Wednesday, July 17, 2019

ஈஸ்டர் குண்டுத்தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட சகலருக்கும் மரணதண்டனை வழங்கவேண்டும் என்கிறார் மைத்திரி!

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புபட்ட அனைவருக்கும் மரணதண்டனை வழங்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பெலேந்த ரஜமகா விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள தாது கோபுரம், நூல் நிலையம் மற்றும் சமய உரை மண்டபம் ஆகியவற்றை நேற்று மகாசங்கத்தினரிடம் கையளிக்கும் புண்ணிய நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மரண தண்டனையை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சட்டமூலமொன்றைக் கொண்டு வருவதற்கு சிலர் முயற்சித்து வருகின்றனர்.

ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற அழிவுகளின் மூலம் சுமார் 300 அப்பாவி மக்களின் உயிர்களைப் பலியெடுத்த கொடூர பயங்கரவாத நடவடிக்கைக்கு வகை கூரவேண்டியவர்களுக்கு வழங்கப்படவேண்டிய தண்டனையை தவிர்ப்பதற்காக எடுக்கப்படும் முயற்சியாகவே அதைப் பார்க்கின்றேன்.

நாட்டின் குற்றவியல் சட்டத்துக்கேற்ப கொலை, இராஜ துரோகம் போன்று பயங்கரவாத நடவடிக்கைகளுக்காகக் குற்றவாளியாக இனங்காணப்பட்டால் மரணதண்டனை வழங்கப்பட வேண்டும்.

எனினும், மரணதண்டனையை நீக்குவதற்கு அரசில் உள்ள சிலர் எடுக்கின்ற முயற்சியின் மூலம் எந்தவொரு குற்றவாளிக்கும் தண்டனை வழங்க முடியாத நிலை ஏற்படும்.

மத்திய வங்கி கொள்ளைக்குப் பொறுப்பான அனைத்து வகை கூறவேண்டியவர்களும் தற்போது இனங்காணப்பட்டிருக்கின்றனர். அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நாட்டுக்கு வெளியே உள்ளவர்களுக்கு சர்வதேச பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அர்ஜுன மகேந்திரனை நாட்டுக்குக் கொண்டு வருவதற்காக சிங்கப்பூர் பிரதமருடன் தனிப்பட்ட முறையில் கலந்துரையாடினேன்.

ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட அனைவரும் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு எதிரான விசாரணைகள் தொடர்ச்சியாக இடம்பெறுகினறன. அவர்களுக்கு எதிராக தெளிவான சாட்சிகள் உள்ளன. சட்டத்துக்கு அமைவாக அவர்களுக்கு மரணதண்டனை வழங்கப்பட வேண்டும்” – என்றார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com