Wednesday, February 20, 2019

சர்வதேச நாணய நிதியத்தின் கண்காணிப்பு அறிக்கை இன்று கையளிப்பு

ஐந்தாம் கட்ட கடன் தொகையை வழங்குவது தொடர்பான, சர்வதேச நாணய நிதியத்தின் கண்காணிப்பு அறிக்கை இன்று கையளிக்கப்படவுள்ளது.
இந்தத் தகவலை நிதி அமைச்சு வெளிப்படுத்தியுள்ளது.

குறித்த கடன் தவணை தொடர்பான பேச்சுவார்த்தையை மேற்கொள்வதற்காக இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை அதிகாரிகள் மற்றும் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்று இருந்ததுடன், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர்களுடனும் கலந்துரையாடல்களை அவர்கள் மேற்கொண்டிருந்தனர்.

இந்த கலந்துரையாடல்களின் போது இலங்கையின் மறுசீரமைப்புப் பணிகள் தொடர்பான முன்னேற்றத்தை சர்வதேச நாணய நிதியம் பாராட்டியுள்ளதோடு, குறித்த பணிகளுக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்குவதாகவும் நிதியம் உறுதியளித்துள்ளது.


இதனிடையே 2016 ஆம் ஆண்டு இலங்கைக்கு அனுமதி வழங்கப்பட்ட மூன்று வருட கடன் திட்டத்தின் கீழ் இதுவரை நான்கு தவணைகளில் நிதி கிடைக்கப்பெற்றுள்ளது. எனினும், கடன் திட்டத்தின் இறுதி தவணைக்கான கொடுப்பனவு கடந்த நவம்பர் மாதத்தில் வழங்கப்பட வேண்டிய நிலையில், நாட்டில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி நிலை காரணமாக அதனை நிறுத்தியிருந்தனர்.

எவ்வாறாயினும், கடந்த ஜனவரி மாதம் நிதி அமைச்சர் மங்கள சமரவீர உள்ளிட்ட குழுவினர் சர்வதேச முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டின் லகார்டுடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் பின்னர் கடனை மீண்டும் வழங்குவதற்கு சமிஞ்சை வெளியானது. இதன்போது ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக பெப்ரவரி மாதம் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இலங்கைக்கு வருவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் பிரகாரம், இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், இலங்கை அரசாங்கம் வறிய மக்கள் தொடர்பில் கவனம் செலுத்தாமல், சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை நடைமுறைப்படுத்துவதாக ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதி யுவான் பெப்லோவை மேற்கோள் காட்டி ”த ஐலன்ட்” பத்திரிகை செய்தி வௌியிட்டிருந்தது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com