Sunday, January 27, 2019

இரண்டாவது நாளாகவும், கேப்பாபுலவு மக்களின், முற்றுகை போராட்டம் தொடர்கிறது.

முல்லைத்தீவு – கேப்பாப்புலவு பகுதியில் இராணுவத்தினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்க வலியுறுத்தி, கேப்பாப்புலவு படை முகாம் வாயில் முன்பாக, ஆரம்பிக்கப்பட்ட முற்றுபை் போராட்டம், தொடர்ந்தும் நீடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு முதல்,இந்த முற்றுகை போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முற்றுகை போராட்டத்தில், பல பெண்களும் குழந்தைகளும் உள்ளடங்குகின்றன. அத்துடன் இந்த போராட்டத்தில் தென்னிலங்கையைச் சேர்ந்த பொதுமக்களும், அருட்சகோதரிகளும் பொது அமைப்புக்களும் கலந்துகொண்டுள்ளனர்.

கேப்பாப்புலவில் உள்ள தங்களது காணிகளை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல், கேப்பாப்புலவு பிரதேசத்தில் வசித்த 84 குடும்பங்களினால் தொடர்ச்சியாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதனை அடுத்து இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்கு, ஒரு மாத கால அவகாசம் வழங்குமாறு முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தினால் வாக்குறுதி வழங்கப்பட்டது.

எனினும் தம்மிடம் வழங்கப்பட்ட வாக்குறுதிக்கான கால அவகாசம் நிறைவடைந்துள்ளதையடுத்து, படைமுகாம் வாயிலில் மக்கள் தற்போது இந்த போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.

தமக்கான தீர்வை உரிய தரப்பினர் பெற்றுக்கொடுக்கும் வரையில், தொடர்ந்தும் இந்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக, கேப்பாபுலவு மக்கள் தெரிவித்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com