Thursday, August 8, 2019

பிரிடிஸ் கவுன்சில் ஆதரவுடன் தொழில்பயிற்சி அதிகாரசபையும் (VTA)முஸ்லிம் எய்ட் சிறிலங்கா அமைப்பும் கைகோர்க்கின்றன

முஸ்லிம் எய்ட் நிறுவனம் இலங்கை பிரிடிஸ் கவுன்சில் அமைப்பின் ஆதரவுடன் இலங்கை தொழில்பயிற்சி அதிகார சபையுடன் (Vocational Training Authority (VTA) of Sri Lanka) இணைந்து இளைஞர் சமூகமயமாக்கம் (Youth Community Resilience Programme) நிகழ்ச்சித் திட்டம் ஒன்றினை முன்னெடுத்து வருகின்றது. அனுராதபுரம், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. முஸ்லிம் எய்ட் உம் தொழில்பயிற்சி அதிகாரசபையும் புரிந்துணர்வு அடிப்படையில் இணைந்து மேற்கொள்ளும் இத்திட்டத்தின் கீழ் மேற்படி 03 மாவட்டங்களையும் சேர்ந்த பயிற்சி நிலையங்களில் பயிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர்களுக்கு, பிரிடிஸ் கவுன்சிலின் முன்மாதிரி திட்டமான அக்டிவ் சிடிசன் சட்டகத்தின் கீழ் பயிற்சியளிக்கப்படுகின்றது. இத்திட்டம் 2019 ஏப்ரல் மாதம் ஆரம்பிக்கப்பட்டது.

2013ம் ஆண்டு தொடக்கம் முஸ்லிம் எய்ட் பிரிடிஸ் கவுன்சில் நிறுவனத்தின் பங்காளர் அமைப்பாகச் செயற்பட்டு வருகின்றது. உலகலவில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற, அக்டிவ் சிட்டிசன் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் இளைஞர்களைப் போதனையூட்டிப் பயற்றுவிக்கும் திட்டத்தினை நடைமுறைப்படுத்தும் பங்காளர் அமைப்புகளில் முஸ்லிம் எய்ட் நிறுவனமும் முன்னணிப்பாத்திரம் வகித்தது. இளைஞர்கள் தாம் வாழும் கிராமங்களிலும் சமூகத்திலும் உள்ள பிரச்சனைகளுக்குத் தாமே முன்வந்து தீர்வுகாணும் வகையில் அவர்களைப் பயிற்றுவிப்பது இத்திட்டத்தின் பிரதான இலக்காகும்.

இலங்கையில், தொழில் பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணவர்கள் ஆற்றலும் திறமையும் மிக்கவர்களாக உள்ளனர். ஆனாலும் அவர்களிடம் தம்மைச் சூழலுள்ள சமூகங்களையும் சமூகப் பிரச்சனைகளையும் புரிந்து கொண்டு அவற்றைக் கையாளும் ஆற்றல் பற்றாக்குறை உள்ளவர்களாகக் காணப்படுகின்றனர். இக் குறைபாட்டினை எவ்வாறு களைய முடியும், இந்த இடைவெளியினை எவ்வாறு நிரப்ப முடியும் என்பது தொடர்பாக தொழில்பயிற்சி அதிகார சபையுடன் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடாத்தப்பட்டது. இதன் விளைவாக முஸ்லிம் எய்ட் குழுவும் தொழில்பயிற்சி அதிகாரசபையும் அக்டிவ் சிடிசன் பயிற்சி சட்டகம் மற்றும் நுட்பங்களைப் பயன்படுத்தி இம் மாணவர்களின் ஆற்றலை மேம்படுத்தும் செயற்பாட்டில் இணைந்து கொண்டனர். எவ்வாறாயினும், இந்த பயிற்சிச் சட்டகமானது முஸ்லிம் எய்ட் மற்றும் தொழில் அதிகாரசபை என்பவற்றால் வீடிஏ (VTA) பாடவிதானத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் பல தடவைகள் கவனமாக மீளாய்வு செய்யபட்டு மீள்வரைவு செய்யப்பட்டது.

பிரிடிஸ் கவுன்சில் ஆக்டிவ் சிடிசன் நிகழ்ச்சித் திட்டத்தினைப் பயன்படுத்தி, சமூக ரீதியில் ஆற்றல் மிக்கவர்களாகவும், சமூக நீதி, சமூக மயமாக்கம் மற்றும் சமூக இணக்கப்பாடு என்பவற்றை தாம் வாழும் பிரதேசங்களில் ஏற்படுத்தக் கூடியவர்களாகப் பயிற்றுவிப்பது இவ்விரண்டு நிறுவனங்களும் இணைந்து செயற்படுவதன் நோக்கமாகும்.

சமாதானம், நல்லிணக்கம் மற்றும் சமூக நீதி என்பவற்றுடன் வலுவான நிறுவனங்களைக் கட்டியெழுப்புவதை பிரதான செயற்பரப்புகளாக் கொண்ட நீடித்த அபிவிருத்தி இலக்கு 16 இன் கீழ், 'இளைஞர் சமூகமயமாக்கம்' என்ற அக்டிவ் சிடிசன் நிகழ்ச்சித்திட்டத்தின் ஊடாக, முஸ்லிம் எய்ட் இக் கருத்திட்டத்தினை உள்ளீர்த்துள்ளது.

18-29 வயதிற்கு இடைப்பட்ட 100 அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையான தொழில்நுட்ப கல்வி பயிலும் இளைஞர்களை இத்திட்டம் இலக்காகக் கொண்டுள்ளது. தொழிலில் ஈடுபடுபவர்கள், இளம் தொழில் முயற்சியாளர், எல்லாவற்றிற்கும் மேலாக நாட்டின் பிரஜைகளாக தமது பங்களிப்பினைச் செய்யும் வகையில் இவர்களுக்கு சமூக விடயங்களைக் கையாளும் திறனை வழங்குவது இத்திட்டத்தின் குறிக்கோளாகும். குறைந்த பட்சம் 6 மாத தொழில்நுட்ப பாடநெறிகளை தேசிய இளைஞர் படையணி, தொழில்நுட்பக் கல்லூரிகள், நெய்ட்டா போன்ற தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் பயில்கின்ற மாணவர்களுக்கும் மேற்படி சமூகத் திறனாற்றலை வழங்கும் என்பது இத்திட்டத்தின் நம்பிக்கையாகும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com