Monday, March 4, 2019

புலிகளின் பிரித்தானிய பெரும்புள்ளி ஒன்று அரசின் பின்கதவை தட்டுகின்றது.

70 களின் பிற்பகுதி மற்றும் 80 களின் ஆரம்பத்தில் மேற்குலக நாடுகளில் குடியேறிய பல படித்த மேதாவிகள் கண்மூடித்தனமாக புலிகளை ஆதரித்தார்கள் என்பது யாவரும் அறிந்த விடயம். விடுதலைப் போராட்டம் ஆரம்பமானபோது ஆதரித்ததில் ஒரு நியாயம் இருந்தது.

ஆனால் 85 ம் ஆண்டிற்கு பின்னர் புலிகள் இயக்கம் தனது பாசிஸ கோரமுகத்தை காண்பித்து, ஏகபிரதிநிதித்துவம் என்ற சர்வாதிகாரக் கொள்கையை பிரகடணப்படுத்திய பின்னரும் அவ்வியக்கத்திற்கு ஆதரவு நல்கிய படித்த மேதாவிகள் இன்றுவரை தங்களது வரலாற்றுத் தவறு தொடர்பில் எவ்வித ஆய்வையும் மேற்கொள்ளவில்லை.

தமது பிரபல்யத்திற்காகவும் , தாங்கள் ஆரம்பித்த வியாபாரத்தை தமிழ் மக்களின் அடிமட்ட வர்க்கத்திடம் கொண்டுசெல்வதற்காகவும் அவர்கள்கள் அவ்வாறு பயங்கரவாதத்தை ஆதரித்தார்கள்.

அவ்வாறானவர்கள் புலிகளியக்கம் அழித்தொழிக்கப்பட்ட பின்னர் நாயிலிருந்து உண்ணி வெளியேறும் பாணியில் வெளியேறி எதுவுமே தெரியாத அப்பிராணிகள் போன்று செயற்படுகின்றனர். சாதாரண மக்களுக்கு புலிப்போதை ஏற்றிய மேற்படி மேற்தட்டு வர்க்கத்தினர் தாம் வழிகாட்டிய பாதையில் சென்ற மக்கள் பாதை தவறி நிற்கின்றனர் என்பதை மறந்து விட்டனர்.

அத்துடன் நின்றுவிடாது இலங்கை அரசின் பின்கதவால் உள்நுழைந்து தங்களது காரியங்களை செய்து கொள்கின்றனர். இலங்கை பிரஜைகளாக அரசுடன் இணைவதில் எந்த தவறும் இல்லை. ஆனால் அவர்களால் நிறைவேற்றப்படவேண்டிய பாரிய பணி ஒன்று இன்றுவரை கிடப்பில் போடப்பட்டுள்ளது. அப்பணி யாதெனில், இந்த மேதாவிகள் தமிழ் மக்களின் மனங்களில் பிரிவினைவாதத்தை விதைத்து ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழ் மக்கள் வாழ முடியாது என ஊட்டிய விஷத்தை இறக்கவேண்டியதாகும்.

இப்பணியை நிறைவேற்றாது தங்களது கடமைகளை நிறைவேற்றிக்கொள்ள இலங்கை அரசுடன் பின்கதவால் இணைவது வஞ்சகமானது. அந்த வரிசையில் லண்டனில் ஆலயமொன்றின் ஸ்தாபகர் ஒருவர், முன்னொருகாலத்தில் புலிகளின் தீவிர ஆதரவாளராக இருந்தவர் தற்போது ஐ.நா வின் ஸ்தாபனம் ஒன்றின் உயர் பதவிக்காக தன்னை இலங்கை அரசினூடாக சிபார்சு செய்து கொள்வதற்கு முயற்சித்து வருவதாக இலங்கைநெட் அறிகின்றது.

இலங்கை பிரஜையாக அவர் ஐ.நா வில் இலங்கை பிரதிநிதியாக பதவி வகிப்பதில் எமக்கு எந்த ஆட்சேபனையும் கிடையாது. ஆனால் அவர் கடந்தகால மனநிலையிலிருந்து மீண்டுள்ளார் என்பதற்கு இங்கே உறுதி தேவைப்படுகின்றது. 1 லட்சம் ஸ்ரேலிங் பவுண்டுகளை புலிகளுக்கு வழங்கி தமிழ் மக்களிடம் பிரிவினைவாதத்தை விதைக்க உதவிய அவர், அந்த பிரிவினைவாத போதையிலிருந்து பிரிதானியாவில் வாழும் தமிழ் மக்கள் விடுபடுவதற்கும், ஐக்கிய இலங்கைக்கு எதிரான கோஷங்களை கைவிடுவதற்கும் உழைக்கவேண்டும். அவ்வாறு அவர் பொதுவெளியில் இலங்கை நாட்டின் மீதுள்ள பற்றினை வெளிப்படுத்தும்போது, அவர் இலங்கையின் பிரதிநிதியாக செயற்படுவதற்கு தகுதியை பெறுகின்றார்.

புலிகள் இயக்கம் அழித்தொழிக்கப்பட்ட பின்னர் புலிகளின் முக்கிய தளபதிகள் மற்றும் முன்னணி ஆதரவாளர்கள் அரசுடன் இணைந்து கொண்டது யாவரும் அறிந்து கொண்ட விடயம். இருந்தபோதும் அவர்களது செயற்பாடானது இதயசுத்தியுடன் அமைந்துள்ளதாக என்ற கேள்வி இங்கு எழுகின்றது. தமது சுயலாபங்களுக்காக அவ்வாறு இணைந்து கொண்ட அவர்கள் தொடர்ந்தும் பிரித்தாளும் சூத்திரத்தையே கையாண்டு வருகின்றனர் என்பது வேதனைக்குரிய பாடத்திலிருந்து இப்பதிவு பதிவாகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com