Sunday, February 24, 2019

நாடாளுமன்ற உறுப்பினர்களில், ஒருவரேனும் போதைப்பொருளை பயன்படுத்துவதாக நான் நினைக்கவில்லை - ரவி கருணாநாயக்க

போதைப்பொருள் பயன்படுத்தும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளதாக, ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க கருத்து வெளியிட்டதை அடுத்து, பெரும் சர்ச்சை தோன்றியுள்ளது. இவரது கருத்துக்கு பல அரசியல் பிரமுகர்கள் கடும் கண்டனத்தை வெளியிட்டு வருகின்றனர்.

ரஞ்சன் ராமநாயக்கவின் கருத்து தொடர்பில், மின்வலு, எரிசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்கவும் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் போதைப்பொருள் பயன்படுத்துவதாக பெயர் குறிப்பிடாது, உறுப்பினர்கள் மீது குற்றஞ்சாட்டுவதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாதென மின்வலு, எரிசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

எனவே போதைப்பொருள் பயன்படுத்துவதாக கூறப்படும் அமைச்சர்கள் அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை வெளியிட்டு உறுதிப்படுத்த வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

கித்துல்கல யட்டிபேரிய பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுவரும் புரோட்லேன்ட் நீர்மின் உற்பத்தி நிலையத்தினை நேற்றைய தினம் நேரில் சென்று பார்வையிட்ட அமைச்சர் ரவி கருணாநாயக்க ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே இதனை கூறினார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அவதூறு ஏற்படுத்துவதை நான் முற்றாக நிராகரிக்கின்றேன்.

நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரேனும் போதைப்பொருளை பயன்படுத்துவதாக நான் நினைக்கவில்லை. அவ்வாறு பயன்படுத்துவார்களாயின் பெயர் குறிப்பிட்டு அதனை நிரூபிக்க வேண்டும்.

அப்படியில்லாமல், நாடாளுமன்ற உறுப்பினர்களின் விம்பத்தை இல்லாது செய்வதற்கு, ஒருபோதும் இடமளிக்க முடியாது என, மின்வலு, எரிசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை பாராளுமன்றத்திற்குள் போதைப் பொருள் பயன்படுத்துவோர் இருந்தால், அவர்களுக்கு இரத்தப் பரிசோதனை செய்ய முடியும் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

கம்பஹா பிரதேசத்தில் வைத்து ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட போதே, அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

போதைப் பொருள் பயன்படுத்தியவர்கள் போன்று, சிலர் பாராளுமன்றத்திற்குள் செயற்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

எனினும் அரசாங்கத்தில் உள்ள எந்தவொரு அமைச்சரும் போதைப் பொருள் பயன்படுத்துவதாக தான் நம்பவில்லை என்றும், அது தொடர்பில் நாய் போன்று மோப்பம் பார்த்து கூற முடியாது என்றும் கூறியுள்ளார்.

எனினும் சந்தேகம் இருந்தால் இரத்தப் பரிசோதனை செய்து அறிக்கை ஒன்றை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா கூறியுள்ளார்

இதனிடையே ஐக்கிய தேசியக் கட்சியில் போதைப்பொருள் பயன்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்களா? எனக் கண்டறிவதற்கு குழு அமைத்ததே, ரஞ்ஜன் ராமநாயக்கவின் குற்றச்சாட்டை ஏற்றுக் கொண்டதற்கு சமனாகும் என, பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்தார்.

ஆனால், பொதுஜன பெரமுனவில் கொக்கேன் பயன்படுத்தும் எவரும் இல்லை என அவர் மேலும் குறிப்பி்ரட்டுள்ளார்.

இதேவேளை கொக்கைன் போதைப் பொருள் உட்பட ஆபத்தான ரக போதைப் பொருட்களைப் பயன்படுத்தும் எவரும் பாராளுமன்றத்தில் இல்லையென, சபை முதல்வர் அமைச்சர் லக்ஷ்மன் கியெல்ல தெரிவித்துள்ளார்.

கண்டி, பாததும்பர பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையில், அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

''நான் 30 வருடங்களுக்கு மேலாக பாராளுமன்றத்தில் இருக்கிறேன். பாராளுமன்ற உறுப்பினர்களை நன்றாக ஆய்வு செய்துள்ளேன். இந்தப் பாராளுமன்றத்தில் கொக்கேன் பயன்படுத்தும் எவரும் இல்லையென்பதை மனதில் கையை வைத்துக் கொண்டு, கூற முடியும்'' எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com