Sunday, February 17, 2019

பிரித்தானியாவில் தஞ்சம் கோரும் இலங்கை ஏதிலிகள் குறித்து, விசேட தீர்மானம் - பிரித்தானிய மேன்முறையீட்டு நீதிமன்றம்.

பிரித்தானியாவில் ஏதிலி அந்தஸ்த்து கோரி விண்ணப்பிக்கும் இலங்கையர்கள் தொடர்பாக, பிரித்தானிய மேன்முறையீட்டு நீதிமன்றம் முக்கிய தீர்ப்பொன்றை வழங்கியுள்ளது.

கிழக்கு லண்டனில் உள்ள யோர்க் சட்ட நிறுவனத்தினால் ஏதிலி அந்தஸ்த்து கோரிய விண்ணப்பதாரி ஒருவர் சார்பாக, அந்த நாட்டின் உள்நாட்டு செயலாளருக்கு எதிராக, பிரித்தானிய மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், முக்கிய சட்ட விதிகளை நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளதாக, அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரித்தானியாவில் தஞ்சம் கோரும் இலங்கையர்களது விண்ணப்பங்களை பரிசீலனை செய்யும் போது, உள்நாட்டு திணைக்களம் மற்றும் கீழ் நிலை நீதிமன்றங்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து நீதிமன்றம் விரிவாக எடுத்துரைத்துள்ளது.

இதன்படி இலங்கையிலிருந்து வந்து ஏதிலி அந்தஸ்து கோரும் விண்ணபதாரிகளின் கோரிக்கையை பரிசீலனைக்கு எடுக்கும் போது, அவர்கள் இலங்கையில் எதிர்நோக்கும் உயிராபத்து மற்றும் சித்திரவதைகள் தொடர்பாக எவ்வாறான கோரிக்கையை முன்வைத்தாலும், அவை தொடர்பாக அவர்கள், எவ்வாறு பார்க்கப்படுகின்றார்கள்? என்பதே கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என, பிரித்தானிய மேன்முறையீட்டு நீதிமன்றம் எடுத்துரைத்துள்ளது.

அத்துடன், அவர்களால் சமர்ப்பிக்கப்படும் சான்றுகளை பரிசீலனை செய்யும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் பற்றியும் நீதிமன்றம் புதிய சட்ட விதிகளை விரிவாக எடுத்துரைத்துள்ளது.

அதன்படி சமர்ப்பிக்கப்படும் சான்றுகளை நிராகரிப்பதாயின், அதற்கான போதிய காரணங்களை எடுத்துக்கூற வேண்டுமெனவும், தவறும் பட்சத்தில் அந்த முடிவு சட்டத்தின் முன் செல்லுபடியாகாது எனவும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

இதன்மூலம் உள்நாட்டு திணைக்களத்தினால் போதிய காரணம் தரப்படாமல் நிராகரிக்கப்படும் ஏதிலி அந்தஸ்து விண்ணப்பங்களை நீதிமன்றில், மேன்முறையீடு செய்து பரிகாரம் பெற்றுக் கொள்ளக் கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

பிரித்தானிய மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பின் மூலம், இலங்கை எதிரிகளின் விண்ணப்பத்தில், பாரிய தாக்கம் ஏற்படுத்தப்படும், என எதிர்பார்க்கப்படுகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com