இரண்டு மாதங்களில் மட்டும், தொடரூந்து விபத்தில் சிக்கி 64 உயிர்கள் காவுகொள்ளப்பட்டுள்ளன - தொடரூந்து திணைக்களம்
கடந்த இரண்டு மாதங்களில் மாத்திரம், தொடரூந்துகளில் மோதி 64 பேர் பலியாகியுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நாள் ஒன்றுக்கு தொடருந்து விபத்தில் சிக்கி இரண்டு பேர் வீதம் மரணிப்பதாக, தொடரூந்து பாதுகாப்பு அதிகாரி அநுர பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.
இந்த அவலத்தை போக்க, தொடரூந்து விபத்துக்களை முடிந்தவரை தடுக்க வேண்டும். அதற்கான முக்கியமான நடவடிக்கைளை தற்போது தொடரூந்து திணைக்களம் முன்னெடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
குறிப்பாக தொடரூந்து தண்டவாளத்தில் நடை பயணம் மேற்கொள்ளுதல் தொடர்பாக, எழுதப்பட்ட சட்டத்தை நடைமுறைப்படுத்த, தொடரூந்து திணைக்களம் தீர்மானித்துள்ளது.
குறித்த சட்டத்தின் படி, தண்டவாளத்தில் நடை பயணம் மேற்கொள்கின்றவர்களை உடன் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் இனிவரும் காலங்களில் இறுக்கமான முறையில் இடம்பெறும் என, தொடரூந்து பாதுகாப்பு அதிகாரி அநுர பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.
தண்டவாளத்தில் நடை பயணம் மேற்கொள்வதன் மூலம்,அதிக உயிரிழப்புக்கள் ஏற்படுகின்றன. இதனை கட்டுப்படுத்த, சட்டத்தை கட்டாயமாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
தண்டவாளத்தில் பயணித்தல் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்தியவாறு பயணித்தல், முறையற்ற விதத்தில், தண்டவாளத்தில் வாகனத்தை செலுத்துதல், தொடரூந்து முன் சுயப்படம் எனப்படும் செல்பி எடுத்தல் போன்றன தொடருந்து விபத்துக்களுக்கான முதன்மைக் காரணங்களாகும்.
இதேவேளை தற்போது இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் புதிய இயந்திர தொடரூந்துகள், அதிக சத்தங்களை எழுப்புவதில்லை. தண்டவாளத்தில் பயணிப்பவர்களுக்கு கூட, தொடருந்தின் சத்தம் கேட்காது. எனவே இத்தகைய தொடரூந்து விபத்துக்களின் உயிரிழப்புக்கள் மேலும் அதிகரித்துக் கொண்டு செல்லும் அபாயம் உள்ளது. இதனை கட்டுப்படுத்த தொடரூந்துகளுக்கான சட்டத்தை இறுக்கமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என,
இவ்வாறான நிலைமைகளைக் கருத்திற்கொண்டே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, தொடரூந்து பாதுகாப்பு அதிகாரி அநுர பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment