Thursday, January 24, 2019

தமது நாட்டின் போதைப்பொருள் ஒழிப்பு திட்டத்தை இலங்கையிலும் அறிமுகப்படுத்த, சிங்கப்பூர் இணக்கம்.

அதிகரித்து வரும் போதைப் பொருள் பயன்பாட்டை ஒழிப்பதற்கு, சிங்கப்பூர் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் நிகழ்ச்சித் திட்டத்தை, இலங்கையிலும் அறிமுகப்படுத்தி முன்கொண்டு செல்ல, சிங்கப்பூர் இணக்கம் வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூருக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், சிங்கப்பூர் அமைச்சர் டெஸ்மன் லீயுவுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, இந்த இணக்கம் வெளியிடப்பட்டது.

இந்த கலந்துரையாடல், சிங்கப்பூரின் மெண்டரின் ஓரியன்டல் ஹோட்டலில் இன்று இடம்பெற்றது. இதன் போது, இலங்கையின் போதைப்பொருள் ஒழிப்பிற்கு உதவுமாறு ஜனாதிபதியினால் குறித்த அமைச்சரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இதற்கு, சிங்கப்பூர் தரப்பிலிருந்தும் இணக்கம் வெளியிடப்பட்டது. அதன்படி போதைப்பொருள் ஒழிப்பிற்காக இலங்கை முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித் திட்டத்திற்கு, சிங்கப்பூர் ஒத்துழைப்பு வழங்குவது குறித்து ஆராய்வதற்காக, அந்த நாட்டின் விசேட பிரதிநிதிகள் சிலர் விரைவில் இலங்கைக்கு வருகை தரவுள்ளனர்.

மேலும், சிங்கப்பூர் அரசாங்கம் போதைப்பொருள் சுற்றிவளைப்பு தொடர்பில் பின்பற்றுகின்ற அதி முக்கிய நடைமுறைகள் குறித்தும், சட்டவிரோத போதைப்பொருட்களை ஒழிப்பதற்காக, அந்த நாட்டு அரசாங்கம் முன்னெடுத்து வரும் தேசிய நிகழ்ச்சித் திட்டம் குறித்தும், ஜனாதிபதிக்கு இதன்போது விளக்கமளிக்கப்பட்டது.

போதைப்பொருள் ஒழிப்பிற்காக அந்த நாட்டின் அமைச்சுக்கள் தேசிய மட்டத்தில் நடைமுறைப்படுத்தி வரும் நிகழ்ச்சித் திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் இந்தச் சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டது.

அதேநேரம், போதைப்பொருள் பிரச்சினையை கட்டுப்படுத்துவதற்காக, இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்திவரும் நிகழ்ச்சித் திட்டங்கள் இதன்போது ஜனாதிபதி சிங்கப்பூர் அதிகாரிகளுக்கு எடுத்துரைத்தார்.

இதனை அடுத்து ஜனாதிமதி மைத்ரிபாலா சிறிசேனவின் போதைப்பொருள் ஒழிப்பிற்கான வேலைத்திட்டங்களுக்கு சிங்கப்பூர் அதிகாரிகள் வரவேற்பு தெரிவித்தனர்.

சிங்கப்பூரில் இடம்பெற்றவுள்ள முக்கிய கண்காட்சி ஒன்றில் விசேட உரையொன்றை நிகழ்த்துவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அங்கு சென்றுள்ளார்.

இதேவேளை ஜனாதிபதி, சிங்கப்பூரின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட பல முக்கிய அரச அதிகாரிகளை சந்திக்கவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com