ஞானசாரரின் விடுதலை குறித்து ஜனாதிபதி பீதியடைய தேவையில்லை - இலங்கை இந்து சம்மேளனம்.
ஞானசாரரின் விடுதலை குறித்து ஜனாதிபதி பீதியடைய தேவையில்லை என இலங்கை இந்து சம்மேளனம் குறிப்பிட்டுள்ளது. இலங்கை இந்து சம்மேளனத்தின் தலைவர் டி.அருண்காந்த் இதனை தெரிவித்துள்ளார்.
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் விடுதலை குறித்து,நேற்றைய தினம் கருத்து வெளியிட்ட போதே டி.அருண்காந்த் இதனை குறிப்பிட்டுள்ளார்.
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கினால் நாட்டில் புதிய பிரச்சினைகள் உருவாகுமென்று ஜனாதிபதி அச்சமடைய தேவையில்லை.
ஞானசார தேரர் கொலை, கொள்ளை போன்ற பாரிய குற்றங்கள் எதனையும் புரியவில்லை. நாட்டின் தேசிய பாதுகாப்பு விடயத்துக்காகவே தொடர்ச்சியாக குரல் கொடுத்து வந்தார்.
மேலும் அரச சார்பற்ற அமைப்புக்களாலும், மத அமைப்புக்களாலும் இந்துக்களை வேறு மதங்களுக்கு மாற்றுகின்ற அச்சுறுத்தல் நிலைமை காணப்பட்ட போது, விழிப்புணர்வை ஏற்படுத்தி அவ் வேளையில் மக்களை பாதுகாத்தார்.
இவ்வாறு நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் போராடிய ஞானசார தேரருக்கு, சிறை தண்டனை வழங்குவது முறையல்ல.
எனவே சுதந்திர தினத்திற்கு முன்னர் பொதுமன்னிப்பின் அடிப்படையில் ஞானசார தேரரை விடுதலை செய்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அருண்காந்த் வலியுறுத்தியுள்ளார்.
0 comments :
Post a Comment