Tuesday, January 15, 2019

நியாயமான அரசியல் தீர்வின் மூலம் தமிழ் மக்களின் எதிர்காலம் வளமடைய வேண்டும் - இரா.சம்பந்தன்.

சமத்துவம் மற்றும் நீதியின் அடிப்படையில் உருவாகும் ஒரு நியாயமான அரசியல் தீர்வின் ஊடாக தமிழ் மக்களின் எதிர்காலம் வளமடைய இந்நன்னாளில் பிரார்த்தனை செய்வோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், முன்னாள் எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.

தைத்திருநாளை முன்னிட்டு இரா.சம்பந்தன் இன்று வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை வாழ் அனைத்து தமிழ் மக்களுக்கும் தமது இனிய தைத்திருநாள் நல் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி கொள்வதாக அவர் கூறியுள்ளார்.

மனித வாழ்வின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கான இயற்கை வளங்களை அருளும் சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் இந்த உழவர்தின திருநாளில், தமது சொந்த நிலங்களில் குடியேற முடியாமலும் குடியேறிய நிலங்களில் பயிர்செய்ய முடியாமலும் உள்ள எமது மக்களின் துயரங்கள் நீங்க வேண்டும் என இறைவனை பிரார்த்திப்பதாக இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

மேலும் சமத்துவம் மற்றும் நீதியின் அடிப்படையில் உருவாகும் ஒரு நியாயமான அரசியல் தீர்வின் ஊடாக எமது தைல மக்களின் எதிர்காலம் வளமடைய இந்நன்னாளில் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

எமது மக்களின் நிலங்கள் அதிக விளைச்சலையும் செழிப்பையும் தந்து எம்மக்கள் தன்னிறைவுள்ள சமூகமாக மீண்டெழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்து கொள்வதில் பெருமை கொள்வதாக முன்னாள் எதிர்கட்சித் தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டார்.

இதேவேளை தைத்திருநாளை முன்னிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், தத்தமது விசேட வாழ்த்துச் செய்தியை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com