது. யார் என்ற கேள்விக்கு பதிலை நேரடியாக கூறுவதானால் அவர்கள் முஸ்லிம்கள். இஸ்லாமிய பயங்கரவாதிகள் என்று குறிப்பிட்டுவிட்டால் குய்யா முய்யா என்று ஒரு கூட்டம் வரும். அவர்களை பற்றிய அச்சத்தில் அவ்வாறு குறிப்பிடுவதை தவிர்க்கவில்லை. காரணம் இது இஸ்லாமிய பயங்கரவாத நோக்கம் கொண்ட கூட்டம் அல்ல. இவர்கள் அரசியல்பயங்கரவாதிகள். ஏதோ ஒரு தரப்பை வெல்ல வைப்பதற்காக அல்லது தோற்கடிப்பதற்காக நாட்டில் இரத்த ஆறினை ஓடவைக்க முனையும் வெறும் வன்செயல் மீது காதல்கொண்ட கூலிப்படைகள். இவர்களுக்கு இஸ்லாத்தின் மீதோ அன்றில் இஸ்லாமிய மக்கள் மீதோ எவ்வித கருணையும் கிடையாது. மொத்தத்தில் ஏவலாளிகள்.

நடைபெறவிருக்கின்ற தேர்தல் வெற்றி-தோல்வியை தமிழ், முஸ்லிம், சிங்கள இனவாதிகளின் வாக்குகளே தீர்மானிக்கப்போகின்றது. குறித்த இனவாதிகள் வேட்பாளர்களின் தாராதரம் அவர்களின் தூநோக்கு சிந்தனை, வினைத்திறன், நேர்மை, அர்பணிப்பு என்பவற்றை அடிப்படையாக கொண்டு வேட்பாளரை தெரிவு செய்யப்போவதில்லை, மாறாக அவர்களை ஆட்டிப்படைக்கின்ற இனவாதபேயே வேட்பாளரை தெரிவு செய்யப்போகின்றது. அந்த அடிப்படையில் சிங்கள இனவாதிகள் தனது இனத்திற்கு மிகவும் விசுவாசமானவன் அல்லது இனத்தின் பாதுகாவலன் என கருதுகின்றவனை தெரிவு செய்கின்ற அதேநேரம்; தமிழ் , முஸ்லிம் இனவாதிகள் தங்களது இனத்திற்கு நன்மை செய்யக்கூடியவனா என்ற விடயத்தை ஆராய்வதை விடுத்து இனத்திற்கு எதிரானவன் என கருதுகின்றவவனை தோற்கடிப்பதில் கவனம் செலுத்தப்போகின்றனர்.

எனவே இந்த இனவாதப்பேயை உருவேற்றுவதற்காக இலங்கையின் நாலா பக்கங்களிலும் இனக்குழுமங்களிடையே மோதல்களை உருவாக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளில் ஒருபகுதியே நற்பெட்டிமுனையில் கண்டெடுக்கப்பட்டுள்ள குண்டாகும். நற்பெட்டிமுனையென்பது நான்கு பக்கங்களும் தமிழ் கிராமங்களால் சூழப்பட்ட தமிழ்-முஸ்லிம் கிராமமாகும். கிழக்கில் இடம்பெற்ற தமிழ்-முஸ்லிம் கலவரங்களை எடுத்துநோக்குகையில் தமிழ்-முஸ்லிம் கிராமமான நற்பெட்டிமுனையில் கலவரங்கள் பெரிதாக இடம்பெறவில்லை என்பதும் முடிந்தளவு இக்கிராமத்து மக்கள் மிகவும் உறவாடி வாழ்ந்திருக்கின்றார்கள் என்பதும் வரலாற்றில் பதிவாகியுள்ளது.

இந்நிலையில் குறித்த குண்டுச்சம்பவத்துடன் தொடர்புடைய நபர்கள் தொடர்பாக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முஸ்லிம் சமூகம் இன்று நிர்ப்பந்திக்கப்படுகின்றது. அச்சமூகம் தனது இக்கடமையிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ளுமாகவிருந்தால் கிழக்கில் இரத்த ஆற்றில் இருசமூகங்களும் முக்குளிக்கவேண்டிவரும் என்பது தவிர்க்க முடியாதது.

முஸ்லிம் சமூகத்தை பொறுத்தவரை தமது சமூகத்தில் எந்த காடைத்தனம் இடம்பெற்றாலும் முஸ்லிம் நாமத்தை கொண்டுள்ளவன் என்ற ஒரேகாரணத்திற்காக காடையர்களை அது காப்பாற்றுகின்றது. ஆனால் காடையர்களுக்கு அந்த சமூகத்தின் மீது அக்கறை இல்லை என்பதையும் அவர்கள் வெறும் கூலிப்படைகள் , கொந்தராத்துக்காரார்கள் என்பதையும் முஸ்லிம்கள் உணர்ந்து கொள்ளவேண்டும்.

எனவே இன்று இந்த நாட்டில் யாருக்கு ஒரு வன்செயல் தேவைப்படுகின்றது? இதனால் யார் எவ்வாறு பயன்பெறப்போகின்றார்கள் என்பதை நன்றாக யோசித்தறிந்த ஒவ்வொருவரும் கூலிப்படைகளை இனம்காண அர்பணிப்புடன் செயற்பட்டு எதிர்காலத்தில் இந்தநாட்டில் ஒரு துளி இரத்தம்கூட சிந்துவதற்கு வழிவிடக்கூடாது என்பதே இந்நாட்டில் அமைதியாக வாழ விரும்புகின்ற மக்களின் எதிர்பார்ப்பாகவுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com