Thursday, March 14, 2019

கொலைக் குற்றவாளிகள் தொடர்பில் நீதிமன்றுதான் முடிவெடுக்கவேண்டும். கைவிரித்தார் ராகுல்.

ராஜீவ் காந்தியின் கொலை தொடர்பில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள புலிப்பயங்கரவாதிகள் 7 பேருக்கும் விடுதலை வழங்கவேண்டும் என்று புலி ஆதரவாளர்கள் கோரி வருகின்றனர்.

இக்கோரிக்கைக்கு இந்திய மக்களிடமிருந்த நேரடியாகவும் மறைமுகமாகவும் எதிர்ப்பு காணப்படுகின்றது. இந்நிலையில் அவர்களுக்கு விடுதலை வழங்குவது தொடர்பான இறுதி முடிவை நீதிமன்றே எடுக்கவேண்டும் என்று தெரிவித்துள்ளார் ரஜீவ் காந்தியின் மகன் ராகுல் காந்தி.

இது தொடர்பாக இந்திய ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தியில் கீழ்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

“எனது தந்தை ராஜீவ் காந்தி கொலை என்பது எனது தனிப்பட்ட பிரச்சனையா...? ராஜீவ் காந்தி கொலை வழக்கு சட்ட பிரச்சினை தொடர்பானது.

நீதிமன்றம் தான் ராஜீவ் காந்தி கொலையாளிகள் விடுதலை செய்வது குறித்து முடிவெடுக்க வேண்டும்.

சிறையில் இருக்கும் 7 பேர் மீது எனக்கு தனிப்பட்ட கோபம் எதுவும் இல்லை. 7 பேர் விடுதலை குறித்து உரிய காலத்தில் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாட்டின் பிரதமர் யார் என்பதை மக்கள்தான் முடிவு செய்வார்கள். பிரதமர் யார் என்பதை மக்களிடம் திணிப்பதை அடாவடி செயலாக காங்கிரஸ் கருதுகிறது. நரேந்திர மோடி அரசை முடிவுக்கு கொண்டு வருவது தான் எங்கள் நோக்கம். எதிர்க்கட்சிகள் வலிமையாக இணைந்துள்ளன.

இலங்கை படுகொலை விடயத்திற்காக காங்கிரஸ் மீது தமிழக மக்களுக்கு கோபம் இல்லை. இதற்கும் காங்கிரஸ் கட்சிக்கும் தொடர்பு இருப்பதாக மக்கள் கருதவில்லை.

தமிழக மக்கள் மீது காங்கிரஸ் கட்சி மிகுந்த அன்பு கொண்டிருக்கிறது. தமிழகம் உட்பட பல மாநில கலாச்சாரங்கள் பாஜக அரசால் சீரழிக்கப்பட்டுள்ளன. நாக்பூரை தலைமையிடமாக கொண்டு மத்திய அரசு இயங்க முடியாது.

தமிழகம் சீனாவுடன் போட்டி போடும் அளவிற்கு உற்பத்தி துறையில் திறமை காண்பித்துள்ளது. தமிழகத்தை இந்தியாவின் உற்பத்தித் துறை மையமாக காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்ததும் மாற்றிக் காட்டுவோம்.

மாநிலங்கள் நடுவே வேற்றுமை பாராட்டுவது தான் தேசவிரோதம். அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பதில் எனக்கு விருப்பம் உண்டு. பஞ்சாயத்து முதல் பிரதமர் வரை அதிகாரங்கள் பகிர்வு என்பதே எம்முடைய முதல் விருப்பம்.

தமிழக அரசு புது தில்லியிலிருந்து ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கப்படுகிறது. புது தில்லியிலிருந்து தமிழக அரசு இயக்கப்படுவது தமிழக மக்களுக்கு இழைக்கப்படும் அவமானம் ஆகும். தேர்தலுக்காக தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி கூட்டணியை உருவாக்கி உள்ளது.

காங்கிரஸ் போதிய கூட்டணிகளை ஏற்படுத்தவில்லை என்பது பொய்யானது. பீகார், ஜார்கண்ட், ஜம்முவில் நாங்கள் கூட்டணியை உருவாக்கி இருக்கிறோம். பாஜகவுக்கு தான் புதிய கூட்டணிகள் அமையவில்லை.

சமூக நல்லிணக்கம் தான் எங்களது நோக்கம். பொருளாதார வளர்ச்சி குறைவது மக்களின் கோபத்தை உணர்த்துகிறது. பாஜக இதை புரிந்து கொள்வதில்லை. பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பதன் மூலம் நாடு முன்னேற்றமடையும். அதிக வேலை வாய்ப்பு தரக்கூடிய சிறு நடுத்தர தொழில்கள் இப்போது பாதிக்கப்பட்டுள்ளன. சிறு நடுத்தர தொழில் துறையில் முன்னேற்றம் அதன் மூலம் வேலைவாய்ப்பை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம்.

நாட்டின் பயங்கரவாதத்தை விட வேலையின்மை தான் பெரிய பிரச்சினையாக மக்கள் கருதுகிறார்கள். வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் மோடி அரசு முற்றிலும் தோல்வி அடைந்து விட்டது. விவசாயிகளும் விவசாயமும் இல்லாத இந்தியா வலிமையாக இருக்காது என்பது காங்கிரஸ் கட்சியின் நம்பிக்கை. காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் உற்பத்தி மாநிலமான தமிழகத்தில் வேலை வாய்ப்பை உருவாக்க முயற்சிப்போம்.

மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும். மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் ஏற்கனவே தள்ளுபடி செய்து விட்டோம். மொழி பண்பாடு ரீதியாக சிலரை புறக்கணித்துவிட்டு நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி என்பது சாத்தியமில்லை.

ரஃபேல் ஒப்பந்தம் குறித்து பாதுகாப்புத் துறை பேச்சுவார்த்தை நடத்தும் போது, பிரதமர் அலுவலகமும் பேசியது தான் பிரச்சனை. ரஃபேல் விவகாரத்தில் விசாரணை நடந்தால் அனில் அம்பானியும் பிரதமரும் குற்றவாளிகள் ஆவார்கள்.

அனில் அம்பானிக்கு 30,000 கோடி ஒப்பந்தம் கிடைக்க பிரதமர் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்.

ஒப்பந்தத்தில் உள்ள முறைகேடுகளை தான் காங்கிரஸ் கட்சி எதிர்க்கிறது. ரஃபேல் விவகாரத்தில் விமானத்தின் தரம் செயல்பாடு பற்றி காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பவில்லை. காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வரும்போது ரஃபேல் விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும்.” என்றார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com