Sunday, August 11, 2019

'நான் சொல்வதை செய்பவன் செய்வதை சொல்பவன்' - தமிழில் பேசிய மகிந்த


யாழ்ப்பாணத்தில் நூலகம் எரிக்கப்பட்டமை உட்பட ஐக்கிய தேசியக் கட்சியினர் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கைகளே, தமிழர்களுக்கு ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தியதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

மேலும், வடக்கு(தமிழ்) மக்களுக்கு ஏற்பட்டுள்ள நம்பிக்கையீனங்களை களைய வேண்டும். தமிழர்கள் இந்த நாட்டில் அனைத்து உரிமைகளையும் பெற்று சமஉரிமைகளோடு வாழும் நிலை உருவாக்கப்பட வேண்டும் என்று தமிழில் தெரிவித்த எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, தான் தமிழ் தலைவர்களை போன்றவன் அல்ல. செய்வதைதான் சொல்வேன் – சொல்வதைத்தான் செய்வேன் எனவும் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாடு இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொழும்பு சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“ஐக்கிய தேசியக் கட்சி எங்களுக்கு எதிரான வாக்குகளை பெற்று கடந்த 2015 ஆம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றியது. அதன்பின்னர் அனைத்து விடயங்களிலும் நாடு பின்னடைவை சந்தித்துள்ளது. இதனால் இப்போது மீண்டும் நாட்டை நாங்கள் பொறுப்பெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

நாங்கள் மீண்டும் பொறுப்பெடுக்கப்போவது 2015 நாம் அவர்களிடம் கொடுத்த நாட்டை அல்ல. 2005 ஆம் ஆண்டு நாங்கள் பதவிக்கு வந்தபோது நாடு எப்படி இருந்ததோ அப்படித்தான் தற்போதும் நாடு இருக்கின்றது.

ஆம். எம்மால் முடியும். மீண்டும் இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியும். 2005 ஆம் ஆண்டு பதவிக்கு வந்தபோது முப்பது ஆண்டு கால யுத்தத்தை நிறைவுக்கு கொண்டுவர முடியும் என்று யாரும் நினைக்கவில்லை. ரயில்களில் சுதந்திரமாக கொழுப்புக்கு வரமுடியும் என்று வடக்கு மக்கள் யாரும் நினைக்கவேயில்லை. டக்ளஸ் தேவானந்தா மட்டும்தான் நம்பிக்கையுடன் வந்திருந்தார்.

கொழும்பு உட்பட பல்வேறு பகுதிகளை அபிவிருத்தி செய்ய முடியும் என்று யாரும் நம்பவில்லை. ஆனால் அத்தனையையும் எம்மால் செய்ய முடிந்தது. அதேபோன்று எதிர்காலத்திலும் எம்மால் நாட்டுக்கு தேவையான அனைத்தையும் செய்ய முடியும்.

சிங்களவர்கள், இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் என அனைத்து இன மக்களும் தங்களது வழிப்பாட்டுத் தலங்களில் அச்சமின்றி தங்களுடைய மதக் கடமைகளை நிறைவேற்றுவதற்கான சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும் – ஏற்படுத்துவோம்.

மேலும் தமிழ் தலைமைகளுடன் இணைந்து இந்த நாட்டில் சமாதானத்தையும் ஒற்றுமையையும் ஏற்படுத்துவோம்” என மேலும் தெரிவித்தார்.

C.F.N

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com