Sunday, May 12, 2019

அமெரிக்க தூதரக அதிகாரி ஒருவர் இலங்கை நீதிதுறையினுள் தலையீடு. போட்டுடைக்கின்றார் கம்பன்பில

இலங்கையின் நீதித்துறையின் விவகாரங்களில் தலைநுழைக்கும் நோக்கோடு அமெரிக்க தூதரக அதிகாரி ஒருவர் உயர் மட்டங்களில் இருக்கும் நீதிபதிகள் பலரை கருத்தரங்கு ஒன்றுக்கு அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்றுள்ளதாக பொது ஜன ஐக்கிய முன்னணியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஜாதிக்க பிவித்துரு உறுமய என்ற கட்சியின் தலைவருமான உதய கம்பன்பில சாடியுள்ளார்.

நாட்டின் சமகால நிலவரங்கள் தொடர்பாக கடந்த 8ம் திகதி பாராளுமன்றில் இடம்பெற்ற விவாதங்களில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்படி குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.

அங்கு உரையாற்றிய அவர் கூறுகையில் :

அமெரிக்கா எமது நீதிமன்றுகளை கையாள்வதன் ஊடாக உள்நாட்டு விவகாரங்களில் தலையிட முயற்சி செய்கின்றது. 'நிதிச் சலவை மற்றும் திருடப்பட்டவற்றை மீட்டல்' என்கின்ற தலைப்பில் எமது நீதிபதிகள் சிலருக்கு அமெரிக்காவில் கருத்தரங்கு ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகளை அமெரிக்க நீதித் திணைக்களமும் FBI ம் இணைந்து செய்திருக்கின்றார்கள்.

இக்கருத்தரங்கிலே 9 சீரேஸ்ட நீதிபதிகள் கலந்து கொண்டிருக்கின்றார்கள். உச்ச நீதிமன்றின் நீதிபதிகளான புவனகே அலுவிகார , பிரியந்த ஜெயவர்த்தன , விஜித்குமார மலல்கொட, மேன்முறையீட்டு நீதிமன்றின் நீதிபதிகளான ஏஎச்எம்டி நாவாஸ் , ஜனக் டீ சில்வா, என் பந்துள குணரட்ண மற்றும் உயர் நீதிமன்றின் நீதிபதிகளான சம்பத் விஜயரட்ண, சம்பத் அபயகோண், சம்பா ஜானகி ராஜரட்ன ஆகியோரே குறித்த கருத்தரங்கில் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த கருத்தரங்கின் இணைப்பாளராக செயற்பட்ட அமெரிக்க தூதரக அதிகாரியான பற்றிக் ரிலோ என்பவர் அங்கு இடம்பெற்ற இராப்போசன நிகழ்வு ஒன்றின்போது, முன்னாள் ஜனாதிபதி , முப்படைகளின் பிரதானி மற்றும் ஜனாதிபதி செயலகத்தைச் சேர்ந்த காமினி செனரத் ஆகியோரது வழக்குகளின் நிலைமைகளை தொடர்பில் விசாரித்திருக்கின்றார். அதற்கு பதிலளித்த நீதிபதிகள் 'குறித்த வழக்குகள் மிகவும் பலவீமானவை' என்றுள்ளனர். அப்போது 'நீங்கள் சகல சிரேஸ்ட அரச அதிகாரிகளுக்கும் உதாரணமானதோர் தீர்ப்பினை நீங்கள் வழங்குவீர்கள் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம்' என பற்றிக் தெரிவித்துள்ளார். அவ்வாறாயின் யார் இந்த 'நாங்கள்' நாங்கள் என்பது அமெரிக்க அரசாங்கமா?

பற்றிக் அத்துடன் நிறுத்திக்கொள்ளவில்லை. முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிரான வழக்குகளில் காணப்படுகின்ற தாமதங்களுக்கான காரணங்களை வினவியிருக்கின்றார். தமது தீர்ப்புக்களுக்கு எதிராக கோத்தபாய ராஜபக்ச மேல்முறையீடு செய்துள்ளார் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இந்த வழக்குகளின் இறுதி தீர்ப்புக்களை முடிந்த விரைவில் வழங்குமாறு பற்றிக் கேட்டிருக்கின்றார். இது என்ன? பற்றிக் எங்களது நீதிபதிகளுக்கு புத்திமதி கூறுகின்றார்.

தொடர்ந்து பேசிய கம்பன்பில, இவ்விடத்தில் மிகுந்த ஆத்திரம் அடைந்த எமது தேசப்பற்றாளர்களில் ஒருவரான நீதிபதி ஒருவர் அங்கு இடம்பெற்ற சகல சம்பாஷனைகளையும் பதிவு செய்திருக்கின்றார். அதன் பிரதி ஒன்று என்னிடம் உள்ளது. அவற்றில் மிகவும் முக்கியமான விடயங்கள் அடங்கியுள்ளதால் அதை இந்த சபைக்கு கையளிப்பதை தவிர்த்துக்கொள்கின்றேன்.

கம்பன்பில அவர்களின் மேற்படி குற்றச்சாட்டு தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்று அமெரிக்க தூதரகத்தின் கருத்தினை அறிய முற்பட்டுள்ளது. மின்னஞ்சல் ஊடாக அமெரிக்க தூதரக பேச்சாளரை அவர்கள் தொடர்பு கொண்டிருந்தபோது, இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை என அறிய முடிகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com