அமைச்சர்களே நீங்கள் மறுபிறப்பில் பன்றி , கோழி , மாடுகளாக பிறப்பீர்கள்! இந்நாட்டு மக்கள் உங்களை கொன்று உண்பார்கள்.
எனது குலத்தை காண்பிப்பதற்காக தேர்தல் வாக்குச் சாவடிக்கு செல்லும் வழியிலுள்ள மின்கம்பங்களில் மேளங்களை தொங்கவிட்டார்கள். இருந்தபோதும் மாத்தறை மக்கள் எனக்கு 99762 வாக்குகளை வழங்கினார்கள் என்று மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நிரோசன் பிறேமரட்ண தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் பாராளுமன்ற விவாதம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் மிகவும் ஆணித்தரமான கருத்துக்களை பதிவு செய்து பேசுகையில் :
எங்கள் ஊரிலே வினிதா சமரசிங்க குணசேகர என்றொரு பெண் இருந்தார். அவர் பொலிஸ் கொஸ்தாபலாக கடமையாற்றும்போது, ஒரு தமிழ் இளைஞனை மணந்து கொண்டார். அந்த இளைஞன்தான் பின்னாளில் புலிகளின் பொலிஸ் அதிபராகவும் அரசியல் துறைப் பொறுப்பாளராகவும் நடேசன் எனும் பெயரில் அடையாளம் காணப்பட்டார்.
வினிதா சமரசிங்க குணசேகரவின் கணவன் பிரபாகரனின் அரசியல்துறை தலைவன் என அறிந்து கொண்ட பின்னர் நாங்கள், அவரது வீட்டுக்கு கல்லெறிந்து விரட்டவில்லை. அவர்கள் அங்கு வாழும்போது அவர்களது நல்ல கெட்ட விடயங்களில் பங்குகொள்ளாமல் ஒதுக்கி வைக்கவில்லை.
யுத்தம் முடிவடைந்த பின்னர் எனக்கும் இன்னும் ஞாபகம் உண்டு அப்போது, சுயாதீன ரூபவாஹினியில் இருந்தேன். பிரபாகரனின் தகப்பனாரை கொண்டுவந்து பனாகொட வைத்தியசாலையில் வைத்தியம் செய்தார்கள். பின்னர் அவர் மரணித்தபோது எமது படை வீரர்கள் விம்பி விம்பி அழுவதை நான் பார்த்தேன்.
இன்று நான் மதுஸ்ஸின் தந்தையாரின் மரண வீட்டிற்கு சென்றது பற்றி விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றது. நான் அந்த மரண வீட்டிற்கு சென்றது மதுஸ் என்ற மனிதனுக்காக அல்ல. நான் அங்கு சென்றது எனது மனிதாபிமானத்திற்காக. கம்புறுபிட்டிய கிரமாத்திற்கும் எனக்கும் மிகுந்த நெருக்கம் உள்ளது. எனது தந்தை கம்புறுபிட்டிய வைத்திசாலையில் 17 வருடங்கள் தொழில்புரிந்தார். அவர் அங்கு தொழில்புரிந்த காலத்தில் அவர் செய்தவேலை யாதெனில் கம்புறுபிட்டிய வை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்களின் சிரங்குகளை கழுவியதாகும். அதற்காக அந்த மக்கள் எம் மீது அளவுகடந்த அன்பு செலுத்தினார்கள். அவ்வாறு அன்பு செலுத்திய மனிதர்களில் ஒருவரது மரண வீட்டிற்கே நான் சென்றேன். அது எனது மனிதாபிமானம் தொடர்பான விடயம். நாளை மதுஸ் மரணித்து அவரது உடலம் எங்காவது வைக்கப்பட்டிருந்தால் அவரது மரணவீட்டிற்கும் நான் செல்வேன்.
ரஞ்சன் ராமநாயக அவர்கள் தனது முகநூலிலே நான் ரின்டி என்றொரு ஹோட்டலை ஆரம்பித்துள்ளதாகவும் அதற்கு 8 கோடிகள் செலவாகியுள்ளதாகவும் அவ்வளவு பணம் எங்கிருந்து கிடைத்தது என்ற கேள்வியையும் எழுப்பியிருந்தார்.
நான் இன்று உங்களுக்கு ஒன்றை கூறவிரும்புகின்றேன். நாம் கடந்த 34 வருடங்களாக ஒரு வீட்டில் குடியிருக்கின்றோம். அது அரச காணி அதற்கு இதுவரை எங்களுக்கு உறுதிகூடக்கிடைக்கவில்லை. அவ்வாறு எமது கிராமத்தில் 58 குடும்பங்கள் உறுதிகள் இன்றி வாழ்கின்றனர். நான் விரும்பியிருந்தால் எனக்குரிய உறுதியை பெற்றுக் கொண்டிருக்க முடியும் அனாலும் நான் அவ்வாறு செய்ய மாட்டேன். எனது கிராமத்திலுள்ள 58 பேருக்கும் கிடைக்கும்போது நானும் அதை பெற்றுக்கொள்வேன்.
நான் ஆரம்பித்திருக்கும் வியாபரம் வாடகை கட்டிடம் ஒன்றிலேயே ஆரம்பித்துள்ளேன். அவுஸ்திரேலியாவில் இருக்கும் வைத்தியர் ஒருவருக்கு சொந்தமான அந்த கட்டிடத்தை எடுத்துவிட்டு வியாபரத்தை ஆரம்பிப்பதற்கு போதிய முதல் இன்றி 6 மாதங்கள் இயங்கமுடியாத நிலையில் இதே பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் உள்ள மக்கள் வங்கிக்கு சென்று கடன்தருமாறு வேண்டினேன். சொத்துக்கள் இன்றி கடனொன்றை பெற்றுக்கொள்ள முடியாது என்றார்கள். அதன் பின்னர் என்னுடைய நண்பர் ஒருவரிடம் இதுபற்றி கூறினேன். அவர் தனது காணி ஒன்றை இந்த வங்கியில் அடகு வைத்து எனக்கு தேவையான பணத்தை கொடுத்தார். அந்த கடனை இன்றும் இதே கட்டிடத்திலுள்ள கீழ்மாடியில் மீழச் செலுத்திக்;கொண்டிருக்கின்றேன்.
ஜேவிபி யே என்மீதான சேறடிப்புக்கு அத்திவாரமிட்டது. நாங்கள் ஒருபோதும் களவெடுத்து பழகியவர்கள் அல்ல. நான் க.பொ.த (சா.த) செய்யும்போது மாவரெல்ல சந்தையில் நாட்டாமி வேலை செய்துகொண்டிருந்தேன். எனது குடும்பத்தில் 5 பேர் பாடசாலைக்கு செல்லவில்லை. அவர்கள் 4ம் 5ம் வகுப்புடன் படிப்பை நிறுத்திக்கொண்டனர். அவர்களுக்கு அதற்கான பொருளாதாரம் இருக்கவில்லை.
நான் பாடசாலைக்கு சென்றுகொண்டிக்கும்போது எனது குலத்தை சொல்லி என்னை கல்லால் அடித்திருக்கின்றார்கள். ஆனால் அந்தப்பக்கம் திரும்பிப்பார்க்கவில்லை காரணம் திருப்பிப்பார்த்தால் அவ்விடத்திலேயே நான் நிற்கவேண்டி வரும் என்பதால். நான் மாத்தறை மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டபோது, அந்த மாவட்டத்தை சேர்ந்த அரசியல்வாதிகள் இருவர் வாக்கடுப்பு நிலையங்கள் இரண்டுக்கு செல்லும் பாதைகளில் உள்ள மின்கம்பங்களில் மேளங்களை தொங்கவிட்டு இவனுக்காக 'சேர்' சொல்லப்போகின்றீர்கள் என்று எழுதியிருந்தார்கள். ஆனாலும் மாத்தறை மாவட்ட மக்கள் அதை கேட்கவில்லை அவர்கள் எனக்காக 99762 விருப்பு வாக்குகளை தந்தார்கள்.
எனது மூதாதையர்கள் தலதா மாளிகையில் மேளம் அடித்ததையிட்டு தான் பெருமைப்படுகின்றேன். எவருக்கும் அது பிரச்சினையாக இருக்கலாம் அனாலும் அது எனக்கு பெருமைக்குரியவிடயம்.
எனக்கு எந்தச் சந்தர்ப்பத்திலும் மதுஸ்போன்றவர்களை நியாயப்படுத்தவேண்டிய தேவை இல்லை. ஆனால் மதுஸ் போன்றவர்கள் இந்நாட்டில் உருவாகாது தடுக்கவேண்டும். பிரபாகரன் என்ற ஒரு மனிதர் உருவானார். லட்சக்கணக்கான மக்களின் உயிர்கள் காவுகொள்ளப்பட்டது. ஆனால் இன்றுவரை எவராவது ஆய்வொன்றை மேற்கொண்டு பிரபாகரன் உருவானதற்கு இதுதான் காரணம் என்று கூறியுள்ளார்களா? இல்லை.
ஆனால் இந்த நாட்டிலே பிரச்சினை ஒன்று இருக்கின்றது. அந்த பிரச்சினைக்கு ஓர் தீர்வு வேண்டும். அந்த தீர்வு எங்கிருந்தோ ஒரிடத்தில் ஆரம்பிக்கப்படவேண்டும்.
அந்தவகையில் நான் இங்கிருந்து மதுசுக்கு விடுக்கும் கோரிக்கை யாதெனின். மதுஸ் என்றோ ஒருநாள் மரணிக்கத்தான் போகின்றார். ஆனால் அவர் அதற்கு முன்னர் இந்தநாட்டிலே அவருக்கு யாருடன் தொடர்பு உள்ளது. அவருக்கு உதவி புரிபவர்கள் யார்? அவர் யார் யாருக்கு உதவி புரிந்துள்ளார் என்பதை இந்த நாட்டுமக்களுக்கு அறிவிக்கவேண்டும்.
நாம் இந்த நாட்டிலே இன்னும் மதுஸ் போன்றவர்கள் உருவாவதை தடுக்கவேண்டும். அவர்கள் எவ்வாறு உருவானார்கள் என்பதை அறியவேண்டும். மதுஸ் இன் தாயார் ஜேவிபி யின் பிரபல ஆதரவாளர். அவரை 1988 ம் ஆண்டு பிறேமதாஸ் ஆட்சிக் காலத்தில் அரச படைகள் சுட்டுக்கொன்றார்கள். அத்துடன் அவரது தந்தையர் வேறு திருமணம் ஒன்று செய்து கொண்டார். அந்நிலையில் பிறிதொருவரிடம் வளர்ந்தவர் மதுஸ். ஆனால் ஜேவிபி தனது ஆதரவாளர் சுட்டுக்கொல்லபட்டபின்னர் அந்த குடும்பத்தில் நிலை தொடர்பில் எவ்வித கவனமும் செலுத்தவில்லை. அவர்கள் அவ்வாறு கவனம் செலுத்தியிருப்பார்களானால் இன்று மதுஸ் போன்றவர்கள் உருவாக வாய்ப்பிருந்திருக்காது. அமெரிக்க இராணுவத்தால் யப்பான் மீது வீசப்பட்ட அணுகுண்டுகளின் விசம் தற்போதும் அந்த நாட்டிலே உள்ளது. அவ்வாறே இந்த நாட்டில் ஜேவிபி உருவாக்கிய வன்செயலின் தாக்கம்தான் மதுஸ்போன்றவர்கள்.
நான் இந்த பாராளுமன்றில் பேசிக்கொண்டிருக்கின்றபோது, இவ்விடத்திலிருந்து 500 மீட்டர் தூரத்திலுள்ள கிம்புலாகல சந்தியில் எனது மூத்த அண்ணர் கையிலே எண்ணை பொக்களங்களுடன் வடை சுட்டுக் விற்றுக்கொண்டிருக்கின்றார். நாங்கள் ஒரு மனிதனின் வெற்றிலை ஒன்றைக்கூட களவெடுத்தவர்கள் இல்லை. உழைத்து சாப்பிட்டு பழகிய மனிதர்கள். நான் இந்த பாராளுமன்றுக்கு வந்தது உங்களுடைய நிகழ்சி நிரலுக்கு செயற்பட அல்ல.
இந்த பாராளுமன்றிலே இன்று என்ன நடக்கின்றது. இருதரப்பினரும் மாறி மாறி விரல்களை நீட்டுகின்றனர். அதை விடுத்து இந்த நாட்டை முன்னேற்ற முன்வரவேண்டும் அதை செய்ய எம்மால் முடியும். அதற்கு தேவையானது, நேர்மையான மனதும் சிந்தனையும் மாத்திரமே.
இந்தநாடு சுதந்திரம் பெறும்போது ஒருகோடியே இருபத்தையந்து லட்சம் தங்கப்பவுண்கள் இருந்த நாடு இது. இன்று நாம் எதை வைத்துள்ளளோம்.
1978 ஆம் ஆண்டு யாப்பின் ஊடாக இந்த நாட்டிலே கள்வர்களும், போதைப்பொருள் வியாபாரிகளும், கொலைகாரர்களும் உருவானார்கள். 1978 ம் மகாவலி திட்டத்திற்காக உலகவங்கியாலும் சர்வதேச நாணய நிதியத்தாலும் அபிவிருத்திக்கென பணம் வாரி வழங்கப்பட்டது. ஆனால் வேலைகள் எதுவும் எதிர்பார்த்த வேகத்தில் செல்லவில்லை. அவர்கள் தங்களது பிரதிநிதிகளை பரிசோதனைக்கு அனுப்பினார்கள். இங்குவந்து பரிசோதனை மேற்கொண்டவர்கள் ஒர் அறிக்கையிட்டார்கள். அந்த அறிக்கையில் வழங்கப்பட்ட நிதியில் 40 வீதம் செலவிடப்பட்டுள்ளது ஏனைய பணம் அரசியல்வாதிகளதும் அரச அதிகாரிகளதும் பைக்குச் சென்றுள்ளது என தெரிவித்திருந்தார்கள். இந்த நாட்டின் சொத்துக்களை கொள்ளையிடுதல் 1978ல் ஆரம்பமானது.
இந்த நாட்டை திருத்தவேண்டுமாக இருந்தால் செய்யவேண்டிய இருவிடயங்களே உண்டு. ஒன்று நிர்வாக கட்டமைப்பை மாற்றியமைத்தல் மற்றது நீதி (சட்ட) வியூகத்தை மாற்றியமைத்தல். நாம் கள்வர்கள் உருவாகின்ற ஓட்டைகளை அடைக்கவேண்டும். அதன் பின்னர் அந்த கள்ளர்கள் நிர்வாகத்திலுள்ள ஓட்டையினூடாக பாய்கின்றபோது அவர்களை சட்டத்தினூடாக வளைத்துப்பிடித்து கட்டிப்போடுகின்ற வியூகம் ஒன்றை நாம் அமைத்துக்கொள்ளவேண்டும். ஆனால் இதை செய்யமாட்டார்கள். ஏனென்றால் அவர்களுக்கு அதிகாரத்தை கையில் வைத்துக்கொள்ளவேண்டும்.
இவர்கள் நல்லாட்சி என்றுதான் வந்தார்கள். ஆனால் எங்கள் அடிமனதிலும் அவ்வாறான ஒன்று வேண்டுமென்றுதான் எதிர்பார்த்தோம். மத்திய வங்கியின் பிணைமுறி கொள்ளை இடம்பெற்றபோது ரணில் விக்கிரமசிங்கவின் மனச்சாட்சி எங்கே போனது.
இந்த நாட்டிலே நீதியை பற்றியும் அதை நடைமுறைப்படுத்துகின்ற நீதிபதிகள் பற்றியும் என்னிடம் கேள்விகள் உண்டு. நீதி தேடுகின்ற முன்றாம் தரத்து மக்கள் எங்கே நீதி தேடிச் செல்வது. இந்த நாட்டிலே நீதி எங்கே உள்ளது.
நான் ஒரு பௌத்தன். இந்த பாராளுமன்றிலே இருக்கின்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள் நீங்கள் யாவரும் எமது மக்களின் சொத்துக்களை தின்னுகின்றீர்கள். மாபெரும் பாவத்தை செய்கின்றீர்கள். பௌத்த தத்துவங்களின்படி நீங்கள் யாவரும் அடுத்த பிறப்பிலே இந்த நாட்டில் கோழி, பன்றி , மாடுகளாக பிறப்பீர்கள். இந்த நாட்டு மக்கள் உங்களை உணவுக்காக கொன்று உண்பார்கள்.
0 comments :
Post a Comment