Wednesday, May 8, 2019

அரசாங்கத்தின் இரண்டு கோரிக்கைகள் ஜனாதிபதியால் நிராகரிப்பு!

ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தால் அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் விடுக்கப்பட்ட இரண்டு கோரிக்கைகள் ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டுள்ளன.

முதலாவது கோரிக்கை, சட்டம் ஒழுங்கு அமைச்சை முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவுக்கு வழங்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கை. இந்தக் கோரிக்கையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐ.தே.க. உயர்மட்டத் தூதுக்குழு ஒன்று ஜனாதிபதியை நேரில் சந்தித்து விடுத்திருந்தது. ஆனால் ஜனாதிபதி அவர்களது கோரிக்கையை நிராகரித்துவிட்டார்.

சரத் பொன்சேகவை சட்டம் ஒழுங்கு அமைச்சராக நியமித்தால் அது பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என ஐ.தே.க. தூதுக்குழவிடம் ஜனாதிபதி எடுத்துக் கூறியிருக்கிறார்.

சரத் பொன்சேகவை சட்டம் ஒழுங்க அமைச்சராக நியமித்தால் அதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து பொதுமக்கள் மத்தியிலும் அச்சம் நிலவி வந்தது. ஏனெனில் அவர் அந்தப் பதவிக்கு வந்தால் தமது பரம எதிரிகளாகக் கருதும் ராஜபக்சாக்களையும் இதர எதிர்க்கட்சியினரையும் பழிவாங்குவதற்காகவே அந்தப் பதவியைப் பயன்படுத்துவார் என்பதே பெரும்பாலானோரின் கருத்தாக இருக்கின்றது.

கடந்த ஆண்டு ஒக்ரோபர் 26 ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட அரசியல் குழப்பநிலைக்குப் பின்னர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசு மீண்டும் பதவியேற்ற பொழுதும் சரத் பொன்சேகவுக்கு அமைச்சுப் பதவி ஒன்று வழங்க ரணில் விரும்பினார். அப்பொழுதும் ஜனாதிபதி அவரது விருப்பத்தை நிராகரித்துவிட்டார்.

இப்பொழுது ஏப்ரல் 21 ஆம் திகதி ஈஸ்டர் தினத்தன்று பயங்கரவாதிகள் நடத்திய குண்டுத் தாக்குதலைப் பயன்படுத்தி சரத் பொன்சேகவுக்கு சட்டம் ஒழுங்கு அமைச்சைப் பெற்றுக்கொடுக்க ரணில் எடுத்த முயற்சியையும் ஜனாதிபதி அடியோடு நிராகரித்திருக்கிறார்.

இரண்டாவது கோரிக்கை: மின்சக்தி அமைச்சர் ரவி கருணநாயக்க தற்போது நாட்டில் உருவாகியுள்ள மின்தட்டுப்பாட்டை நீக்குவதற்கு தனியார்துறையினரிடமிருந்து 200 மெகாவாட்ஸ் மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கு அனுமரியளிக்கும்படி ஜனாதிபதியிடம் விடுத்த கோரிக்கையாகும். இதையும் ஜனாதிபதி நிராகரித்திருக்கிறார்.

இதில் முக்கியமான விடயம் என்னவெனில், இந்த மின்சாரக் கொள்வனவை கேள்விப்பத்திரம் எதுவும் கோராமல்கொள்வனவு செய்வதற்கு அமைச்சர் ரவி கருணநாயக்க திட்டமிட்டிருந்தார். கேள்வித்பத்திரம் கோராமல் மின்சாரத்தைக் கொள்வனவு செய்வதென்றால் அதன் அர்த்தம், அமைச்சருக்கு வேண்டிய ஒருவரிடமிருந்து அதிக விலைக்கு மின்சாரத்தைக் கொள்வனவு செய்யப் போகின்றார் என்பதே அர்த்தம். கேள்வித் பத்திரம் இன்றிக் கொள்வனவு செய்வது அரசாங்கத்தின் நடைமுறையல்ல என்பதைச் சுட்டிக்காட்டி ரவி கருணநாயக்கவின் கோரிக்கையையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்திருக்கிறார்.

ரவி கருணநாயக்க பாரிய இலஞ்சம் மற்றும் மோசடிகளில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு முன்னர் அவர் வகித்து வந்த நிதியமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருந்தார். அதில் ஒன்று ரணிலின் நெருங்கிய சகாவான முன்னாள் மத்திய வங்கி ஆளுநரான அர்ச்சுனா மகேந்திரனின் மத்திய வங்கி பாரிய நிதி மோசடியுடன் சம்பந்தப்பட்டதாகும். பின்னர் 2018 ஒக்ரோபர் 26 அரசியல் குழப்பத்தின் பின்னர் ரணில் மீண்டும் பிரதமராகப் பதவி ஏற்றபொழுது அவருக்கு மீண்டும் அமைச்சுப் பதவி வழங்கப்பட்டது.

ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஒருவருக்கு மீண்டும் அமைச்சுப் பதவி வழங்கியதே தவறாக இருக்கையில், அவர் கேள்விப்பத்திரம் கோராமல் மின்சாரம் கொள்வனவு செய்வதற்கு அனுமதி அளிப்பது அவர் மேலும் ஊழல் செய்வதற்கு இடமளிப்பதாக அமைந்துவிடும் எனக் கருதியே ஜனாதிபதி அவரது கோரிக்கையை நிராகரித்ததாகக் கூறப்படுகிறது.

ரணிலின் அரசாங்கத்தில் ரவி கருணநாயக்க மட்டுமின்றி, குற்றச்சாட்டுக் காரணமாக முன்னர் அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருந்த திலக் மாரப்பனவுக்கும் பின்னர் அமைச்சுப் பதவி வழங்கப்பட்டது. அதுவும் மிக முக்கியமான வெளிவிவகார அமைச்சர் பதவி. அதுமாத்திரமில்லாமல், நாட்டை 30 வருடங்களாக நாசமாக்கிய பயங்கரவாதப் புலிகள் அமைப்பை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும் எனப் பகிரங்கமாகப் பேசி, அதன் காரணமாகக் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியதால் பதவியை ராஜினாமா செய்திருந்த மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கும் மீண்டும் அமைச்சுப் பதவி வழங்கப்பட்டிருக்கிறது.

ஒரு ரூபா களவெடுக்கும் சாமானிய மனிதனைச் சிறையில் தள்ளும் இந்த அரசாங்கம், கோடி கோடியாக பணத்தை மோசடியாகப் சேர்ப்பவனையும், மோசடிகளில் ஈடுபடுபவர்களையும், நாட்டின் சட்டத்தைத் துச்சமாக மதித்துச் செயல்படுபவர்களையும் அரியாசனத்தில் ஏற்றி வேடிக்கை பார்க்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com