Friday, May 24, 2019

சுயபரிசோதனை- பாகம் 2 எங்கே சென்றுகொண்டிருக்கின்றோம்? வை எல் எஸ் ஹமீட்

உலகம் உருண்டை

இருளில் நிலவாகப் பிறந்து வையகத்தை ஒளிரவைத்து விண்ணும் மண்ணும் வியந்துரைக்க வாகுடன் தௌஹீத் ஏந்தி வாழ்க்கைக்கோர் வரலாறு படைத்து சாதனைக்கோர் சரித்திரம் படைத்த சர்தார் நபி ( ஸல்) அவர்கள் மீதுகொண்ட உகப்பின் வெளிப்பாடாக அவர்களது மீலாதில் தெருக்களை கொடிகளால் அலங்கரித்ததை பித்அத், ஹறாம் என்றார்கள். இன்று அடுத்த சமய விழாவுக்கு ஜுப்பாவும் தொப்பியும் போட்டு கொடியும் கட்டி, கட்டியதற்கு ஆதாரமாக அதனை முகநூலிலும் போடும்நிலை ஏற்பட்டிருக்கின்றது.

இறைவனின் நேசர்களை அவனது அடியார்களும் நேசிப்பதில் தவறேது? அவர்களின் நினைவு தினங்களில் தம் காலச்சார முறையில் கொடியேற்றி மகிழ்ச்சி தெரிவிப்பதை ஹறாம், பித்அத் என்றார்கள். இன்று அடுத்த சமய கொடிகளை தன்வீட்டிலேயே ஏற்றும் நிலை ஏற்பட்டிருக்கின்றது.

அன்று தன் தந்தையின் விடுதலைக்காக ஆசாத்சாலியின் மகள் பதட்டத்தில் பல இடங்களுக்கும் ஓடினார். அப்பொழுது பூத்தட்டு ஏந்தவேண்டிய ஒரு சூழ்நிலையும் ஏற்பட்டுவிட்டது. எத்தனைபேர் எத்தனை பத்வாக் கொடுத்தார்கள். ஒரு பெண்பிள்ளையென்றும் பாராமல் விமர்சனக் கணைகளால் குருரமாகக் குதறினார்கள். ஆனால் இன்று ...........?

அன்று இறைத்தூதரின், இறைநேசர்களின் மேல் நமக்கிருந்த அன்பை, கண்ணியத்தை வெளிப்படுத்துவதற்காக, நமது கலாச்சாரப் பின்னணியில் நாம் செய்த சில செயல்களை மார்க்கத்திற்கும் கலாச்சாரத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் எள்ளிநகையாடியவர்களை, அதே செயல்களை அடுத்த சமயத்தின் பெயரால் செய்யவைத்தானே அந்த வல்ல இறைவன்! இது நமக்கு படிப்பினைக்காக என்பதை சிந்திப்போமா? இறைவன் திருமறையில் பல இடங்களில் “ சிந்திக்கமாட்டீர்களா?” என்று கேட்கிறானே! சிந்திப்போமா?

திருந்தமாட்டோமா?

அண்மையில் கற்பிட்டியைச் சேர்ந்த ஒரு சகோதரி முகத்திரை அணிந்து சென்றதற்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கிறார். நாட்டின் சட்டத்திற்கு கட்டுப்பட்டு சற்று முகத்தை திறப்பதற்கு மறுத்து சிறையில் அந்த சகோதரி முகமும் மூடாமல் மஹ்றமும் இல்லாமல் வாடும் நிலைமை எவ்வளவு வேதனையானது.

அதே தினத்தில் ஒரு மௌலவியின் பயானை சமூகவலைத்தளத்தில் கேட்டேன். மௌலவியின் பெயர் தெரியவில்லை. அதில் அவர் உமர் ( ரலி) காலத்தில் நடந்த ஒரு சம்பவத்தைக் கூறுகிறார். துருக்கித் தொப்பிக்காக நம்மவர் நடாத்திய போராட்டம் பற்றிக் குறிப்பிடுகின்றார்.

இவ்வாறு பல போராட்டங்கள் பற்றிக் குறிப்பிட்டு, எது நடந்தாலும் தலையைத் திறக்கவேண்டாம், முகத்திரையைக் கழட்டவேண்டாம்... என்று மிகவும் உணர்ச்சியாகப் பேசுகின்றார். பயந்தவர்கள் எங்காவது நாட்டிற்கு சென்று வாழுங்கள். நாங்கள் இங்கு வாழுகின்றோம்; என்று கூறுகின்றார்.

இதைக் கேட்ட இன்னும் எத்தனை பெண்கள் முகத்தை மூடிக்கொண்டு தெருவால் செல்வார்களோ! அல்லது எத்தனை கணவன்மார் அப்படிச் செல்ல வற்புறுத்துவார்களோ!!

இங்கு நாம் சிந்திக்க வேண்டியது:

தலையை மூடுவது தொடர்பாக மார்க்கத்தில் கருத்துவேறுபாடே கிடையாது. தலையை மூடுவதற்கு சட்டரீதியான தடையும் கிடையாது.

முகமூடுதல்: பெரும்பான்மையான உலமாக்கள் முகம் மூடுவது கட்டாயம்; என்று கூறவில்லை. அது கட்டாயமாக இருந்திருந்தால் தலையைமூட முக்காட்டை அறிமுகப்படுத்திய முன்னோர் அதனையும் அறிமுகப்படுத்தியிருப்பர். ஒருவர் விரும்பி மூடுவது வேறுவிடயம்.

குறிப்பாக அண்மைக்கால கடும்போக்குவாத இஸ்லாமியக் கருத்துக்கள் முன்வைக்கப்பட ஆரம்பித்த பின்னர்தான் முகம் மூடுவது கட்டாயம் என்ற கருத்தும் மிகக்குறைந்த ஒரு சிலரால் முன்வைக்கப்பட்டது.

இங்கு சிந்திக்க வேண்டியது:

(1)இந்த மௌலவி முன்னோர்களால் கட்டாயம் என்று கூடப்படாத, தற்போதும் மெரும்பான்மையான உலமாக்களால் அவ்வாறு கட்டாயம் என்று கூறப்படாத, இதுவரை காலமும் பழக்கத்தில் இருக்காத ஒரு நடைமுறை அவரது அறிவுக்கு கட்டாயமாகப்படுகிறது; என்பதற்காக அதனை அவர் மக்களிடத்தில் திணிக்கின்றார். அதாவது தனது தலைக்கு தட்டுப்படுவதெல்லாம் இஸ்லாம்; என்று நினைக்கின்றார். அதைத்தான் மற்றவர்கள் பின்பற்ற வேண்டும் என்று திணிக்கின்றார். இதற்கு குர்ஆன், ஹதீசை பாவிக்கின்றார்.

(2)அதுவும் நாட்டுச் சட்டம் அதனைத் தடைசெய்து இருக்கின்ற ஒரு காலகட்டத்தில் திணிக்கின்றார்.

(3) போராடவேண்டும்; என்கின்றார். அதற்கு கடந்தகால நிகழ்வுகளை ஆதாரமாக காட்டுகின்றார்.

போராடுவதென்றால் எப்படி? அப்பாவிப் பெண்கள் சட்டத்தைமீறி முகத்தைமறைத்து சிறையில் வாடுவதன்மூலமா?

முகத்தை மூடுவது மார்க்கத்தில் கட்டாயம்; என்பது ஏகோபித்த அபிப்பிராயம் என்று ஒரு எடுகோளுக்கு வைத்துக்கொள்வோம். எப்படிப்போராடுவது? அரசியல் ரீதியாக மக்கள் பிரதிநிதிகளூடாக போராட வேண்டும்; அல்லது மக்கள் நேரடியாக வெகுஜன போராட்டம் நடாத்தவேண்டும்; அல்லது நீதித்துறை ஊடாக போராட வேண்டும், அவ்வாறு ஒரு போராட்டத்தைச் செய்து அந்த உரிமையைப் பெற்றதன்பின் பெண்களை முகத்தை மூடச்சொல்ல வேண்டும்.

அதைவிடுத்து அப்பாவிப்பெண்களை சட்டத்தை மீறச்சொல்லி சிறையில் வாடவைப்பது போராட்டமா? அப்பெண் சிறைக்குச் சென்றால் இஸ்லாம் சொன்ன மஹ்றத்தை இந்த மௌலவி வழங்குவாரா? அப்பெண்ணிற்கு தாய்ப்பால் குடிக்கும் குழந்தை இருந்தால் அதற்கு இந்த மௌலவி தீர்வு தருவாரா? அல்லது அப்பெண்ணின் ஏனைய குழந்தைகளுக்கு, குடும்பத்திற்கு இந்த மௌலவி ஆறுதல் கூறுவாரா?

சிறை சென்றதால் அப்பெண்ணுக்கு ஏற்படும் உளவியல் பிரச்சினைக்கு இந்த மௌலவி தீர்வு வழங்குவாரா? எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு பெண் என்ன காரணத்திற்காகவென்றாலும் சிறைசென்று மீண்டால் இந்த சமூகம் அவளை எப்படிப் பார்க்கும்; அவளுடைய, அவளது குழந்தைகளுடைய எதிர்காலத்தை அது எவ்வாறு பாதிக்கும்; என்பவற்றிற்கு இந்த மௌலவி பதில் கூறுவாரா?

சரி, இவரது சொல்லைக்கேட்டு சட்டத்தைமீறி முகத்திரை அணிந்ததனால் அப்பெண் சிறை சென்றுவிட்டார், போராடச்சொன்ன இவரது பங்கிற்கு இவர் செய்யப்போகும் போராட்டம் என்ன ? இவரும் ஒரு புர்க்காவை அணிந்து தெருவால் சென்று இவரது பங்கிற்கு சிறைக்குப் போவாரா?

நிர்ப்பந்தம்

முகம் மூடுவது சட்டவிரோதமாக்கப்பட்ட நிலையில் முகம் மூடத்தான் வேண்டுமென்றால்கூட மூடமுடியாத ஒரு நிர்ப்பந்தம் இருக்கின்றதா? இல்லையா? நிர்ப்பந்த சூழலில் மார்க்க சட்டம் என்ன?

செத்த பிராணியின் அல்லது பன்றியின் இறைச்சியை உண்பதைத் தடைசெய்த இஸ்லாம் உயிர்பிழைப்பதற்காக இக்கட்டான சூழ்நிலையில் உண்பதை ஆகுமாக்கியது மட்டுமல்லாமல் சில சூழ்நிலையில் வாஜிபாகக்கூட இஸ்லாம் கூறியிருக்கின்ற சட்டம் இந்த மௌலவிக்குத் தெரியாதா? சஜதா ஆயாக்கள் என்பது ஏன் என்பதை அறியாதவரா இந்த மௌலவி? ஏன் இந்த மௌலவி இவ்வாறான இக்கட்டான நிலையில் முகத்திரையை கழட்டவேண்டாம்; என்று பயான் பண்ணினார்?

அவர் நினைப்பது அவருக்கு மார்க்கம். போராட்டமும் தெரியாது. இவர்களும் மௌலவிகள் என்று சமூகத்தைக் குழப்பி இன்று சமூகம் அனுபவிப்பது போதாதா? எத்தனை அப்பாவிகள் இன்று சிறையில் வாடுகிறார்கள்! இவர்களைப் போன்றவர்களால் வந்தவினையில்லையா? சட்டத்தைமீறும்படி பெண்களுக்கு பயான் செய்யும் இவர்களைப் போன்றவர்கள் ஏதோவொரு விதத்தில் புனர்வாழ்வளிக்கப்பட வேண்டியவர்கள், இல்லையா? இவர்களைப் போன்றவர்களை இவ்வாறே தொடரவிட்டு சமூகம் இவ்வாறான அழிவுகளை சந்திக்க வேண்டுமா?

ஒருவழி சிந்தனையாளர்

மனிதர்களில் சிலர் இருக்கின்றார்கள். ஒரு விடயத்தை ஏதோ ஒரு கோணத்தில் இருந்து பார்ப்பார்கள். அந்தக் கோணத்தில் அவர்களுக்கு அது எவ்வாறு தெரிகின்றதோ அதுதான் நிஜம் என்று நம்புவார்கள்.

குருடர்கள் யானை பார்த்த கதை கேள்விப்பட்டிருப்போம். காதைத் தொட்டுப் பார்த்தவன் யானை “சுழகைப்போல” என்றான். அவன் சற்று பின்னோக்கிச் சென்று வாலையும் தொட்டுப்பார்த்திருந்தால் யானை சுழகைப்போலவா? அல்லது தும்புத் தடியைப்போலவா? ஒரே நேரத்தில் இரண்டு விதமாகவும் இருக்கமுடியாதே! அல்லது இரண்டும் இல்லாத வேறுஒரு வடிவமா? எதற்கும் நம்மைவிட யானையை சிறப்பாகத் தெரிந்த ஒருவரிடம் கேட்டுப்பார்ப்போமே என்று சிந்தித்திருப்பான்.

இவ்வாறுதான் இன்று சமூகத்தைக் குழப்பும் மார்க்க இயக்கங்களும் சில மௌலவி என்பவர்களும் இருக்கின்றார்கள். தமக்கு புரிவது அல்லது தாம் நினைப்பது மாத்திரமே சரியென நினைக்கிறார்கள். அதற்குப் பின்னால் சில ஒற்றைவழி சிந்தனையாளர்கள் செல்கின்றார்கள்.

விளைவு சமூகத்திற்குள் பிரிவுகள். பல நாட்கள் பெருநாள். ஊருக்குள், குடும்பத்திற்குள் குழப்பம். ஒரு வீட்டிற்குள் தாய் இந்த மகனுக்கு பெருநாளைக்கு ஒரு நாள் சமைக்கவேண்டும். அடுத்த மகனுக்கு பெருநாளைக்கு அடுத்த நாள் சமைக்க வேண்டும்.

இவ்வாறெல்லாம் கடந்த காலங்களில் குழப்பி, குழப்பி இறுதியில் இன்று எங்கே நிற்கின்றோம்?

எதிர்காலம்

இப்பொழுது கூறுகின்றார்கள்.

எங்களைப்போல் வாழுங்கள்; இல்லையெனில் நாட்டைவிட்டு வெளியேறுங்கள்.

தனியார் சட்டமெல்லாம் சரிவராது; எல்லோரும் பொதுச்சட்டத்தைப் பின்பற்றுங்கள்.

உங்களுக்கு தனிக்கட்சி சரிவராது. தேசியக்கட்சிகளில் இணையுங்கள்.

சமூக ரீதியான பாடசாலை கூடாது. பொதுப்பாடசாலையில் படியுங்கள்; என்கிறார்கள். ஆமாம், பொதுப்பாடசாலையே சரி; என்று நம்மவர்கள் சிலரும் கூறுகின்றார்கள்.

எல்லாம் நமக்கிருந்தது. ஒரு கூட்டம் மார்க்கத்தின் பெயரால் செய்த பித்தலாட்டங்கள் எல்லாவற்றையும் இழந்த ஒரு சமூகமாக நம்மை மாற்றிவிடுமோ? என்கின்ற ஒரு அச்ச நிலைக்கு நம்மைத் தள்ளியிருக்கின்றது. ஆனாலும் நமது சில இயக்கங்களுக்கும் சில மௌலவிகளுக்கும் எதைப்பற்றியும் கவலையில்லை.

பெருநாள் வந்தால் தெரியும். நம்மவர்கள் திருந்துவார்களா? என்று.

எங்கே சென்றுகொண்டிருக்கின்றோம்?

எனவே, சமூகம் சிந்திக்கவேண்டும்.
( தொடரும்).

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com