Monday, April 22, 2019

நள்ளிரவு 12 மணிமுதல் அவசரகாலச் சட்டம் அமுலுக்கு வருகின்றது..

பயங்கரவாத தடைச் சட்டத்துடன் சம்பந்தப்பட்ட சட்ட விதிமுறைகளை மாத்திரம் இன்று நள்ளிரவு 12 மணி முதல் அவசரகால சட்டத்தின் கீழ் அமுல்படுத்துவது தொடர்பாக வர்த்தமானி அறிவித்​தலை வெளியிட அரசு தீர்மானித்துள்ளது.

நாட்டில் நேற்று இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புகளையடுத்து நாட்டினதும் மக்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு பொலிஸாருக்கும் முப்படையினருக்கும் தேவையான அதிகாரத்தை வழங்குவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்புச் சபை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று (22) முற்பகல் ஒன்றுகூடியது. இதன்போது மேற்படி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

நேற்று இடம்பெற்ற பயங்கரவாத நடவடிக்கையுடன் தொடர்புடைய அமைப்புக்கள், அது தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள பயங்கரவாதிகள் மற்றும் அதற்கு அனுசரணை வழங்கிய அனைத்து நாசகார சக்திகளையும் முழுமையாக அழிப்பது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

அது தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கும் முப்படையினருக்கும் ஜனாதிபதி பணிப்புரை வழங்கியுள்ளார்.

மேலும், இலங்கையில் உள்ள சகல வெளிநாட்டு தூதுவர்களையும் உயர் ஸ்தானிகர்களையும் அழைத்து நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் விளக்கமளிப்பதற்கும் ஜனாதிபதி எதிர்பார்த்துள்ளார். இதன்போது இலங்கைக்கு அவர்கள் அனைவருடைய சர்வதேச ஒத்துழைப்பையும் கோரவுள்ளார்.

உள்நாட்டுப் பயங்கரவாதிகளின் இந்தத் தாக்குதல்களின் பின்னால் சர்வதேச பயங்கரவாத அமைப்புகள் இருப்பது குறித்து புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ள காரணத்தால், அவற்றை ஒழிப்பதற்காகவே இவ்வாறு சர்வதேச ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.

இதேநேரம் கத்தோலிக்க தேவாலயங்கள் உள்ளிட்ட பாதுகாப்புத் தேவையான அனைத்து இடங்களுக்கும் முறையான பாதுகாப்புத் திட்டமொன்றை தயாரிக்குமாறும் பாதுகாப்புத் துறையினருக்கு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

நாட்டில் ஏற்பட்டிருக்கும் நிலைமையைக் கருத்தில்கொண்டு இந்த நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கும் முப்படையினருக்கும் பாதுகாப்பு அமைச்சுக்கும் ஜனாதிபதி பணிப்புரை வழங்கியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com