Saturday, May 11, 2019

கோழிகளை பாதுகாக்க நரியை விட்ட கதைதான் ஹிஸ்புல்லாவிற்கு அரசு வழங்கிய அனுமதி. சுனில் ஹந்துன்நெத்தி.

கோப் குழு தலைவர் என்ற பதவியை பயன்படுத்தி களவை பிடிப்பேன் என்கின்றார்.

கிழக்கில் இயங்கும் ஹிரா நிறுவனம் ஹிஸ்புல்லாஹ்வினது என்பதை இன்னும் அரசாங்கம் வெளிப்படையாக கூறாதது ஏன்? எதற்காக அரசாங்கம் ஹிஸ்புல்லாஹ்விற்கு அஞ்சுகின்றது, இந்த வாய்ப்பை வைத்து ஹிரா நிறுவனத்தை பல்கலைக்கழகமாக மாற்ற முயற்சிகள் எடுக்கப்படுவதாகவும் கோழிகளை பாதுகாக்க நரியை விட்டது போன்றது ஹிஸ்புல்லாஹ்விற்கு இந்த நிறுவனத்தை கொடுத்தது என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினரும் கோப் குழு தலைவருமான தோழர் சுனில் ஹந்துநெத்தி சபையில் தெரிவித்தார்.

கோப் குழுவின் தலைவர் என்ற வகையில் தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி எதிர்வரும் 21 ஆம் திகதி தொழிற்பயிற்சி அதிகாரி, முதலீட்டு சபை, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, மற்றும் தேவைப்படும் சகல நிறுவனங்களையும் வரவழைத்து இதுகுறித்து ஆராயவுள்ளேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற நாட்டின் பாதுகாப்பு நிலவரம் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தின் மூன்றாம் நாள் விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்.

"மதம் என்ற பெயரில் செய்யும் கொலைகள், பயங்கரவாதம் ஒருபோதும் மதமாக கருதப்படாது. மதம் எப்போதும் கருணை, அன்பு என்பவற்றை கூற வேண்டும்.

அடிப்படைவாதிகளின் மூலமாக மதம் வளராது. அதுபோலவே இந்த பயங்கரவாதம் எப்போதும் அதிகார வர்க்கத்தினால் வளர்க்கப்படுகின்றது. மத சுதந்திரம் என்பது ஏனைய மனித கொலைகளை நியாயப்படுத்துவதாக அமையாது. மதம் என்பது மனித சுதந்திரத்தை அதிகமாக வலியுறுத்த வேண்டும். மதம் என்ற பெயரில் மனித உரிமைகளை கட்டுப்படுத்திவிடக்கூடாது.

பெண் உரிமை, மனித உரிமைகளை அடிப்படை உரிமைகளை, சமத்துவம் என்பவற்றை மதம் பறித்துவிடக்கூடாது. ஆனால் இன்று இலங்கையில் இடம்பெற்ற தாக்குதல் மதத்தை அடிப்படையாக வைத்து மதத்தின் பெயரில் நடத்தப்பட்ட தாக்குதல் என்பது மிகத்தெளிவாக தெரிகின்றது. ஆனால் பிரதமரின் ஜனாதிபதியின் அவர்களின் வாய்களில் இருந்து இது இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதம் என இன்னமும் கூறியதாக தெரியவில்லை.

ஆனால் ஏனைய அனைவரும் அதனை ஏற்றுக்கொண்டுள்ளனர். அரச தலைவர்கள் ஏன் இதனை இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதலாக ஏற்றுகொள்ள இன்னமும் தயாரிக்கவில்லை என்பது தெரியவில்லை.
இந்த தாக்குதல் நடக்கப் போவது தெரிந்தும் அதனை கூறாது இறுதியில் இந்த தாக்குதலை ஒரு நகைப்புக்குரிய விடயமாக மாற்றிவிட்டனர். இதனால் மக்கள் கோபமடைந்துள்ளனர்.

அதேபோல் இந்த அரசாங்கம் மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்த எந்த வேலைத்திட்டங்களையும் முன்னெடுக்கவில்லை. பெண்களின் பாதுகாப்புக்கும், பள்ளிகளில் புல் வெட்டுவதற்கும் கத்திகளும் வாள்களும் வைத்துள்ளதாக சிலர் கூறுகின்றனர். அதேபோல் ஊடகங்களில் தேடுதல் நடவடிக்கைகளை காட்ட வேண்டாம் என்ற காரணிகளை கூறுகின்றனர்.

மக்கள் அச்சத்தில் உள்ளனர் என கூறுகின்றனர், அதேபோல் தான் இந்த ஆட்சியாளர்களின் பொறுப்பற்ற கருத்துகளும் அவர்களின் முகங்களையும் பார்க்கையில் மக்கள் அதிகமாக ஆத்திரமடைகின்றனர். முதலில் இவற்றை தடுக்க வேண்டும். அதேபோல் 2013 ஆம் ஆண்டு தொடக்கம் கிழக்கில் ஹிரா நிறுவனம் நடத்தப்படுகின்றது என்றால் அது யாரால் நடத்தப்படுகின்றது, அதன் சொந்தக்காரர்கள் யார்? ஏன் இந்த குற்றத்தில் ஹிஸ்புல்லாஹ்வின் பெயரை கூற ஏன் நீங்கள் அனைவரும் அஞ்சுகிண்றீர்கள்? இந்த நிறுவனத்தை ஆரம்பித்த நாள் குறித்து தெரிவிக்க முடியும் என்றால் ஏன் இந்த நிறுவனத்தின் தலைவர் ஹிஸ்புல்லாஹ்வின் பெயரை கூற தைரியம் இல்லை. கிழக்கை அவரது கட்டுப்பாட்டில் வைத்துள்ள காரணத்தினால் அவர் பெயரை கூற அரசாங்கம் விரும்பவில்லை. இந்த வாய்ப்பை வைத்து ஹிரா நிறைவனத்தை பல்கலைக்கழகமாக மாற்ற அவர்கள் முயற்சிக்கின்றனர்.

கோப் குழுவின் தலைவர் என்ற வகையில் எனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி எதிர்வரும் 21 ஆம் திகதி தொழிற்பயிற்சி அதிகாரி, முதலீட்டு சபை, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, மற்றும் தேவைப்படும் சகல நிறுவனங்களையும் வரவழைத்து இதுகுறித்து ஆராயவுள்ளேன். இந்த நிறுவனத்தை தனியார் பல்கலைக்கழகமாக மாற்றுவதாக ஜனாதிபதி கூறுகின்றார். யாருடைய தேவைக்காக இதனை செய்ய முயற்சிக்கின்றார்.

ஹிஸ்புல்லாவின் பெயரில் தனியார் பல்கலைக்கழகமாக மாற்றவா ஜனாதிபதி முயற்சித்து வருகின்றார். இந்த நிறுவனத்துக்கு கொடுக்கப்பட்ட 35 ஏக்கர் மகாவலி அபிவிருத்திக்கு சொந்தமான நிலம். இந்த நிலத்தை விவசாய அமைப்பு ஒன்றின் பெயரில் ஹிரா நிறுவனத்துக்கு கொடுத்தது எவ்வாறு. யார் இதற்கு அனுமதி கொடுத்தது. இதெல்லாம் நீங்கள் அனைவரும் இணைந்து செய்த சூழ்ச்சி.

மக்களின் வாக்குகளுக்காக மட்டுமல்ல இந்த அமைப்பின் பணம் , அதிகாரத்தை பெற்றுக்கொண்டு இவற்றை செய்து வந்துள்ளீர்கள். கோழிகளை பாதுகாக்க நரியை விட்டது போன்றது ஹிஸ்புல்லாஹ்விற்கு இந்த நிறுவனத்தை கொடுத்தது. இலங்கையில் எந்த பல்கலைக்கழகங்களிலும் இல்லாத சலுகைகள் அபிவிருத்திகள் இந்த ஒரு நிறுவனத்துக்கு கொடுக்கப்படுகின்றது.

கையில் பணம் இல்லாது வந்த இவர்கள் இன்று எவ்வாறு கோடிஸ்வர அந்தஸ்தை பெற்றனர் என்பது குறித்து ஆராய வேண்டும். மதத்தையும், அரசியலையும் பயன்படுத்தி பலமான நபர்களாக இவர்கள் உள்ளனர்.

முதலில் இந்த அரசியல்வாதிகளை விசாரிக்க வேண்டும். மேலும் முஸ்லிம்களை எவ்வாறு சமூகத்தில் இணைத்துக் கொள்வது என்பது குறித்து ஆராய வேண்டும். அரசாங்கம் அதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும். இவர்களை அடிப்படைவாத கொள்கைக்குள் தள்ளாது எவ்வாறு மீட்பது என்பது குறித்து ஆழமான கலந்துரையாடல் வேண்டும். மதக் கட்டுப்பாடுகள் என்ன என்பது குறித்து ஆராய வேண்டும். இப்போது நல்ல வாய்ப்பு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

இதனை சரியாக அரசாங்கம் கையாள வேண்டும். கலந்துரையாடல் என்றால் மீண்டும் ஹிஸ்புல்லாஹ், ரிஷாத் பதியுதீன், அசாத் சாலியுடன் அல்ல. உருப்படியான மதத் தலைவர்களை வரவழைக்க வேண்டும். வெடிகுண்டு தாரி போல இவர்கள் எவரும் தற்கொலை தாரிகளாக மாறப்போவதில்லை" என்று தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com