Friday, June 7, 2019

குற்றமிழைத்தவர் இருப்பின் தம்மை சட்டத்திடம் ஒப்படைத்து, அப்பாவி மக்களை காப்பாற்றக் கோருகின்றார் பசீர் சேகுதாவூத்.

குற்றமிழைத்தவர் இருப்பின் தம்மை சட்டத்திடம் ஒப்படைத்து நாட்டையும், அப்பாவி மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட தமது சமூகத்தையும் காப்பாற்ற அவர்கள் முன்வரவேண்டும் என முன்னாள் அமைச்சர் பஸீர் சேகு தாவூத் தெரிவித்தார்.

நாட்டில் நடைபெறும் கைதுகள், பொய் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக கருத்து வெளியிட்ட அவர் மேலும் குறிப்பிடும் போது,

நிரூபியுங்கள் என்று கேட்பது தர்க்கமல்ல, ஏனெனில்; மற்றவர் அவரின் தேவைக்கேற்றவாறு நிரூபிக்கலாம்!

பொய்யை மெய்யெனவும் மெய்யை பொய்யெனவும் நிரூபித்த பல்லாயிரம் தருணங்களை உலக வரலாறெங்கணும் காண்கிறோம். இலங்கை இனப்பிரச்சினையின் உக்கிர விளைவான யுத்தம் நடைபெற்ற மூன்று தசாப்த காலத்தினுள்ளும் பல மெய்கள் பொய்களாகவும் மற்றும் பல பொய்கள் மெய்களாகவும் நிரூபிக்கப்பட்டதன் விளைவாக இரண்டு தசாப்தங்களுக்கும் மேலான காலம் சிறைவாசம் அனுபவித்தோரையும், இன்னும் அனுபவிப்போரையும் நாம் வாழுகிற நிகழ்காலத்திலேயே காணுகிறோம். இவ்வாறே; மேற்சொன்ன வடிவிலான நிரூபிப்புகளினால் சட்ட நடவடிக்கைகளில் இருந்து தப்பியிருப்போரையும் கண்டிருக்கிறோம்.

மேலும், உண்மைகள் உண்மைகள்தான் எனவும், பொய்மைகள் பொய்மைகள்தான் எனவும் நிரூபிக்கப்பட்டமையையும் வரலாற்றில் பார்க்கிறோம்.

அதிகாரத்தை கையில் வைத்திருப்போர் பொய்யை மெய்யாகச் சோடித்தும், மெய்யைப் பொய்யாகச் சோடித்தும் நிரூபிப்பதில் வல்லவர்கள். ஆனால் அந்த நிரூபிப்பினால் தமது அதிகாரத்துக்கு சேதமா இல்லை இலாபமா என்று மட்டுமே அவர்கள் பார்ப்பார்கள்.

எந்தவொரு அரசியல் பிரச்சினைக்கும் நிரந்தரத் தீர்வுகளை இலகுவில் கண்டடைந்தமையை எங்கணும் காணக்கிடைக்கவில்லை. தீர்வுகள் மேலும் பிரச்சினைகளை ஆழப்படுத்தியிருக்கும் வரலாற்றைப் பரவலாகக் பார்க்கக்கிடைக்கிறது.எமது இனப்பிரச்சினைக்கான முதலாவது தீர்வு முயற்சியான திம்பு பேச்சுவார்த்தை முதற்கொண்டு நடுவில் நடந்த இந்திய- இலங்கை ஒப்பந்தம் மற்றும் நோர்வே மத்தியத்தத்தில் நடந்த பேச்சுவார்த்தை உட்பட இறுதியில் யுத்தத்தில் இராணுவ வெற்றி ஈறாக இவை எவையும் இனப்பிரச்சினையைத் தீர்த்துவைக்கவில்லை. மாறாக; இவ்வகைத் தீர்வு முயற்சிகள் புதிய பிரச்சினைகளை தோற்றுவித்திருப்பதைக் கண்டதுதான் நமது அனுபவமாகும்.

கடந்த உயிர்த்த ஞாயிறு அன்று செய்யப்பட்ட அப்பாவி மக்கள் மீதான குரூர தற்கொலைக் குண்டுத் தாக்குதல் பயங்கரவாதத்தின் தாக்குதல்தான். ஆனால்; இத்தாக்குதலை பிரச்சினையாகப் பார்த்தால் அது இலங்கையில் புதிய வடிவில் நிகழும் சர்வதேச அரசியல் பிரச்சினையின் தொடக்கமும்தான் என்பதை கவனத்தில் எடுக்கவேண்டும்.

பெரும் பிரச்சினை என்பது அரசியல் என்ற வரையறைக்குள் வந்துவிட்டால் அதுவும் இன அல்லது மதக்குரோதத்தை முன்னிறுத்திய அரசியல் என்று காட்டப்பட்டுவிட்டால்- நிரூபியுங்கள் என்று எதிரிகளைப் பார்த்தோ அல்லது விசாரணையாளர்களை நோக்கியோ சவால் விடுவது அல்லது வேண்டுவது ஆரோக்கியமானதல்ல. நாம் நிரபராதி என்று நிரூபிப்பதே பாதுகாப்பானது. ஆனால், தர்க்க ரீதியாக நம்மை நாமே நிரபராதி என்று நிரூபிப்பது எவ்வாறு என்பது இன்னொரு பெரிய பிரச்சினையாகும். இப்புதிய பிரச்சினை வேறொரு அரசியல் முகத்தை காட்சிப்படுத்தவும் கூடும். நிரூபிக்கவேண்டியுள்ளவர்கள் சிங்கள சிவில் புத்திஜீவி சமூகத்திடம் தம்மை ஆதாரங்களோடு நிரபராதி என்று நிரூபித்து அவர்களை சிங்களப் பொதுமக்களிடம் நிரூபணத்தைக் கொண்டு செல்லும் கடமையை ஒப்படைக்கவேண்டும்.

விடுதலை என்பது சில தனிநபர்களுக்கானதல்ல, அது இந்த நாட்டுக்குரியது என்பதை, எழுந்து தலைவிரித்து ஆடுகிற இந்தப் புதிய பிரச்சினைகளின் பரிமாணத்தையும் பரிணாமத்தையும் புரிந்துகொள்கிற வல்லமை சிங்கள புத்திஜீவி சமூகத்துக்கு உண்டு.எனவே இவர்கள் இதனைச் செய்ய முன்வருவார்கள்.

இலங்கை இயற்கையாகவே நடுக்கடலுக்குள் இருக்கும் நாடு. இதனைக் கடலால் சூழப்பட்ட நாடு என்று வேறு விதமாகவும், அழகாக இதனைத் தீவு என இன்னொரு விதமாகவும் அழைக்கின்றனர்.

கேந்திர முக்கியத்துவம் மிக்க இடத்தில் நாடு அமைந்திருக்கிறது என்பதனால் பூகோள அரசியல் மேலாதிக்கப் போட்டியில் இறங்கியிருக்கிற வல்லாதிக்க நாடுகளின் கூர்மையான பார்வையின் கீழ் இந்நாடு கண்காணிக்கப்படுகிறது என்பதை "இது எமக்கு மட்டும் சொந்தமான உலகிலுள்ள ஒரேயொரு சிங்கள பௌத்த நாடு" என்று ஆர்ப்பரிக்கிறவர்கள் புரிந்து கொள்வதோடு, நாடு நடுக்கடலில் இருக்கிறது என்பதையும் உணர்ந்து கொள்வது காலத்தின் தேவையாகும்.நாட்டைக் காப்பாற்றுவதற்கு நாலு தரப்பு மக்களின் கரங்களும் இணைந்த பலம் அவசியமாகும் என்பதை மறுப்பது, இந்நாடு கலவர பூமியாக இருப்பதை விரும்பும் சக்திகளுக்கு ஆதரவான நிலைப்பாடாகும். இப்படியே போனால் இலங்கை தோல்வியடைந்த நாடாகிவிடும்.இவை போன்ற கருத்துக்களை எல்லாம் அறிந்தவர்களே மேற்சொன்ன பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த புத்திஜீவிகளாகும். இவர்களால் சாதாரண மக்களின் மனங்களுக்குள் கருத்துக்களைக் கொண்டு சேர்க்க முடியும்.

இட்டுக்கட்டி நிரூபித்துவிட்டால் பெரும்பான்மை மக்கள் நம்பிவிடுவார்களல்லவா? இதனால் முழு முஸ்லிம் சமூகமும் பாதிக்கப்பட்டுவிடுமல்லவா? என்றும் குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com