Monday, March 11, 2019

ரயில்களில் யாசகம் பெற்று மூன்று வீடுகளைக் கட்டிய குருடர்.

கம்பஹா - கொழும்புக்கு இடையில் சேவையில் ஈடுபடும் ரயில்களில் 25 வருடங்களாக யாசகம் பெற்று, மூன்று வீடுகளைக் கட்டிய கண்பார்வையற்ற யாசகர் ஒருவர் குறித்த உண்மைச் சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

கம்பஹாவைச் சேர்ந்த 65 வயதுடைய குறித்த யாசகர், மாத வருமானமாக ஒன்றரை இலட்சத்துக்கும் மேலாக சம்பாதித்துள்ளார்.

கடந்த வாரம் கொழும்பு கோட்டை நிலையத்தில் வைத்து குறித்த யாசகர், ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டார். "பொது இடங்களில் பிச்சை எடுக்கக்கூடாது" என்று தெரிவித்தே இந்த கைது இடம்பெற்றது.

அங்கு அவரிடம் அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டபோது, அதிர்ச்சியான தகவல்கள் குறித்த யாசகர் மூலமாக வெளிவந்துள்ளன.

கடந்த 25 வருட காலமாக, கம்பஹா - கொழும்பு ரயில் நிலையங்களுக்கிடையில், தான் யாசகம் பெற்று வருவதாகவும், ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட நான்கு, ஐந்தாயிரம் ரூபா வரையிலும் சம்பாதித்து வருவதாகவும் யாசகர் தெரிவித்திருக்கின்றார்.

மேலும், இவ்வாறு கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு, மூன்று வீடுகள் கட்டியுள்ளதுடன், அவற்றில் இரண்டினை மகள்மாருக்கு சீதனமாக எழுதிக் கொடுத்துவிட்டு, மற்றொரு வீட்டில் தான் வசித்து வருவதாகவும் யாசகர் கூறியுள்ளார்.

இதேவேளை, யாசகரது வங்கிக் கணக்கில் ஐந்து இலட்சம் ருபா வைப்பிலிடப்பட்டுள்ளதாகவும், யாசகம் பெறுவதற்காக தினமும் முச்சக்கரவண்டியிலேயே ரயில் நிலையங்களுக்கு வந்து செல்வதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

இவை அனைத்தையும் அதிர்ச்சி மாறாத கண்களோடு கேட்டுக் கொண்டிருந்த ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள், யாசகரை அழைத்துச் செல்வதற்காக அவரது மகள் ஒருவரை அங்கு வருமாறு அழைத்துள்ளனர்.

இதன்படி, யாசகரது மகள் கார் ஒன்றில் வந்து இறங்கியுள்ளதுடன், அவருடன் அவரது தந்தையாரான குறித்த யாசகர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.

தனக்குக் கண்பார்வை தெரியாமல் போனமையானது, தான் தனது வாழ்வில் பெற்ற பெரும் ஆசீர்வாதமாகவே அமைந்துள்ளதாக, அந்த யாசகர் ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகளிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com