Monday, February 11, 2019

புலிகள் மக்களுக்கு செய்த கொடுமைகள் பற்றி வன்னி சென்று மக்களிடம் கேளுங்கள். இந்திய ஊடகங்களுக்கு மஹிந்த .

இந்தியாவிற்கு உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள எதிர் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவிடம் இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படுகின்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக கேட்கப்பட்டபோதே அவர் மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.

அவர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் :

இறுதிப்போரில் இராணுவம் போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லை. பாதுகாப்புத்தேடி இராணுவம் கட்டுப்பாட்டு பகுதிகளுக்கும் தப்பியோடி வந்த தமிழ் மக்களை புலிகளே சுட்டுக் கொன்றார்கள்.

விடுதலைப்புலிகளின் பிடியில் சிக்கித் தவித்த தமிழ் மக்களை மீட்கும் பணி 2009ஆம் ஆண்டு மே மாதம் 18, 19ம் திகதிகளில் நிறைவுக்கு வந்தது. சர்வதேச விதிமுறைகளிற்கு அமையவே இந்த நடவடிக்கையை எடுத்தோம். இதற்கு இந்தியா உட்பட பல நாடுகள் எமக்கு உதவி செய்தார்கள்.

வன்னியில் விடுதலைப் புலிகளின் பகுதிகளை நோக்கி இராணுவம் நடத்திய தாக்குதல்களில் சில பொதுமக்கள் கொல்லப்பட்டு இருக்கலாம். போர் நடவடிக்கைகளின் போது இது தவிர்க்க முடியாதது. ஆனால் மக்களை மீட்டெடுக்கும் இறுதிப்போரில் இராணுவம் போர் குற்றங்களில் ஈடுபடவில்லை.



பாதுகாப்புத் தேடி இராணுவத்தின் கட்டுப்பாட்டு பகுதிகளுக்குள் தப்பியோடி வந்த ஆயிரக்கணக்கான தமிழ் மக்களை விடுதலைப் புலிகளே சுட்டுக் கொன்றார்கள். இதுதான் உண்மை. உயிர்தப்பி தற்போது வாழும் அந்த பகுதி மக்களிடம் கேட்டுப்பாருங்கள். அவர்கள் அப்போது நடந்த உண்மையைச் சொல்வார்கள். விடுதலைப் புலிகள் தங்களை எப்படி கேவலமாக நடத்தினார்கள் என்பதை அவர்கள் கூறுவார்கள்.

வீடுகளுக்குள் புகுந்து வலுக்கட்டாயமாகச் சிறுவர், சிறுமிகளை பிடித்து இயக்கத்தில் சேர்த்தார்கள். தமது சொல்லை கேட்காத போராளிகளையும் சுட்டுக் கொன்றார்கள். சிலரை காணாமல் போகச்செய்தார்கள்.

இறுதிப் போரில் இசைப்பிரியாவையும் பாலச்சந்திரனையும் இராணுவம் கைது செய்து சுட்டுக் கொன்றது என்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை. போலி காணொளிகளையும், ஒலிநாடாக்களையும் வைத்து படையினர் மீது குற்றச்சாட்டுகளை முன் வைக்க வேண்டாம்.



பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் சிறுவன் அல்ல. அவர் ஒரு போராளி. அவருக்கு ஐந்து மெய்ப்பாதுகாவலர்களை பிரபாகரன் நியமித்திருந்தார். அதேவேளை, இசைப்பிரியாவும் ஆயுதம் தூக்கிய ஒரு போராளி. அவருக்கு புலிகள் அமைப்பினர் சூட்டிய பெயர்தான் இசைப்பிரியா.

இறுதிப்போரில் இராணுவத்திடம் சரணடைந்த புலிகள் அமைப்பின் 12,500 போராளிகளுக்கு புனர்வாழ்வளித்து விடுதலை செய்தோம். இப்படி செய்த எம் மீதும் இராணுவத்தின் மீதும் சில சர்வதேச அமைப்புகளும், சில நாடுகளும் போர்க் குற்றச்சாட்டுக்களை சுமத்துவது நியாயமா?

ஐ.நா மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், புலம்பெயர் புலிகள் அமைப்புகளின் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் நிறைவேற்றப்பட்டவை. எம்மை பழிதீர்க்கும் வகையில் புலிகள் அமைப்புக்கள் தயாரித்த இந்த நிகழ்ச்சி நிரலுக்கு சில சர்வதேச அமைப்புக்களும், சில நாடுகளும் துணை போனதை நினைக்கும்போது கவலையாக உள்ளது. இந்த தீர்மானங்களை வைத்து எமது இராணுவத்தை தண்டிக்க நாம் அனுமதிக்க மாட்டோம்' என்றார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com