Sunday, July 7, 2019

அல்லாஹ் அக்பர் - வெட்கத்தைவிட்டு ரொம்ப வேதனைகளுடன் - 8 - யஹியா வாஸித்

எப்போது உருப்படும் இந்த தேசம், இனி என்ன செய்வதாய் உத்தேசம் 1983 ஜூலை. மொத்த ஸ்ரீலங்கா மக்களினதும் வாழ்க்கை, வாழ்வாதாரம் அனைத்தையும் வெட்டி குழிதோண்டி புதைத்த மாதம். அந்த நாள் எல்லா நாளையும்போல, பொல பொல எண்டுதான் எங்களுக்கும் விடிஞ்சது, ஆனா நேரம் போக போகத்தான் நாடி, நரம்பு, மூளை, முண்ணான் எல்லாம் செயல் இழக்க தொடங்கியது.

but we all are fully safe. வடகிழக்கு புள் சேப், அடி முழுக்க வடகெளக்குக்கு வெளியதான். இந்த போராட்டத்துக்கு எவ்வித சம்பந்தமுமில்லாத அனைத்து தமிழனும் அடி பட்டான். ஆனா அப்போது உண்மையான,
நேர்மையான ஊடக வியலாளர்களும், ஊடகங்களும் இருந்தன. இப்போது போல பச்சைப் பொய்களை மெருகேற்றும் ஊடகங்கள் இருக்கவில்லை.

மொனராகல மாவட்டத்தில் உள்ள தமிழர்கள் பலர் சகலதையும் தொலைத்துவிட்டு வந்து அக்கரைப்பற்று சந்தை சதுக்கத்தில் குவிந்தனர், உயிர் மட்டும்தான் அவர்களிடமிருந்தது, இன்னொரு தொகையினர் மாத்தளையில் இருந்து வந்து குவிந்தனர்.

மாத்தளை யில் இருந்து வந்த குருப் கொஞ்சம் ஹெல்த் தியாகவும், வெல்த்தியாகவும் இருந்தது. அந்த குரூப்பை மெதுவாக பெரிய கல்லாறுக்கு கொண்டு போய் விட்டோம். அப்போது பெரிய கல்லாற்றில் நம்முடன் பேஷ் to பேஷ் சண்டை புடிக்க கூடிய தமிழ் நண்பர்கள் இருந்தார்கள். நிறைய வாட்டி இந்த பெரிய கல்லாற்றான் , சின்ன கல்லாற்றான், ஒந்தாச் சிமடத்தான் எல்லாருடனும் பேஷ் to பேஷ் தடியடி சண்டை பட்டுள்ளோம். but ஒரு பிரச்சனை எண்டு வந்தா இந்த நன்றி உள்ள நாய்கள் வீட்டில் போய்தான், அவனுகள்ற அம்மாக்களிடம் தைரியமாக போய் ஒரு கவளம் சோறு வாங்கி தின்போம். யெஸ், வீ ஆர் ஓள்வேய்ஸ் பிறண்ட்ஸ். பட் வில்லன்களும் கூட. கல்முனையானையும், காரைதீவானையும், நட்பிட்டிமுனை யானையும்,பற்றி பின்னர் பேசுவோம்.

மொனராகல, பிபில ,பதுள இல இருந்து வந்தவங்க கொஞ்சம் வசதி கொரஞ்சவங்க. உண்ணக்கூட வசதி இன்றி வந்தனர். அப்போது அக்கரைப்பற்று சந்தை கிட்டத்தட்ட 345 கடைகளுடனும், ஆரோக்கியமான மனிதர்களுடனும் மூச்சுவிட்டுக்கொண்டிருந்தது. எட்டு தமிழர்களுடைய கடைகள், நாலே நாலு சிங்களவர்களுடைய கடைகள், மீதம் எல்லாமே அக்கரைப்பற்று முஸ்லிம்களுடைய கடைகள்.

தமிழண்ட ஈரக்கொலக்குள்ள, சோனிகளும், சோனவண்ட நெஞ்சுக் கூட்டுக்குள்ள தமிழனும், இந்த ரெண்டு பேருடைய உள்ளங்கைக்குள்ள ஹப்புஹாமி, உப்பாசுகாப்பு, சாரா, சரணபால என்ற நாலு சிங்கள வியாபாரிகளும் வாழ்ந்த காலமது.

நம்மளுக்கு அப்போது வயது கிட்டத்தட்ட இருபத்தி மூணு என்பதாலும், மார்க்கட்டுக்குள்ள ஒரு மதிக்கத்தக்க மொதலாளிர மகன் என்பதாலும் சனம் என்னையும் கொஞ்சம் நம்பும், நம்பினாலும் நமக்கு, குறிப்பாக எனக்கு மரியாத என்பது கொஞ்சமும் கெடையாது. எந்த நேரமும் அந்த சந்தைக்குள்ளேயே சுத்திக்கொண்டு வீணாக திரிவதாலும், படிப்பு நம்மளுக்கு சுத்த சூனியம் என்பதாலும், நம்மள சந்த மாடு, சோத்துமாடு எண்டுதான் யாவாரிகள் கூப்பிடுவாங்க.

ஆனால், இந்த நேரம் மானம் மரியாத ஒண்டும் பார்க்கேலாது. வந்திருப்பது தமிழ் அகதிகள், நானோ சோனவன்,உடனடியாக நமது தமிழ் நண்பர்கள் நாலு பேரை அழைத்து, என்னடா செய்வது என கேட்டேன். வழமை போல் தைரியமாக கையை விரித்தார்கள்.

உடனடியாக அப்புஹாமிட பெக்கேரிக்கு போய் வாப்பாட பேரை சொல்லி பாணும், பருப்பு கறியும் கொண்டு வந்து கொடுத்தேன்.

அவர்கள் சாப்பிட்டுக்கொண்டு இருக்கும் போதே அப்புஹாமிட மருமகன் ஓடி வந்து, நிலைமைகளை பார்த்துவிட்டு, முப்பத்திரண்டு சோத்துப்பார்சலும், என்ட பொக்கட்டுக்குள்ள இருநூறு ரூவா காசும் பொத்தி
வச்சிப்போட்டு போனான். மல்லி மாமா கிவ்வா, கேமக்கட்ட சல்லி எப்பாலு ( தம்பி, சாப்பாட்டுக்கு சல்லி வேணாம் எண்டு மாமா சொல்ல சொன்னார் என்றார்- ஆம்.இதுதான் இந்த நாட்டின் உண்மையான சிங்களவனின் குறுக்கு வெட்டு முகம் )

மொதலாளிர மகனோட கொஞ்சம் தமிழ் அகதிகள் வந்து நிற்காங்க, என்று அவன் போய் சோனவ மொதலாளிமாருக்கிட்ட சொல்ல , ஒவ்வொருவரும் பறந்து வந்து, இரண்டு மணிநேரத்திற்கும் முப்பத்தி ஏழாயிரம்
ரூபாயை என் கையில் ஒப்படைத்தனர். இது 1983 july 26 ஆம் திகதி அக்கரைப்பற்று சந்தை சதுக்கத்தில் நடந்த ஒரு சோக வரலாறு.

ஆறு தமிழ் நண்பர்களை ( அப்புறம் இவர்கள் எனது எதிரிகளானார்கள், நான் அவர்களது துரோகி ஆனேன், ஒவ்வொரு இயக்கமும் எனக்கு மரண தண்டனை விதித்தது, எட்டப்பனையே மிஞ்சிவிடும் ஒரு பயங்கர
எட்டப்பனாக நான் என பட்டம் சூட்டப்பட்டேன், பல நூறு முறை இவர்கள் என்னை நோக்கி திருப்பிய, அந்த நீண்ட நெடிய தடிகளால் என்னை குறி பார்க்க முடியாமல் போனது ) அழைத்து, அக்கரைப்பற்றில் இருந்து இருபத்தி நாலு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள, சங்கமான்கண்டி பிள்ளையார் கோயிலடிக்கு அவர்களை கொண்டு போய் நிறுத்துமாறு அனுப்பி வைத்தேன்.

நாளை அவர்களுக்கு இருப்பதற்கு ஏற்பாடு செய்து தருவதாகவும் கூறி அனுப்பி வைத்தோம். அடுத்தநாள் இவர்களுக்காக அக்கரைப்பற்றில் உள்ள தமிழ் பகுதிகளில் பிச்சை எடுத்தோம்.

அக்கரைப்பற்றில் இருந்த வடமாகான தமிழர்களின் கடைகளானா சண்முகநாதன் ஸ்டோர்ஸ், விநாயகன் ஸ்டோர்ஸ், மணியம் ஸ்டோர்ஸ், முதலாளிகள் -சொறி, தம்பி, வீ காண்ட் ஹெல்ப் தெம் என்று சந்தோஷமாக
சொன்னார்கள்.

அக்கரைப்பற்று பெரிய ஆஸ்பத்திரியில் அப்போது பெரிய டாக்குத்தராக இருந்த ஒரு வடமாகாண டாக்டர் ஒரு ரூபா தந்தார். அதையும் அன்பாக தரவில்லை. ஒரு ரூபாவை தூக்கி என் முகத்தில் வீசி எறிந்தார்.
மாஸா அல்லாஹ், மாஸாஹ் அல்லாஹ், மாஸாஹ் அல்லாஹ்.

என்ன இனிமையிது. அகதியாக வந்திருப்பது மொனராகல தமிழன், அவர்களுக்கு உதவுங்களேன் என்று பிச்சை எடுப்பது ஒரு கேடு கேட்ட சோனகன், பலாலி ரோட், தின்னவேலி சந்தியில எக்ஸ் புளோடற வச்சி, பதினாலு ஆமிய கொன்றது( 1983-July ), நாசமாப்போன புலி, பாவம் அவனுகளுக்கு பசியாற கொடுங்க எண்டு பாணும், சாப்பாடு பார்சலும், இருநூறு ரூவா காசும் தந்தது ஒரு சிங்களவன். என்ன இது, என்ன இது, என்ன கூத்து இது. ஊழிக்கூத்தா...ஆழிக்கூத்தா ....

ஆனா நமக்குத்தான், ரோசம், மானம் மரியாத என்பது கிஞ்சித்தும் கிடையாதே, பல படிகள் ஏறினோம். எல்லாதத்தமிழனும் பணம் தந்தான், சோத்துக்கு வழியில்லாதவன் கூட கம்பு, தடி, கத்தி, சட்டி, பானை என அள்ளித்தந்தனர். இது கிழக்கு தமிழனின் பண்பாடு.

அக்கரைப்பற்று, கோளாவிலை சேர்ந்த சீனித்தம்பி மாஸ்டரின் வீட்டுக்கு அருகில் வந்ததும், நமது தமிழ் நண்பர்கள் எல்லாம் ஜகா வாங்கிட்டானுகள்.

இது கொஞ்சம் வெசர் புடிச்ச கேஷ், இவர் ஒரு மேத்ஸ் மாஸ்டர், பணக்காரர், அக்கரைப்பற்றில் அப்போது இருந்த தமிழ் பணக்காரர்களில் ஒருவர், காணி, வயல், மாடு என ஒரு இறுமாப்பு புடிச்ச தமிழன். காசு விடயத்தில் ரொம்ப கறாரானவர், சோனவனுகளை இந்தாள்ற கண்ணுலேயே காட்ட முடியாது. மோட்ட சைக்கிளை கொண்டுவந்து, எங்கிட கடையடிய நிற்பாட்டி, டேய் சீனி தா, தேயில தா என இறங்காமல் நிண்டு கொண்டு சாமான் கேப்பார். எண்ட வாப்பாவ எல்லாம் "டேய் வெங்காயம் றாத்தல் என்ன வெல" என டேய் போட்டே கேப்பார். தில்லு. தில்லு. தில்லு, அதோடு சேர்த்து கம்பீரம்.

சீனித்தம்பி மாஸ்டர் எண்டா பள்ளிக்கூடமே நடுங்கும். டேய் காக்கா இவன உட்டுப்போட்டு மத்த எடங்களுக்கு போவம்டா, அடிச்சிப்போட்டுத்தான் வெளக்கம் கேப்பான்டா, வாடா எண்டார்கள்.

நம்மளுக்கிட்ட ஒரு கேடு கேட்ட புத்தி இருக்கு. அதான் சோனிப்புத்தி. நடக்காது என ஆராவது சொன்னா, அத நடத்தி காட்டுற. அதுதான். மயிர கட்டி மலைய இழுக்கிற.

சீனித்தம்பி மாஸ்டர்ர ஊட்டுகதவ தட்டினேன். டீ கிளாசுடன் வந்து கதவை திறந்தார். அதே டேய் ? விடயங்களை அக்குவேறு ஆணிவேறாக வெளங்க படுத்தினேன். நாங்க ஆறு பேர் வந்திருக்கம்.

டேய் நீ எப்படிடா தமிழர்களுக்காக பிச்சை எடுக்கிறாய் ? சேர் எல்லாரும் மனிசன்தானே சேர். பாவம் சேர், சீனித்தம்பி மாஸ்டர் எழும்பி என்னை கட்டி பிடித்தார். அழுதார். ஓரு செக்கன். அதை ஒரு செக்கன் என்று கூட சொல்ல முடியாது, அதையும் விட குறைவு.

அவரது வீட்டு சாமி அறைக்குள் என்னை அழைத்து சென்று, இரண்டு லைசென் துப்பாக்கிகளையும், ஆறு பெட்டி தோட்டாக்களையும் ( SG 12 AND SG 16 ) காட்டி இது உனக்குத்தான், any time you can come and collect it.

காசாக எட்டாயிரம் ரூபா எண்ணி தந்தார், நாளைக்கு நாலு றக்டருல கிடுகும், கம்பும் சங்கமங்கண்டிக்கு அனுப்புறன், இனி என்ன வேணுமெண்டாலும் என்னை கேளு, இந்த முன்னுக்கு நிற்கிற மோட்ட சைக்கிள
எடுத்துக்கு போங்க, வேல முடிஞ்சதும் கொண்டு வந்து தாங்க என்றான் அந்த அக்கரைப்பற்று தமிழன். கோளாவில் தமிழன், கிழக்கு தமிழன்.

காலங்கள் கடக்க, கன்னி கழியாத விடலைகளுல்லாம் சுடலைப் பயித்தியம் பிடித்து, அந்த மகானின் கதவுகளை எகத்தாளத்துடன் தட்டி பணம் கேட்டுள்ளனர். Go back... Go back.... இதுக்கெல்லாம் பயந்தவன் இல்ல இந்த சீனித்தம்பி என்று சொல்லி இருக்கின்றான் எனது இன்னொரு அப்பன். அவன் நம்ம ஜா(சா)தி.

ஆம். அவரை, எனது இன்னொரு அப்பாவை, நண்பனை, ரத்தத்தை பல துண்டுகளாக அறுத்து சாக்கில் கட்டி, இந்த பயித்தியம் புடித்த சூரர்கள், சூரசம்ஹாரம் ஆடி உள்ளனர்.

ஆரோக்கியமான கிழக்கு, அப்பழுக்கற்ற தமிழ், முஸ்லிம் உறவு, ஏதோ ஒரு சகதிக்குள் சிக்கிக்கொண்டு, அது பணமா, பதவியா, பகட்டா, படா டோபமா, பச்சை புள்ளைக்கும் பாவம் நினைக்காத எங்கள் உறவுகள்,, ஒரே கூட்டுக்குள் வெள்ளைகருவும், மஞ்சள் கருவுமாக வாழ்ந்த எங்கள் நண்பர்கள்,

இரவு ரெண்டரை மணிவரை அவர்கள் ஊட்டு குசினிக்குள் நாங்களும், அதிகாலை மூணரை மணிவரை எங்க ஊட்டு குசினிக்குள் அவனுகளும் குசு குசு என கதைத்துக் கொண்டு திரிந்த அந்த ஆரோக்கியமான காலம் இனி நமது அடுத்த சந்ததிக்கு கிடைக்குமா ? இந்த வடகிழக்கு அரசியல் பம்மாத்துகள் கிடைக்க விடுவார்களா ?

ஆம். துப்பரவு செய்யப் பட வேண்டும். மிக மிக நிதானமாக, ஆரோக்கியமான கரங்களால் நமது வீடுகளும், வீதிகளும் துப்பரவு செய்யப்பட வேண்டும். yes. clean wash.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com