Tuesday, March 5, 2019

திருக்கேதீச்சரம் - கத்தோலிக்கரின் வருத்தம் தெரிவிப்பை ஏற்போம். சிவசேனை மறவன்புலவு க. சச்சிதானந்தன் அறிக்கை.

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வளைவு விடயத்தில் ஏற்பட்ட சர்ச்சையையடுத்து யாழ் மறை மாவட்ட ஆயர் விடுத்துள்ள அறிக்கை மற்றும் மன்னிப்பு கோரல் தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள சீவசேனை மறவன்புலவு சச்சிதானந்தம் அவர்களது வருத்தம் தெரிவிப்பை ஏற்றுக்கொள்வோம் என்று தெரிவித்துள்ளார்.

அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

திருக்கேதீச்சரத்தில் 03.03.2019 நிகழ்ந்தன தொடர்பாக, யாழ்ப்பாண மறை மாவட்டக் குரு முதல்வர் அருட்தந்தை பி. யோ. செபரட்ணம் எழுதிய கடிதம் படித்தேன்.

அருள் பெருக்கும் திருநோக்கம் கொண்ட அக் கடிதத்தைப் படித்த உடனேயே என் உள்ளத்தில் பாரம் இறங்கியது. கவலை பறந்தது. இன்றைய மகாசிவராத்திரி நாளில் சைவர்களுக்குச் சிவபெருமான் தந்த அருட் செய்தியாகப் போற்றினேன்.

அந்தக் கருத்தை மாற்ற நான் விரும்பவில்லை. ஏனெனில் உள்ளத்தில் தேனாக வந்து பாயும் சிவனின் அருளைப் போக்க விரும்பவில்லை.

ஆனாலும் அருட்தந்தை பி. யோ. செபரட்ணம் அவர்களே மன்னார் மாவட்டக் குரு முதல்வர் அருட்பணி அ. விக்ரர் சோசை அவர்கள் எழுதியன படித்தீர்களா?

நீங்கள் எழுதியதில் "ஒரு கத்தோலிக்கக் குருவின் வழிகாட்டலில் கத்தோலிக்க மக்களால் சேதமாக்கப்பட்ட நிகழ்வு பற்றி ஊடகங்களில் வெளியான செய்திகள்" என்றீர்கள்.

மன்னார் மாவட்டக் குரு முதல்வர் அருட்பணி அ. விக்ரர் சோசை அவர்கள் எழுதியதில் "படங்களில் தெரிவிக்கப்பட்டது போல எதுவும் இடித்துத் தகர்க்கப்படவில்லை. புதிதாகப் பலவந்தமாகக் கொன்கிறீட் இட்டுப்போடப்பட்ட கம்பிகளே பிடுங்கப்பட்டன. இந்த சம்பவம் நிகழும் பொழுது எந்த ஒரு அருட்பணியாளர்களும் அந்த இடத்தில் இருக்கவில்லை" என்கிறார்.

நீங்கள் எழுதியது நம்பத் தக்கதா? அருட்பணி அ. விக்ரர் சோசை அவர்கள் எழுதியது நம்பத் தக்கதா? சமூக ஊடகங்களில் வெளிவந்த படங்கள், காணொலிகள் சொல்பவை என்ன?

என் வேண்டுகோள் இதுவே. நடந்தவை நடந்தவையாகப் போகட்டும். நடப்பவை நல்லவையாகட்டும். பல்லாயிரம் ஆண்டு பழமையான திருக்கோயிலுக்குச் சாலை முனையில், சந்திப்பில் வரவேற்பு வளைவை நீங்களே அமைத்துத் தாருங்கள்.

சைவர்களுடன் நல்லிணக்கமாக வாழ இதைவிட வேறென்ன வேண்டும்.

சைவர்கள் உங்களின் 4.3.19 கடிதக் கண்ணோட்டம் உடையவர்கள் என்பதற்கான காட்டு இதோ..

சிலாபம் அருகே உடைப்பு நகரில் உள்ள பழமை வாய்ந்த கத்தோலிக்க St. Francis Xavier’s Church Udappuwa தேவாலயத்தைப் புதுப்பித்துப் பல்லாண்டுகளாகப் பராமரிப்பவர்கள், சைவர்களான உடைப்பு அருள்மிகு திரௌபதை அம்மன் கோயிலார் என்பதை நீங்கள் அறியாதவரல்ல.

'யாதொரு தெய்வம் கொண்டீர் அத்தெய்வமாகி ஆங்கே மாதொரு பாகனார்தாம் வருவர்' என்பதே சைவர்களின் கண்ணோட்டம். அகத்தே அருள் நெறியாகப் புறத்தே 'மதமாக' எவரும் வாழக்கூடாது.

உங்களின் 4.3.19 கடிதக் கண்ணோட்டத்தை அனைவரும் கொண்டால் சைவமும் கத்தோலிக்கமும் அருள் நோக்கு மட்டுமே கொண்ட சமயங்களாாகும்.04. 03. 2019

திருக்கேதீஸ்வரம் வீதி வளைவு சேதமாக்கப்பட்ட நிகழ்வுக்கு எமது அதிர்ச்சியையும், கவலையையும், கண்டனத்தையும் தெரிவிக்கின்றோம்

எமது இந்து மத சகோதரர்களின் மிகவும் பழமைவாய்ந்த, சரித்திரப் பிரசித்திபெற்ற திருத்தலமாக விளங்குகின்ற திருக்கேதீஸ்வரம் ஆலய வீதியில் அமைக்கப்பட்டிருந்த வளைவு ஒரு கத்தோலிக்கக் குருவின் வழிகாட்டலில் கத்தோலிக்க மக்களால் சேதமாக்கப்பட்ட நிகழ்வு பற்றி ஊடகங்களில் வெளியான செய்திகள் எமக்கு ஆழ்ந்த அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளன. கத்தோலிக்கர் என்ற வகையில் நாம் வெட்கித் தலைகுனிவதோடு எமது வன்மையான கண்டனத்தையும் தெரிவிக்கின்றோம்.

தமது சிவராத்திரி விழாவை அனுஷ்டிக்கும் தருணத்தில் நடந்த இத்தகாத நிகழ்வினால் மனமுடைந்து காணப்படும் இந்து மத சகோதரர்களுக்கு எமது ஆழ்ந்த கவலையைத் தெரிவிக்கின்றோம். எல்லா மதங்களையும், மதத்தவர்களளையும் அன்பு செய்யவேண்டும். மதிக்கவேண்டும் என்றுதான் கத்தோலிக்க திரு அவை எமக்குப் போதிக்கிறது. இந்நிலையில், இச்செயலை எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாது. தமிழர்களாகிய நாம் மதவேறுபாடுகளின்றிச் சகோதரத்துவத்தில் வளரவேண்டியது மிகவும் இன்றியமையாததாக இருக்கும் இந்நிலையில் இப்படியான வேண்டத்தகாத நிகழ்வுகள் எதிர்காலத்தில் நடைபெறாது இருக்கவும், நடைபெற்ற செயலுக்குப் பிராயச்சித்தம் செய்யவும் சம்பந்தப்பட்டவர்கள் முன்வரவேண்டுமென்று வினயமாகக் கேட்டுக்கொள்கிறோம்.

இயேசுவின் வாழ்வாலும் போதனையாலும் நாம் பெற்றுக்கொண்ட அன்பு, மன்னிப்பு, விட்டுக்கொடுப்பு, தியாகம், புரிந்துணர்வு, சகோதரத்துவம், குழும வாழ்வு ஆகிய எமது கத்தோலிக்க மதத்தின் அடையாளங்களை நாம் இழந்துவிடாமல் பாதுகாப்போம். இப்படியான நிகழ்வுகளால் எமது கத்தோலிக்க மதத்தின் பரிசுத்தத்தனத்துக்கு ஏற்படும் களங்கங்களுக்காக நாம் மனம் வருந்திப் பிராயச்சித்தம் செய்யவேண்டும்.

தவிர்க்கமுடியாத காரணங்களால் மதங்களுக்கிடையே அவ்வப்போது ஏதாவது கருத்துவேறுபாடுகள் ஏற்படும் பட்சத்தில் ஆரோக்கியமான பேச்சுவார்த்தைகள் மூலமாக அவற்றைத் தீர்த்துவைக்க முயற்சி செய்யவேண்டுமேயொழிய வன்முறைகளிலும், அடாவடித்தனங்களிலும் ஈடுபடவே கூடாது.

அருட்தந்தை பி. யோ. ஜெபரட்ணம் குரு முதல்வர் யாழ்ப்பாணம் மறைமாவட்டம்

Very Rev. Fr. P. Josephidas Jebaratnam

Vicar General, Diocese of Jaffna, Bishops House, Jaffna, Sri Lanka.


மாசி 20, 2050 திங்கள் (04.03.2019).

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com