Friday, March 22, 2019

அர்ஜூன மகேந்திரன் விவகாரத்தில் சிங்கப்பூ ஊடகச் செய்தி பொய்யானதாம். ஜனாதிபதி ஊடக பிரிவு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிங்கபூர் பிரதமருடன் பிரத்தியேகமாக அர்ஜூன மகேந்திரன் தொடர்பில் பேசியிருந்தும் அந்நாடு அவரை வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வில்லை என ஜனாதிபதி தெரிவித்திருந்தார். இது தொடர்பாக சிங்கப்பூர் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்ததாக அந்நாட்டு ஊடகங்களில் வெளியாகியிருந்த அறிக்கை ஒன்றினை சுட்டிக்காட்டிய இலங்கை ஊடகங்கள் அரசாங்கத்தினால் முறையான வேண்கோள் விடுக்கப்படவில்லை என குற்றஞ் சுமத்தியிருந்தது.

இச்செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது. இது தொடர்பாக அப்பிரிவு விடுத்துள்ள செய்தியில் :

சிங்கப்பூர் நாட்டின் நாடு கடத்தல் சட்டத்திற்கமைவாக யாரேனும் ஒரு நபரை அந்நாட்டிலிருந்து நாடு கடத்துமாறு கோருவதற்கு அடிப்படையாக அமையும் ஆவணங்கள் எவையும் இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்படவில்லை என அப்பத்திரிகை செய்திகளில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அந்நாட்டின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் பேச்சாளர் ஒருவர் அத்தகைய கூற்றொன்றினை வெளியிட்டிருப்பது அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மத்திய வங்கி பிணைமுறி மோசடியுடன் தொடர்பான சிங்கப்பூரில் வசிப்பதாக கூறப்படும் அர்ஜூன் மகேந்திரனை இலங்கையிடம் ஒப்படைக்குமாறு சிங்கப்பூர் அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வந்து, அந்நாட்டின் பிரதமர் லீ ஷியென் லுங் அவர்களுக்கு விடுத்த உத்தியோகபூர்வ பிரகடனத்தின் அடிப்படையிலேயே ஆகும். எவ்வாறாயினும் இதுவரையில் அவ்விடயம் தொடர்பாக எந்தவித உத்தியோகபூர்வ அறிக்கையும் சிங்கப்பூர் அரசாங்கத்தினால் இலங்கை அரசாங்கத்தின் உரிய அதிகாரிகளுக்கு விடுக்கப்படவில்லை.

அர்ஜூன் மகேந்திரனை இலங்கையிடம் ஒப்படைக்குமாறு இலங்கை அரசாங்கத்தினால் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் ஊடாக இராஜதந்திர மட்டத்திலான உத்தியோகபூர்வ வேண்டுகோள் 2018 மே 28 ஆம் திகதி விடுக்கப்பட்டுள்ளது. அத்தோடு அவ்வேண்டுகோள் தற்போது சிங்கப்பூர் சட்டமா அதிபரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சினால் இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட உரிய துறையினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் அமுலில் இருப்பது அந்நாட்டின் ஒப்படைத்தல் சட்டமாகும். அச்சட்டத்தின் 2வது அத்தியாயத்திற்கு அமைவாக 18 வது குற்றத்திற்கு சமமான குற்றமொன்றினை அர்ஜூன் மகேந்திரன் இழைத்திருப்பதாக கோட்டை நீதவானினால் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்ட 8266ஃ2018 டீ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையினை அடிப்படையாகக் கொண்டு 2018.04.19 ஆம் திகதி சர்வதேச பொலிஸினால் சிகப்பு பிடியாணை விடுக்கப்பட்டுள்ளதோடு, குறித்த சிகப்பு பிடியாணையும் மேற்குறித்த சிங்கப்பூர் அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்ட அர்ஜூன் மகேந்திரனை இலங்கை அரசாங்கத்திடம் ஒப்படைப்பதற்கான வேண்டுகோளுடன் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் சிங்கப்பூருக்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின்போதும் அர்ஜூன் மகேந்திரனை இலங்கையிடம் ஒப்படைக்குமாறு சிங்கப்பூர் பிரதமரிடம் கேட்டுக்கொண்டார்.

அதற்கமைய அர்ஜூன் மகேந்திரனை ஒப்படைப்பதற்கு தேவையான பூரண தகவல்கள் இலங்கை அரசாங்கத்தினால் ஏற்கனவே சிங்கப்பூர் அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ளதுடன், அதன் அடிப்படையில் சிங்கப்பூர் அரசாங்க அதிகாரிகளின் ஊடாக அர்ஜூன் மகேந்திரனுக்கு அழைப்பானை விடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அர்ஜூன் மகேந்திரன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக மேலும் தெளிவுபடுத்துமாறு சிங்கப்பூர் சட்டமா அதிபரால் இலங்கையின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் ஊடாக இலங்கை சட்டமா அதிபருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, அண்மையில் கிடைத்த அந்த கடிதம் தொடர்பான விடயங்களை சிங்கப்பூருக்கு அனுப்பி வைப்பதற்காக இலங்கையின் சட்டமா அதிபர் தற்போது முறையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். மேற்குறித்த சம்பவம் தொடர்பாக சிங்கப்பூர் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்ததாக கூறப்படும் கூற்றினை அடிப்படையாகக் கொண்டு அந்நாட்டு ஊடகங்களில் வெளியிடப்பட்டிருந்த செய்திகளை சுட்டிக்காட்டி இலங்கை ஊடகங்களில் வெளியிடப்பட்டிருந்த செய்திகளை ஒருபோதும் சிங்கப்பூர் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அறிக்கையாக ஏற்றுக்கொள்ள முடியாதென்பதே எமது அரசாங்கத்தின் நிலைப்பாடாகும்.

(ஜனாதிபதி ஊடக பிரிவு)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com