Wednesday, February 6, 2019

கேப்பாபிலவு பிரச்சினையை அரச சார்பற்ற நிறுவனங்கள் பூதாகாரமாக்கி வருகின்றன - சுரேன் ராகவன்.

முல்லைத்தீவு - கேப்பாபிலவு மக்களின் பிரச்சினையை, சில அரச சார்பற்ற நிறுவனங்கள் பூதாகாரமாக்கி வருவதாகவும், அதன் காரணமாகவே சரியான தீர்வு காண முடியாமல் போவதாகவும், வட மாகாண ஆளுநர், கலாநிதி சுரேன் ராகவன் குற்றம் சுமத்தியுள்ளார்.

வடக்கில் சுமார் பன்னிரெண்டு இலட்சம் மக்கள் வாழ்ந்து வருகின்ற போதிலும், ஊடகங்களும், அரச சார்பற்ற நிறுவனங்களும், வெறுமனே 56 பேரின் பிரச்சினையை ஊதிப் பெரிதாக்கி, அதனைப் பிரச்சாரம் செய்து வருவதாக வட மாகாண ஆளுநர் குற்றம் சுமத்தியுள்ளார்.

மொத்தமாக 8600 சதுர கிலோ மீற்றர் பரப்பினைக் கொண்ட வடக்கில், 934 கிராம சேவைப் பிரிவுகள் உண்டு. அத்துடன் வடக்கில் 3885 கிராமங்கள் இருக்கின்ற போதிலும், கேப்பாபுலவு கிராமம் பற்றி மட்டுமே பேசப்படுகின்றன. கேப்பாபிலவு பிரச்சினையின் பின்னணியில், தெளிவான ஓர் அரசியல் நடவடிக்கை உள்ளது. அதன் காரணமாக இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியவில்லை எனவும், அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

இந்தக் கிராமத்திற்கு இரண்டு கிலோ மீற்றர் தொலைவில் காணிகள் வழங்குவதற்கு இணங்கப்பட்ட போதிலும், இந்த கிராமத்தில் உள்ள மக்கள் அதனை நிராகரித்துள்ளனர்.

குறித்த பகுதி, இராணுவ தந்திரோபாய ரீதியில் முக்கியமான ஓர் தளம் என்று இராணுவம் கூறி வருவதாகவும், அது பற்றி வாதிடுவதற்கு தாம் இராணுவப் படைவீரன் கிடையாது எனவும், சுரேன் ராகவன் குறிப்பிட்டுள்ளார்.

கேப்பாபிலவு மக்கள் வேறு ஒரு மாற்று யோசனைத் திட்டத்தை முன்மொழிய வேண்டியது இன்றியமையாததாகும். குறித்த பகுதி தமக்கு தேவையானது என, இராணுவம் கூறினால் அதற்கு எவராலும் சவால் விடுக்க முடியாது.

சரியான தீர்வுத் திட்டமொன்றை நோக்கி நகரும் போது, காணி உரிமையாளர்கள், வெறுமனே கோரிக்கைகளை முன்வைத்து வருவதனால் தீர்வு எட்டுவதில், பல சிரமங்கள் நிலவி வருவதாக வடமாகாண ஆளுனர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கேப்பாப்பிலவு மக்களின், ''எமது நிலம் எமக்கு வேண்டும்'' என்ற தொடர் போராட்டம், கடந்த 706 நாட்களாக நடைபெற்று வருகின்றது. சுமார் 110 குடும்பங்களைச் சேர்ந்தவர்களின் 171 ஏக்கர் பாரம்பரிய நிலப்பரப்பு, இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அந்த மக்கள், தமது பூர்வீக நிலங்களை மீட்க தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com