Wednesday, August 28, 2019

வறிய கிளிநொச்சி மக்களிடம் அதிக வரியை அறவிடுகின்றனர் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் நிர்வாகத்தினர்

வறிய கிளிநொச்சி மக்களிடம் அதிக வரியை அறவிடுகின்றனர் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் நிர்வாகத்தினர்.ஆதாவது இலங்கையில் வறுமையில் முதலிடத்தில் உள்ள கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகரித்த ஆதன வரியை அறவிடுவதற்கு கரைச்சி பிரதேச சபை எடுத்துள்ள தீர்மானத்திற்கு சபையின் எதிர்தரப்பு உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டம் இலங்கையில் வறுமையில் முதல் மாவட்டமாக காணப்படுகிறது.வேலையில்லாப் பிரச்சினை தலைவிரித்தாடுகிறது. இங்குள்ள மக்கள் அதிகரித்த வறுமையின் பிடிக்குள் சிக்கியுள்ளனர். இந்த நிலையில் கரைச்சி பிரதேச சபையில் எங்களது எதிர்ப்பினையும் மீறி இவ்வருடம் முதல் அறிமுகப்படுத்தியுள்ள ஆதனவரியை மக்களிடமிருந்து பத்து வீதமாக அறிவிடுவதற்கு ஆளும் கட்சியினர் எடுத்துள்ள தீர்மானம் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் மீது அதிகரித்த வரிசுமையை சுமத்துவதாகவும். எனவே மக்களின் நலன் கருதி நாம் இதனை வன்யைாக கண்டிப்பதோடு, அதனை கரைச்சி பிரதேச சபை குறைக்க வேண்டும் எனவும் இல்லை எனில் மக்களின் ஆதரவுடன் இந்த வரிச்சுமைக்கு எதிராக வீதியில் இறங்கி போராடுவோம் என்றும் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு கிளிநொச்சியோடு ஒப்பிடுகையில் வசதிவாய்ப்போடு காணப்படுகின்ற யாழ்ப்பாணம்,வவுனியா போன்ற மாவட்டங்களில் உள்ள மாநகர சபை,நகர சபைகள், பிரதேச சபைகள் என்பன மிகவும் குறைந்த வீதத்திலேயே ஆதன வரியை அறவீடு செய்கின்றனர். அந்த வகையில் யாழ் மாநகர சபையில் ஆறு வீதமும், நல்லூர் பிரதேச சபையில் நான்கு வீதமும், மன்னார் நகர சபையில் ஆறு வீதமும், கோப்பாய் பிரதேச சபையில் நான்கு வீதமும் என ஆதனவரி அறவிடப்படுகிறது. எனவே இங்கெல்லாம் இந்த வீதங்களில் வரி அறவிடப்படும் போது கரைச்சியில் மட்டும் பத்து வீதம் அறவிடப்படுவது மிக அநியாயமானது. மரத்தால் வீழ்ந்தவர்களை மாடு ஏறி மிதித்து கதையாய் பாதிக்கப்பட்டுள்ள மக்களிடம் அதிகரித்து வரியை அறிவிடுவதனை அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்தனர்.

மேலும் இது தொடர்பில் நேற்று(28-08-2019) கரைச்சி பிரதேச சபையில் அதிகரித்து ஆதனவரி தொடர்பில் விசேட சபை அமர்வுக்கு எம்மால் கோரப்பட்டு நடத்தப்பட்டது. இந்த விவாதத்தின் இறுதியில் பத்து வீதம் ஆதனவரி அறவிடுவதா இல்லை என சபையில் வாக்கெடுப்பு நடத்துமாறு நாம் கோரினோம் ஆனால் சபையின் தவிசாளர் சர்வதிகார போக்கில் சட்டத்திட்டங்களுக்கு புறம்பாக அவ்வாறு வாக்கெடுப்பு நடத்த முடியாது என பதிலளித்துவிட்டார். எனவும் தெரிவித்தனர்.

எனவே இது தொடர்பில் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அ.வேழமாலிகிதனிடம் வினவிய போது கரைச்சி பிரதேச சபையினால் பொது மக்களிடமிருந்து ஒரு வீத ஆதனவரியே அறவிடப்படுகிறது எனத் தெரிவித்தார். எனவே இதேவிடயம் தொடர்பில் கிளிநொச்சி உள்ளுராட்சி உதவி ஆணையாளர் அலுவகலத்தை தொடர்பு கொண்டு வினவிய போது ஆதன வரி கரைச்சி பிரதேச சபையினால் பத்து வீதமே அறவிடப்படுகிறது எனத் தெரிவித்தனர்.அத்தோடு கரைச்சி பிரதேச சபையின் ஆவணங்களிலும் பொது மக்களிடமிருந்து பத்து வீதம் அறவிடப்பட்டமைக்கான பதிவுகளே காணப்படுகின்றன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com