Thursday, February 7, 2019

இலங்கைக்கு கடத்தவிருந்த கேரளா கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டன – இலங்கை ஏதிலி ஒருவர் கைது!

இலங்கைக்கு கடத்தவிருந்த ஒருதொகை கேரளா கஞ்சா பொதிகள் இராமேஸ்வரம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கஞ்சா போதைப்பொருளை இந்திய காவல்துறையினர் இன்று கைப்பற்றினர்.

எனினும் இதனைக் கடத்த முயன்றவர்கள் தப்பியோடியுள்ளனர். இந்த நிலையில் அவர்களைக் கைது செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக இந்திய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அத்துடன் இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில், இலங்கை ஏதிலி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இராமநாதபுரம், உச்சிபுளி - அரியமான் கடற்கரைப் பகுதியிலிருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்த இருப்பதாக, இராமநாதபுரம் மாவட்ட கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனாவுக்கு, இரகசிய தகவல் ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அரியதான் கடற்கரைப் பகுதிக்கு சென்ற காவல்துறையினர், சேதுநகரைச் சேர்ந்த ஜெயகுமார் என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தை, சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தனர்.

இதன்போது, குறித்த தோட்டத்திலுள்ள அறை ஒன்றில் இலங்கைக்கு கடத்துவதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த, 98 பொதிகளில், 196 கிலோ கஞ்சா போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த போதைப்பொருள் கடத்தலோடு தொடர்புபட்ட முக்கிய குழு தப்பியுள்ள நிலையில், காவல்துறை உயரதிகாரிகள் மற்றும் உளவுத்துறை அதிகாரிகள், குறித்த தோட்டத்தின் உரிமையாளரிடம் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே நேற்றிரவு உச்சிபுளி பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த ஒருவரை, அப்பகுதி காவல்துறையினர் விசாரித்தனர். இதன்போது, அவர் இலங்கையின் வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பது தெரிய வந்தது.

அவர் கரூர் மாவட்டத்தில் உள்ள ஏதிலிகள் முகாமிலிருந்து இலங்கைக்கு தப்பிச் செல்ல முயற்சித்ததுடன், அவர், தம்வசம் 10 கிலோ கேரள கஞ்சா வைத்திருந்ததும் தெரிய வந்தது.

இதனால் கார்த்திக்கை கைது செய்த இந்திய காவல்துறையினர், அவரிடம் விசாரணை நடத்தி வந்த நிலையில், இன்று காலை, அதே பகுதியில் 196 கிலோ கஞ்சா தோட்டத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

எனவே, இலங்கை ஏதிலிக்கும், தப்பியோடிய போதைப்பொருள் கடத்தல் குழுவுக்கும் இடையில், தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில், இந்திய உளவுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த 24 மணி நேரத்தில் இரண்டு கட்டமாக, 206 கிலோ கஞ்சா போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம், இராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதிகளில், பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com