Thursday, January 10, 2019

புதிய விசாரணை குழு நியமனம் - வடமாகாண ஆளுநர்

வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் கிளிநொச்சியில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் இரணைமடுக் குளத்தினால் ஏற்பட்டதா? என்பது குறித்து ஆராய, புதிய குழுவொன்றை நியமித்துள்ளார்.

இரணைமடு குளம் குறித்து பல்வேறு தரப்பினர், குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில், வட மாகாண ஆளுநர் இந்த குழுவை நியமித்துள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் வெள்ளத்தால் .ஏற்பட்ட பாதிப்பின் பின்னர் ஏற்பட்டுள்ள சவால்கள் மற்றும் கள நிலைமைகள் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெற்றது.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் இளங்கோவன், கிளிநாச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், மேலதிக அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள் மற்றும் திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இரணைமடுக் குளத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் தொடர்பில் ஆராய விசேட குழு நியமிக்கப்பட்டதாகவும், அதனை முன்னாள் ஆளுநர் நீக்கியமையால், அந்த விசாரணை கைவிடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்ட நிலையிலேயே தாம் இந்த விசாரணை குழுவை நியமித்ததாக வட மாகாண ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

இக்குழுவினரிடம், இரணைமடு விசாரணை அறிக்கையை இரண்டு வாரங்களுக்குள் சமர்பிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளதாக கூறிய ஆளுநர், நாட்டில் மலேரியா எச்சரிக்கை விடுக்கப்பட்ட விடயம் தொடர்பிலும் கேட்டறிந்தார்.

கிளிநாச்சி மாவட்டத்தில் மலேரியாவை பரப்பும் நுளம்புகள் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில், இதுதொடர்பில் தொடர்ந்தும் ஆராய்ந்து வருவதாகவும் அதற்கான முன் எச்சரிக்கை செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் நிகழ்வில் கலந்துகொண்ட அதிகாரி கூறினார்.

இக்கலந்துரையாடலை அடுத்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பன்னங்கண்டி பிரதேசம் மற்றும் இரணைமடுக் குளம் ஆகியவற்றை வட. மாகாண ஆளுநர் பார்வையிட்டமையும் குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com