Thursday, June 27, 2019

ட்ரம்பின் இடை-நிறுத்தப்பட்ட ஈரான் மீதான தாக்குதல்கள்: மூன்றாம் உலக போருக்குப் பத்து நிமிடங்கள். Bill Van Auken

ஈரானுக்கு எதிராக அமெரிக்க விமானத் தாக்குதல்களுக்கு ட்ரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டு பின்னர் இரத்து செய்யப்பட்டதைச் சுற்றிய குழப்பமான மற்றும் ஆழ்ந்த அபாயகரமான வியாழக்கிழமை இரவு சம்பவங்கள், இறுதியில் ஒட்டுமொத்த பூமியையும் அச்சுறுத்தக் கூடிய ஒரு பேரழிவுகரமான புதிய போருக்கு இந்த உலகம் எந்தளவுக்கு நெருக்கத்தில் உள்ளது என்பதை அம்பலப்படுத்தி உள்ளது.

ட்ரம்பின் சொந்த தகவல்களின்படி, அமெரிக்க போர்க்கப்பலில் இருந்து Tomahawk ஏவுகணைகள் பறக்க இருந்த வெறும் 10 நிமிடங்களுக்கு முன்னர், அவர் ஈரானிய ஏவுகணை மற்றும் ராடார் நிலையங்கள் மீது குண்டுவீச இருந்ததை இரத்து செய்தார்.

அமெரிக்க ஜனாதிபதி, வெள்ளியன்று, பெரும்பாலும் ஒத்திசைவற்ற மற்றும் உள்ளார்ந்து ஒன்றுகொன்று முரணான ஒரு தொடர் ட்வீட் செய்திகளில், கடற்படையின் RQ-4 Global Hawk உளவுபார்ப்பு டிரோனை வியாழக்கிழமை ஈரான் சுட்டுவீழ்த்தியதற்குப் பதிலடியாக அவர் அந்த தாக்குதல்களை நடத்த உத்தரவிட்டதாக தெரிவித்தார். அந்த டிரோன் அதன் வான் எல்லைக்குள் அத்துமீறியிருந்ததாக தெஹ்ரான் குற்றஞ்சாட்டி இருந்தது.

டிரோன் சர்வதேச கடல்பகுதியில் பறந்து கொண்டிருந்ததாகவும், அந்த ஏவுகணை தாக்குதல் "ஆத்திரமூட்டப்படாத" ஒரு தாக்குதல் என்றும் வாஷிங்டன் மறுத்துரைத்த அதேவேளையில், ஈரான் அதன் எல்லை பகுதியில் விழுந்திருந்த அந்த டிரோனின் சிதைந்த பாகங்களைக் காட்டி வெள்ளியன்று அதன் கூற்றுக்களை வலுப்படுத்தியது. அந்த டிரோனின் விலை மதிப்பு 200 மில்லியன் டாலராக மதிப்பிடப்படுகிறது.

“எத்தனை பேர் கொல்லப்படுவார்கள் என்று நான் வினவிய போது, வெவ்வேறு 3 இடங்களில் நேற்றிரவு பதிலடி கொடுக்க நாம் விறைப்பாகவும் தயாராகவும் இருந்தோம் [ட்வீட்டில் பயன்படுத்தப்பட்ட வார்த்தை cocked & loaded],” என்று இவ்வாறு ட்ரம்ப் ட்வீட் செய்திருந்தார். “அத்தாக்குதலை நான் நிறுத்துவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னர். 150 பேர், ஸார், என்பது ஒரு தளபதியின் பதிலாக இருந்தது.”


அமெரிக்க போர்கப்பலின் தாக்கும் படைப்பிரிவு [படம்: அமெரிக்க கடற்படை]

அந்தளவிலான மரண எண்ணிக்கை “ஒரு ஆளில்லா டிரோனைச் சுட்டு கொன்றதற்கு விகிதாச்சாரப்படி பொறுத்தமாக இல்லை" என்றவர் தயங்கியதாக அமெரிக்க ஜனாதிபதி வலியுறுத்தினார்.

ட்வீட்டரில் ஏளன அலையைத் தூண்டிவிட்ட ஓர் இராணுவ துஷ்பிரயோக வார்த்தையான அவரின் "விறைப்பான & தயாரான" (cocked & loaded) வார்த்தையாடலுக்கு அப்பாற்பட்டு, ஈரானிய மரணங்களின் விகிதாச்சார பொருத்தமற்ற எண்ணிக்கை குறித்து அவர் அக்கறை கொண்டதாக குறிப்பிடுவது நம்புவதற்குரியதாக இல்லை.

ஒபாமாவின் கீழ் தொடங்கிய ஈராக் மற்றும் சிரியா மீதான அமெரிக்க போர்களை ட்ரம்ப் நிர்வாகம் தொடர்ந்தது மற்றும் தீவிரப்படுத்தியது, மொசூல் மற்றும் ரக்கா நகரங்களைத் தரைமட்டமாக்கிய இரத்தந்தோய்ந்த முற்றுகைகளையும், மொத்தம் இரண்டு அமெரிக்க உயிர்களைப் பறித்த அப்போர்களில் அமெரிக்க குண்டுகள் மற்றும் தோட்டாக்களால் பத்தாயிரக் கணக்கானவர்கள் கொல்லப்பட்டதையும் அது நடாத்தியது.

அனைத்திற்கும் மேலாக, அது சவுதி முடியாட்சியை அடிமுதல் தலை வரை ஆயுதமயப்படுத்தியதுடன், அரபு உலகிலேயே மிகவும் வறிய நாடான யேமனுக்கு எதிரான அண்மித்து இனப்படுகொலைக்கு நிகரான ஒரு போரில் சவுதிக்கு நேரடியான இராணுவ உதவி மற்றும் தளவாடங்களை வழங்கியது. யேமனில் சுமார் 80,000 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்பதுடன், மில்லியன் கணக்கானவர்கள் பட்டினியின் விளிம்பில் விடப்பட்டிருக்கிறார்கள்.

விகிதாச்சார பொருத்தமின்மை என்ற இந்த கருத்துரு, அண்மித்து மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் முதலாம் வளைகுடா போரில் இருந்து மத்திய கிழக்கில் அமெரிக்க ஏகாதிபத்தியம் தொடுத்த எந்தவொரு இரத்தந்தோய்ந்த மோதலிலும் நடைமுறைப்படுத்தப் பட்டிருக்கவில்லை.

ஈரானிய உயிரிழப்புகளைக் குறித்த எந்த அக்கறையிலிருந்தும் ட்ரம்ப் அந்த விமானத் தாக்குதல்களை நிறுத்தவில்லை, மாறாக அவரின் இராணுவ ஆலோசகர்கள் ஈரானில் மரண எண்ணிக்கை தவிர்க்கவியலாது பதிலடிக்கு இட்டுச் சென்று அதில் இன்னும் அதிக அமெரிக்க துருப்புகள் கொல்லப்படலாம் மற்றும் இராணுவ தீவிரப்பாடு சுழற்சி அடைந்து, ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் செய்த அமெரிக்க தலையீடுகளை ஒப்பீட்டளவில் சிறுபிள்ளைத்தனமான விளையாட்டாக ஆகிவிடுமளவிற்கான ஒரு முழு அளவிலான போரில் போய் முடிந்துவிடும் என்று அவரை எச்சரித்தனர் என்பதாலேயே அவர் நிறுத்தினார்.

ஏற்கனவே அப்பிராந்தியத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ள 20,000 துருப்புகளுடன் இணைவதற்கு, கூடுதலாக 2,500 துருப்புகளும், அணுஆயுத தகைமை கொண்ட B-52s தலைமையில் ஒரு கப்பற்படைப்பிரிவு மற்றும் ஒரு குண்டுவீசும் தாக்கும் படைப்பிரிவும் அமெரிக்கா அனுப்பி உள்ளது என்றாலும், அமெரிக்கா இன்னமும் அதுபோன்றவொரு போருக்குத் தயாராகவில்லை.

தயாரிப்புகள் இனி செய்யப்படும். ட்ரம்ப் வெள்ளியன்று ட்வீட் செய்ததைப் போல, “எனக்கு அவசரமில்லை, நமது இராணுவம் புதிதாக, புறப்படுவதற்குத் தயாராக, உலகில் தலைசிறந்ததாக ஆகும் வரையில் மீளகட்டமைக்கப்படும். தடைகள் நிறைய இருக்கின்றன மற்றும் நேற்றிரவு கூடுதலாக இன்னும் சேர்ந்திருந்தது.”

ஈரானிய அரசை ஒரு புதிய சுற்று பேச்சுவார்த்தைகளுக்குள் வர நிர்பந்திப்பதற்காக, ஆறு உலக சக்திகளுடனான 2015 ஈரானிய அணுசக்தி உடன்படிக்கையை உடைத்தெறிந்து, ஓராண்டுக்கு முன்னர் அது திணித்த தடையாணைகளை அது பயன்படுத்த விரும்புகிறது என்பதை வெள்ளை மாளிகை திரும்ப திரும்ப சுட்டிக்காட்டி உள்ளது.

அதுபோன்ற பேச்சுவார்த்தைகளில் வாஷிங்டன் என்ன கோரி வருகிறது என்றால், ஈரான் முற்றிலுமாக பொதுதேவைகளுக்கான அதன் அணுசக்தி திட்டங்களையும் கூட நிறுத்திக் கொள்ள வேண்டும், அதன் கண்டம்விட்டு கண்டம் பாயும் தொலைதூர ஏவுகணைகளை ஒப்படைத்து விட வேண்டும், பரந்த மத்திய கிழக்கில் அனைத்து தொடர்புகள் மற்றும் செல்வாக்கைத் துண்டித்துக் கொள்ள வேண்டும் என்பதாகும். சாரத்தில், 40 ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் புரட்சியால் தூக்கியெறியப்பட்ட அமெரிக்க ஆதரவிலான ஷா சர்வாதிகாரத்தில் செய்ததை விட அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் காலடியில் இன்னும் அதிகமாக ஈரானை ஓர் அரை-காலனி நாடாக தரமிறக்குவதே அதன் நோக்கமாக உள்ளது.

அதுபோன்ற நோக்கங்களைச் சமாதானமான முறையில் கைவரப்பெற முடியாது; அவை தவிர்க்கவியலாமல் போருக்கு இட்டுச் செல்லும். அமெரிக்க அதிகாரிகளால் அறிவுறுத்தப்படும் "இராஜதந்திர நடவடிக்கைகள்", இரண்டாம் உலக போரை நோக்கி நாஜிக்களின் அணிவகுப்பில் அடோல்ஃப் ஹிட்லர் பயன்படுத்தியதைவிட சிறப்பானதொன்றையும் பெரும்பாலானவற்றுக்குக் குறைவின்றி இருப்பதை நினைவூட்டவில்லை.

ஈரானுக்கு எதிரான அதன் தாக்குதல் நெடுகிலும், அமெரிக்க ஏகாதிபத்தியம் மில்லியனுக்கும் அதிகமானவர்களின் உயிர்களைப் பறித்துள்ள போர்கள் மற்றும் ஆட்சி மாற்ற தலையீடுகள் மூலமாக மத்திய கிழக்கிலும் மற்றும் மத்திய ஆசியாவிலும் அது உருவாக்கிய நாசங்களைத் தலைகீழாக ஆக்க முயன்று வருகிறது. ஆனால் நிரந்தரமான அமெரிக்க கைப்பாவை ஆட்சிகளை நிறுவுவதற்கான இலக்கை எட்டுவதில் அவை பரிதாபகரமாக தோல்வி அடைந்துள்ளன. மாறாக, ஈரான், ரஷ்யா மற்றும் சீனா உட்பட அதன் போட்டியாளர்களின் செல்வாக்கு அப்பிராந்தியத்தில் அதிகரித்து வருவதில் போய் முடிந்துள்ளது.

2003 படையெடுப்பின் போது அந்நேரத்தில் ஈராக்கிய மக்கள்தொகையை விட மூன்று மடங்கு அதிகமாக மக்கள்தொகை கொண்டதும் நான்கு மடங்கு அதிக பரப்பெல்லையைக் கொண்ட ஒரு நாடான ஈரானுக்கு எதிரான ஒரு போர் என்பது தவிர்க்கவியலாமல் அந்த ஒட்டுமொத்த பிராந்தியத்தையும் உள்ளிழுக்கும். புதனன்று, இஸ்ரேல் பாதுகாப்பு படைகள், லெபனானில் ஷியா-அடிப்படையிலான இயக்கமும் மற்றும் ஈரானுடன் அணி சேர்ந்துள்ளதுமான ஹெஸ்பொல்லாவுடன் ஒரு மோதலுக்குத் தயாரிப்பு செய்ய ஆயிரக் கணக்கான துருப்புகள் ஈடுபட்ட போர் ஒத்திகைகளை நடத்தி முடித்திருந்தது.

அனைத்திற்கும் மேலாக ஈரான் மீதான ஒரு போர் தவிர்க்கவியலாமல் சீனாவுடனான அமெரிக்க மோதலைத் தீவிரப்படுத்தும். சீனா அதன் பொருளாதாரத்தைத் தாங்கிப் பிடித்துள்ள மத்திய கிழக்கு எண்ணெய் ஆதாரங்களை அமெரிக்க ஏகாதிபத்திய இறுக்கிப்பிடிக்கு விட்டுக்கொடுக்க முடியாது என்பதுடன், அது யுரேஷியாவின் ஒருங்கிணைப்பை ஆழப்படுத்துவதற்கான அதன் ஒரே பாதை, ஒரே இணைப்பு மூலோபாயத்தில் ஈரானை ஒரு மூலோபாய இணைப்பாக காண்கிறது.

அமெரிக்க இராணுவம், அமெரிக்கா மற்றும் அதன் "வல்லரசு" போட்டியாளர்கள் சம்பந்தப்படும் ஒரு "சிந்தக்கவியலா" மோதலுக்குத் தயாரிப்பு செய்து வருகிறது என்பதற்கான ஒரு தவறுக்கிடமற்ற குறிப்பாக, பென்டகனின் தலைமை தளபதி 14 ஆண்டுகளில் முதல்முறையாக 3 அணுசக்தி நடவடிக்கைகளுக்கான ஒரு புதிய கொள்கை விளக்க அறிக்கையைக் கடந்த வாரம் வெளியிட்டார். அது "தீர்க்ககரமான விளைவுகளையும் மற்றும் மூலோபாய ஸ்திரப்பாட்டை மீளமைப்பதற்குமான நிலைமைகளை" உருவாக்குவதற்கு ஒரு வழிவகையாகவும் மற்றும் "அமெரிக்கா, அதன் கூட்டாளிகள், மற்றும் பங்காளிகளும் அடையக்கூடிய மிகச்சிறந்த நிபந்தனைகளுடன்" மோதல்களை முடிவுக்குக் கொண்டு வரவும் அணுஆயுத பிரயோகத்தை ஆர்ப்பரிக்கிறது.

இந்த ஆவணம் பனிப்போர் கால தத்துவவியலாளர் ஹெர்மன் கானை மேற்கோளிடுகிறது, இவர் 1960 களில் "ஜெயிக்கக்கூடிய" அணுஆயுத போரை எடுத்துக்காட்டியதுடன், ஸ்டான்லெ குப்ரிக் திரைப்படமான "Dr. Strangelove” க்கான உட்தூண்டுதல்களில் ஒன்றை வழங்கியவர் ஆவார்.

அமெரிக்காவிலும் மற்றும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கம் முகங்கொடுக்கும் மிகப்பெரும் அபாயம் என்னவென்றால், விரிவாக்கப்பட்டு வரும் போர் தயாரிப்புகளும் மற்றும் மக்களுக்கு என்ன தெரியுமோ அதை விட அதிகமாக பேரழிவுகரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய முடிவுகளும் ஒட்டுமொத்தமாக அவர்களின் முதுகுக்குப் பின்னால் தீர்மானிக்கப்பட்டு வருகின்றன.

இப்போதிருக்கும் அரசியல் ஸ்தாபகத்திற்குள் ஏகாதிபத்திய போருக்கு எந்த எதிர்ப்பும் இல்லை. ட்ரம்பின் ஈரானிய கொள்கை மீது அவருடனான ஜனநாயகக் கட்சியினரின் கருத்துவேறுபாடுகள் முற்றிலும் தந்திரோபாய இயல்பைக் கொண்டுள்ளன, ஒபாமா அவரினது சொந்த தண்டிக்கும் வகையிலான தடையாணைகள் மற்றும் போர் அச்சுறுத்தல்களைக் கொண்டு வழி வகுத்துத் தந்துள்ளார். வியட்நாம்-கால போர்-எதிர்ப்பு போராட்டங்களில் அவற்றின் மூலவேர்களைக் கொண்ட போலி-இடது அமைப்புளைப் பொறுத்த வரையில், அவை அனைத்தும் "மனித உரிமைகள்" என்ற பெயரில் அமெரிக்க ஆக்ரோஷத்தை ஊக்குவித்தவாறு, அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் ஏற்பாடுகள் செய்து கொண்டுவிட்டன.

தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான தலையீட்டின் மூலமாக மட்டுமே ஒரு புதிய மற்றும் பேரழிவுகரமான போரை நிறுத்த முடியும். இதற்கு தொழிலாளர்களும், மாணவர்களும், இளைஞர்களும் போர் சம்பந்தமான கேள்வியை ஆளும் வர்க்கம் மற்றும் அதன் அரசியல் பிரதிநிதிகளின் கரங்களில் இருந்து எடுத்து, அதை அமெரிக்காவிலும் ஒவ்வொரு நாட்டிலும் தீவிரமடைந்து வரும் வர்க்க போராட்டத்தின் மத்திய குவிமையமாக ஆக்கி, நனவுபூர்வமான அரசியல் நடவடிக்கை எடுத்தாக வேண்டும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com