Thursday, April 18, 2019

ஐயோ நாங்கள் இரவில் சீனாவை சந்திக்கவே இல்லை. விக்கி விபூதி அணிந்து கொண்டு பொய்சொல்கின்றார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விக்கி வெளியேறுவதற்கு காரணகர்த்தாக்களாக இருந்தவர்கள் கஜேந்திரர்கள். அவர்கள் தங்களை விக்கியுடன் நகமும் தசையுமாகவே காண்பித்தனர். அரசனை நம்பி புருஷனைக் கைவிட்ட கதையாக கஜேந்திரர்களை நம்பி விக்கி தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறினார்.

ஆனாலும் தற்போது நகமும் தசையுமாக இருந்தவர்கள் கீரியும் பாம்புமாக மாறியுள்ளனர். இவ்வாறு அவர்கள் எதிரிகளாக மாறியமைக்கு காரணம், விக்கி-கஜேந்திரன்-சுரேஸ் குழுவினர் அமைத்துக்கொள்விருந்த கூட்டணியில் பதவிகளை பிரித்துக்கொள்வதில் ஏற்பட்ட சிக்கலாகும்.

உள்ளே அடிபட்டுக் கடிபட்டுக்கொண்டிருந்த விக்கி-கஜேந்திரன்-சுரேஸ் கோஷ்டி தற்போது பொது அரங்கில் அடி-கடி படத்தொடங்கியுள்ளனர். இதற்காக அவர்கள் கூறுகின்ற காரணம் விக்கி போர்க்குற்ற விசாரணைகளுக்காக கலப்பு நீதிமன்று சாத்தியம் இல்லை என்று தெரிவித்து தமிழ் மக்களுக்கு துரோகம் இழைத்து விட்டாராம் என்பதாகும்.

கஜேந்திரர்களுக்கு பதிலடி கொடுத்த விக்கி கஜேந்திரர்கள் நடுச்சாமத்தில் ஒழிந்து சென்று சீனர்களை சந்தித்ததாக தெரிவித்திருந்தார்.

விக்கினேஸ்வரனின் மேற்படி பதிலடி தொடர்பில் கடுப்பாகியுள்ள குதிரை கஜேந்திரன், விக்கி விபூதி அணிந்து கொண்டு பொய்யுரைப்பதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

'தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சீனத் தரப்பினரை இரகசியமாகச் சந்தித்தது என உண்மைக்குப் புறம்பான – பொய்க் கருத்தொன்றைக் கூறியிருக்கின்றார் விக்கி. அது தொடர்பாக எங்களது ஆழ்ந்த கவலையையும் அதிருப்தியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

விக்னேஸ்வரன் ஐயா வயதில் மூத்த ஒருவர். நாற்பது ஆண்டு காலத்துக்கு மேலாக நீதித்துறையில் இருந்திருக்கின்றார். அதனைவிட அவர் ஒரு ஆன்மீகவாதி. அவருடைய முகத்தில் திருநீறும் பொட்டும் எப்போதும் இருக்கும். ஆகையால் அப்படிப்பட்டவர்கள் ஒரு போதும் மனச்சாட்சிக்கு மாறாக பொய் சொல்லமாட்டார்கள் என்பது தான் மக்களுடைய நம்பிக்கை.

அப்பிடியிருக்கின்றபோது நாங்கள் சீனத் தூதுவரை இரவில் ஒளித்துச் சந்தித்திருக்கிறோம் என்ற சாரப்பட ஒரு கருத்தைச் சொல்லியிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்க விடயம். அப்படிச் சொல்லியிருப்பது ஒரு அப்பட்டமான பொய். ஏனெனில் அப்படியான ஒரு சம்பவம் நடைபெறவில்லை.

விக்னேஸ்வரன் தான் கொண்டு செல்கின்ற பிழையான அரசியலை மக்கள் மட்டத்திலே நியாயப்படுத்துவதற்காக எங்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களைச் சொல்லிச் சேறு பூசுவதற்கு முயற்சிக்கின்ற நடவடிக்கைகளைக் கைவிடவேண்டும் என்று நான் மிகவும் வினயமாகக் கேட்டுக்கொள்கின்றேன்.

இந்தியாவின் எடுபிடிகளாக இருக்கின்ற சுரேஷ் பிரேமச்சந்திரனையும் அவரைப் போன்ற சிலரையும் ஒருங்கிணைத்துக் கொண்டு தமிழ்த் தேசிய அரசியலை ஒற்றையாட்சிக்குள் முடக்குகின்ற பாதைக்குள் கொண்டு செல்ல முற்படுகின்றாரா என்ற கேள்வியொன்று வலுவாக எழுந்து கொண்டிருக்கின்றது.

அப்படிப்பட்ட இடத்தில் தனது அந்தப் போக்கை நியாயப்படுத்தவதற்கு தனக்குப் பக்கத்திலே சரியாகச் செயற்படுகின்ற தரப்பு இருந்தால் அது தனக்கு இடைஞ்சல் என்பதால், எங்கள் மீது ஒரு பொய்யான குற்றச்சாட்டைச் சொல்லி சேறு பூச முற்படுவதாகத் தான் நாங்கள் கருதுகின்றோம். இந்த பொய்யான பரப்புரைச் செயற்பாடுகளை அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

அவர் தன்னுடைய அரசிலுக்காக அந்தப் பொய்களைச் சொல்லப் போகின்றார் என்று சொன்னால் தயவு செய்து பொட்டு வைப்பதையும் திருநீறு பூசுவதையும் தவிர்த்துவிட்டுச் சாக்கடை அரசியலில் தாராளமாகப் பொய்களைக் கூறிக்கொண்டு அரசியலைச் செய்யட்டும்.

எங்களைப் பொறுத்தவரை எந்தவொரு இராஜதந்திரியும் எங்களைச் சந்திக்க வேண்டும் என்று கேட்டால் நாங்கள் அவர்களைச் சந்திப்போம். எங்களுக்கு யாரைச் சந்திப்பதிலும் எந்தவிதமான தயக்கமும் இல்லை. பயமும் இல்லை. யாரைச் சந்தித்தாலும் அதனை வெளிப்படுத்துவதிலும் எங்களுக்கு எந்தவிதமான தயக்கங்களும் இல்லை.

இதுவரை இந்தியத் தூதரகங்களையும் ஐரோப்பியத் தூதரகங்களையும் பல தடவைகள் சந்தித்திருக்கிறோம். ஆனால், இதுவரை சீனாத் தூதுவர்களைச் சந்திக்கவில்லை. ஆயினும், எதிர்காலத்தில் அவர்களும் எங்களைச் சந்திக்க வேண்டும் என்று விரும்பிச் சந்திக்கக் கேட்டால் நிச்சயமாக நாங்கள் சந்திப்போம். ஆனால், சந்தித்துவிட்டு நாங்கள் அதனை ஒளித்து மறைக்கவேண்டிய தேவை எங்களுக்கு இல்லை. அதனை விக்னேஸ்வரன் ஐயா தெளிவாகப் புரிந்து கொள்ளவேண்டும்.

இதுவரை அவரோடு நெருங்கிப் பழகிய அரசியல்வாதிகள் ஐந்து சதத்துக்கும் நேர்மையில்லாத அடிப்படைத் தார்மீக அறமற்றவர்களாக இருக்கலாம். அவர்களை வைத்துக் கொண்டு நாங்களும் அப்படித்தான் என்ற எண்ணத்தோடு கருத்துக்களைக் கூறுவதை விக்னேஸ்வரன் ஐயா தவிரத்துக்கொள்ள வேண்டும்' – என்று குறிப்பிட்டுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com