Monday, March 11, 2019

முன்னாள் கடற்படை தளபதியிடம், எட்டுமணிநேர விசாரணை - குற்றப்புலனாய்வு திணைக்களம்

கொழும்பில் வைத்து 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான விசாரணைகள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த விசாரணைகளின் நிமித்தம், முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட இன்றைய தினம் குற்றப்புலனாவு திணைக்களத்தில் முன்னிலையானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முற்பகல் 9 மணியளவில் கோட்டை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையான வசந்த கரன்னகொடவிடம், குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் சுமார் எட்டுமணிநேரம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வாக்குமூலம் பெற்றுக்கொண்டுள்ளனர்.

கடந்த 2008 முதல் 2009 ஆம் ஆண்டுகளுக்கிடையில் கொழும்பு தெஹிவளை மற்றும் கொட்டாஞ்சேனைப் பகுதிகளில் வைத்து 11 தமிழ் இளைஞர்கள் வெள்ளை வேனில் கடத்தப்பட்டு காணாமல்ஆக்கப்பட்டனர். கடத்தப்பட்டவர்களில் 5 தமிழ் மாணவர்களும் உள்ளடங்குகின்றனர்.

குறித்த வழக்கின் 14ஆவது சந்தேக நபராக தமது பெயர் இடம்பெற்றதை அடுத்து,, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் எந்த நேரத்திலும் தம்மை கைது செய்யக்கூடும் என்பதால், வசந்த கரன்னகொட தலைமறைவாகியிருந்தார்.

எனினும் திடீரென குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தம்மை கைது செய்ய தடை விதிக்கக்கோரி, அட்மிரல் கரன்னகொட உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்து சரணடைந்தார்.

இந்த நிலையில் முன்னாள் கடற்படை தளபதி கரன்னகொடவைக் கைது செய்ய நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்ததுடன், அவரை குற்றப்புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகும்படி அழைப்பாணை விடுத்தது.

நீதிமன்றத்தின் மேற்படி அழைப்பாணையை அடுத்து, இன்றைய தினம் குற்றப்புலனாவு திணைக்களத்தில் முன்னிலையான முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொ, அங்கு எட்டுமணிநேரம் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com