Saturday, January 19, 2019

கொலை சதித்திட்ட சம்பவம் குறித்த குரல் பதிவு நீதிமன்றத்திடம் ஒப்படைக்கப்படும் - அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களம்.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ ஆகியோரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில், காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிடம் பெறப்பட்ட குரல் பதிவு தொடர்பான அறிக்கையை, நீதிமன்றத்தில் சமர்பிக்கவுள்ளதாக, அரச ரசாயன திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதன்படி அடுத்த மூன்றுவார காலத்துக்குள் பெறப்பட்ட குரல் பதிவை நீதிமன்றத்திடம் ஒப்படைக்கவுள்ளதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பான குரல் பதிவின் பகுப்பாய்வு தற்போது தீவிரமாக ஆராயப்பட்டு வருவதாக அரச ரசாயன திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ ஆகியோரை கொலை செய்ய திட்டமிட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் நாமல் குமாரவினால் தொலைபேசி உரையாடல் அடங்கிய குரல் பதிவுகள் சில கடந்த தினங்களில் வெளியிடப்பட்டிருந்தன.

இந்த குரல் பதிவுகளில் காவல்துறை மாஅதிபர் பூஜித் ஜெயசுந்தரவின் குரல் பதிவும் உள்ளதா? என்பது குறித்த விசாரணையை மேற்கொள்வதற்காக அவர் அண்மையில் இரசாயன பகுப்பாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

இதற்கமைய, அவரிடம் பெறப்பட்ட குரல்பதிவு தொடர்பான பகுப்பாய்வு நடவடிக்கைகளை, அரச இரசாயன பகுப்பாய்வுத் திணைக்களம் தற்போது முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com