மஹா சிவராத்திரியை முன்னிட்டு, மன்னார் திருக்கேதீச்சர திருத்தலத்தின் முன்னேற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி
எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறவுள்ள மஹா சிவராத்திரியை முன்னிட்டு, மன்னார் திருக்கேதீச்சர திருத்தலத்தின் முன்னேற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. மன்னார் மாவட்ட செயலகமும் ஆலய நிர்வாகமும் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் முன்னெடுத்துள்ளன.
நாட்டின் பல பாகங்களிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள், இம்முறை திருக்கேதீஸ்சர ஆலயத்திற்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருக்கேதீச்சர ஆலய புனரமைப்பு பணிகள் இடம்பெறுவதன் காரணமாக பாலஸ்தானம் செய்யப்பட்டுள்ளமையால், சுவாமியின் வெளி வீதி ஊர்வலம் இடம்பெறாது என ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். எனினும் சிவராத்திரிக்கான நான்கு கால பூஜைகள் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழிபாடுகளை சிறப்பிக்கும் பொருட்டு வேத பாராயங்கள், திருமுறை பாராயங்கள், நாம அர்ச்சனைகளும் இடம்பெறும். நான்காவது கால பூஜையின் போது வசந்த மண்டப தீபாராதனை நடைபெறும். கேதீஸ்வர பெருமாள் வீற்றிருக்கும் பாலாவியில் பக்தர்கள் தீர்த்தம் ஆடுவதற்கான விசேட ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அத்துடன் பக்தர்களின் நலன் கருதி விசேட போக்குவரத்து, சுகாதாரம், அன்னதானம், மின்சாரம் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment