Friday, January 4, 2019

தயாசிறியும், டிலானும் தமிழ் மக்களின் தீர்வுக்காக உழைத்தவர்கள். அவர்கள் தொடர்ந்தும் உழைக்கவேண்டும் . வேண்டுகிறார் சுமந்திரன்

"இதுவரைக்கும் அதிகாரப் பகிர்விற்கு ஆதரவாக குரல் கொடுத்து செயற்பட்டது போன்று தொடர்ந்தும் செயற்பட வேண்டுமென்றும், எல்லா முயற்சிகளுக்கும் உங்களுடைய ஆதரவை வழங்க கொடுக்க வேண்டுமென்றும் வினயமாகக் கேட்டுக் கொள்வதுடன், அரசியல் சூழ்ச்சியை நாங்கள் தடுத்த ஒரு காரணத்திற்காக உங்களுடைய கொள்கையை நீங்கள் தயவுசெய்து மாற்ற வேண்டாமென்றும் கோருகின்றோம்“ என்றும் ன்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் நிதி ஒதுக்கீட்டில் விளையாட்டுக் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கல், அழகுக்கலை பயிற்சியை பூர்த்தி செய்தவர்களிற்கு சான்றிதல் வழங்கும் நிகழ்வும் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச செயலகத்தில் இன்று (4) நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“தமிழ் மக்களுக்கு சமஷ்டியை கொடுக்கவும் ஆதரவளிப்பதாகவும், தமிழர்களிற்கு அர்தமுள்ள அதிகாரப் பகிர்வு தமிழ் மக்களுக்கு கொடுக்கப்பட வேண்டுமென்றும் கூறி வந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான டிலான் பெரேரா மற்றும் தயாசிறி ஜயசேகர ஆகிய என்னுடைய இரண்டு நெருங்கிய நண்பர்களும், நான் தமிழர்களின் அரசியல் தீர்வை குழப்புவதாக கூறுவது வேடிக்கையானது“ என்று எம்.ஏ.சுமந்திரன் மேலும் கூறியுள்ளார்

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றியபோது- “விளையாட்டு உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல விளையாட்டுகளிலே ஈடுபடுகிற பொழுது நெறிமுறைகளை அனுசரித்து தான் அந்த விளையாட்டுகளிலே ஈடுபடுகிறோம். எல்லா விளையாட்டுக்களிலும் சில சட்டதிட்டங்கள் உண்டு. அதற்கமைய அந்த நெறிகளைப் பின்பற்றாமல் ஒரு விளையாட்டிலும் பங்கு பற்ற முடியாது. இல்லா விட்டால் அது விளையாட்டாகவே இருக்காது. அப்படிச் செய்கிற போது அதிலே நடுவர்களும் இருப்பார்கள். அந்த நடுவர்களுடைய தீர்ப்பை ஏற்றுக் கொள்கின்ற மனப்பக்குவங்கள் விளையாட்டில் ஈடுபடுகின்ற ஒவ்வொருக்கம் இருக்க வேண்டும்.
ஆனாலும் நடுவரும் விதிமுறைகளின் அடிப்படையில் தான் தீர்ப்பு சொல்ல வேண்டும். அதைவிடுத்து நடுவரும் தான் நினைத்தபடி தீர்ப்பைச் சொல்ல முடியாது.

விதிமுறையொன்று இருந்தால் அது அனுசரிக்கப்பட வேண்டும். அதனை மீறினால் மீறியதாக நடுவரே சொல்லுவார். ஆனால் அதில் நடுவரே விதிமுறைகளை மீறீனால் அது மிகவும் ஆபத்தானதொரு சூழ்நிலைக்கு இட்டுச் செல்லும்.

எங்களுடைய நாட்டிலே கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னரும் நடந்தது அது தான். எப்படியாக ஆட்சி முறைகள் நடைபெற வேண்டுமென்று விதிமுறைகள் எழுதப்பட்டு இருக்கின்றன. அதற்கு அரசமைப்பு என்று இருக்கின்றது. ஐனநாயகப் படிமுறைகளுக்க அமைவாக என்னென்ன வழியாக எவரெவர் பதிவிகளில் அமர்த்தப்பட வேண்டும். அவர்கள் எப்பொழுது பதவிகளில் இருந்து நீக்கப்படலாம், எப்பொழுது கலைக்கப்படலாம் என்றெல்லாம் தெட்டத் தெளிவாக எழுதப்பட்டுள்ளது.

அதனை எவரெவர் நடைமுறைப்படுத்த முடியுமென்பதையும் அவர்களுக்குரிய அதிகாரங்கள் என்ன என்பதும் அங்கே எழுதப்பட்டுள்ளது. ஆனாலும் அவை மீறப்பட்ட சம்பவங்களை எங்களுடைய நாட்டில் ஒக்ரோபர் 26 ஆம் திகதியிலிருந்து காணக்கூடியதாக இருந்தது. அவ்வாறு மீறப்பட்ட போது அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டியது அத்தியாவசியமாக இருந்தது.

ஒரு விளையாட்டிலோ அல்லது விளையாட்டுப் போட்டியிலோ நடைமுறை அல்லது விதிமுறைகள் மீறப்பட்டால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கபட வேண்டியது அத்தியாவசியம். ஏனென்றால் அது அந்தவேளையிலே சீர் செய்யப்படாவிட்டால் அதற்குப் பிறகு விதிமுறையென்ற ஒன்று இருப்பது தேவையற்ற விடயமாகப் போய்விடும்.

ஒரு நாட்டினுடைய அரசியலமைப்பு என்பதும் தேவையற்றதொன்றாக மாறிவிடும். அதற்கு நாங்கள் இடங்கொடுக்க முடியாது. ஐனநாயகம் பேணப்பட வேண்டுமாக இருந்தால் சட்டத்தின் ஆட்சி நாட்டிலே இருக்க வேண்டுமாக இருந்தால் எழுதப்பட்டிருக்கின்ற விதிமுறைகள் சரியாகக் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு தேவை இருந்தது.

அதனை மீறுகிற பொழுது அதற்கு எதிராக எந்தவிதமான நடவடிக்கைகள் எடுக்க முடியுமென்றும் அந்த விதிமுறைகளில் எழுதப்பட்டிருக்கிறது. அதற்கமைய அந்த நடவடிக்கைகளை நாங்கள் முன்நின்று எடுத்தோம். அது அத்தியாவசியமான அடிப்படைச் செயற்பாடு. அதைச் செய்ய வேண்டிய பாரிய பொறுப்பு பிரதான எதிர்க்கட்சியாக இருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலையிலே சுமத்தப்பட்டிருந்தது. அதனை நாங்கள் செவ்வனவே நிறைவேற்றியிருக்கின்றோம்.

ஆனால் அதனை நாங்கள் நிறைவேற்றிய காரணத்தினாலே சிலருக்கு ஒரு கசப்பு ஏற்பட்டிருக்கிறது. தவறான வழிகளிலே பதவிகளைக் கைப்பற்ற முனைந்தவர்கள், ஐனநாயக விரோதச் செயற்பாடுகளிலே ஈடுபட்டவர்கள், நாடாளுமன்றத்திலே பெரும்பான்மை இல்லாமல் ஆட்சி அதிகாரத்திலே நிலைத்திருக்க விரும்பியவர்கள் நீதிமன்றங்களின் ஊடாக அவர்கள் தடுக்கப்பட்டதன் காரணமாக அவர்களுக்கு எரிச்சல் ஏற்பட்டிருக்கிறது. ஒரு மன உளைச்சல் ஏற்பட்டிருக்கிறது.

அந்த மன உளைச்சலின் வெளிப்பாடுகளை அண்மைய நாட்களில் நாங்கள் காணக்கூடியதாகவும் இருக்கிறது. நானும் கடந்த சில நாட்களாக பத்திரிகைகளைப் பார்க்கின்றபோது சுமந்திரன் சுமந்திரன் என்று பலருடைய விமர்சனங்கள் நாளாந்தம் வந்து கொண்டிருக்கின்றது. அதற்கு ஒரே ஒரு காரணம்- விதிமுறைகள் மீறப்பட்ட பொழுது அதனைத் தட்டிக் கேட்டது தான். தவறாகச் செயற்பட்டவர்களுக்கு ஏற்பட்ட தோல்வியை அவர்களால் ஜீரணிக்க முடியாதது தான் அதற்காண காரணங்களாக இருக்கின்றன.

ஆகையனாலே அவர்கள் என்ன சொல்கின்றார்கள் என்பதற்குப் பதில் சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது. ஏனென்று சொன்னால் எதையாவது பேச வேண்டுமென்பதற்காக பேசிக் கொண்டிருக்கின்றார்கள் என்பது தெளிவாகப் புலனாகின்றது. ஆனால் இன்று காலை பத்திரிகைகளின் முதற் பக்கங்களில் என்னுடைய நண்பர்களான தயாசிறி ஜயசேகர மற்றும் டிலான் பெரேரா ஆகிய இருவரும் சில கடுமையான கருத்துக்களைச் சொல்லியிருக்கின்றனர்.

ஆகவே அதற்குப் பதில் சொல்ல வேண்டிய தேவை இருக்கின்றது. ஏனென்றால் நான் சொன்னதைப் போல அவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள். அரசியலிலே நண்பர்களும் கிடையாது. எதிரிகளும் கிடையாது என்று சொல்லுவார்கள். ஆனால் இந்த இருவரையும் நண்பர்கள் அல்லது நெருங்கிய நண்பர்கள் என்று அழைப்பதற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கின்றது.

இந்த நாட்டிலே அதிகாரப் பகிர்வு சரியான முறையிலே செய்யப்பட வேண்டும். தமிழ் மக்களுக்கும் அரசியல் அதிகாரங்கள் சரியான முறையிலே கொடுக்கப்பட வேண்டும் என்கின்ற நிலைப்பாட்டிலே நிலைத்து நிற்கின்றவர்கள் இவர்கள் இருவரும் தான். எப்போதெல்லாம் அதிகாரப் பகிர்வு சம்மந்தமான பிரச்சனை எழுகின்ற போதும் அதற்கு அதரவாக குரல் கொடுக்கின்றவர்களும் இவர்கள் இருவரும் தான்.

சந்திரிக்கா அம்மையாருடைய காலத்திலே வெள்ளைத் தாமரை இயக்கமென்று சொல்லி அவர் அதிகாரப் பகிர்வு சம்மந்தமான பிரச்சாரத்திலே முன்னின்று செயற்பட்டவர் டிலான் பெரேரா. அந்தக் காலத்திலே பேராசிரியர் ஜி.எல்.பீரிசின் உதவியாளனாக அதிகாரப் பகிர்விற்காக உழைத்தவர் தயாசிறி ஜயசேகரா. அன்றிலிருந்து இன்று வரைக்கும் அதிகாரப் பகிர்வு கிரமமாக சரியானதாக அர்த்தமுள்ள முறையிலே செய்யப்பட வேண்டுமென்று விரும்பியவர்கள்.

புதிய அரசியல் யாப்புக்கான இடைக்கால அறிக்கை வெளிவந்த போது அது குறித்து நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின் போதும் இவர்கள் இருவரும் பயனுள்ள உரைகளை ஆற்றியிருக்கின்றார்கள். அதிலும் டிலான் பெரேரா சமஷ்டி என்று சொல்லப்பட்டால் நான் அதற்கு ஆதரவும் கொடுப்பேன். ஆனால் அப்படியாகச் சொல்லப்படவிட்டாலும் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு இருக்கு என்று பேசிய ஒரேயொரு சிங்கள அரசியல் வாதி.

ஆனால் நேற்றைய தினம் இவர்கள் இருவரும் நாட்டிலே புதிய அரசமைப்பு உருவாகுவதை சுமந்திரன் தன்னுடைய அவசரத்தினாலே குழப்புகின்றார் என்றதொரு கருத்தினை சொல்லியிருக்கின்றார்கள். தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தல் காலத்திலே இது செய்யப்பட முடியாது என்ற தோரணையிலும் அப்படிச் செய்ய முடியாமல் போய் விட்டால் சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஒரு இனவாதக் கட்சியென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரச்சாரம் செய்யப் போகிறது என்றும் அவர்கள் கனவு கண்டு ஒரு பெரிய ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்திருக்கின்றார்கள்.

ஆகையினால் அவர்களுக்கு நான் ஒரு விடயத்தைச் சொல்லி வைக்க விரும்புகின்றேன். அதாவது இதுவரைக்கும் முறையான அதிகாரப் பகிர்விற்கு ஆதரவாக நீங்கள் செயற்பட்ட அதே விதமாக தொடர்ந்தும் நீங்கள் செயற்படுவீர்கள் என்று நாங்கள் நம்புகின்றோம். அதனையே உங்களிடத்தே நாங்கள் எதிர்பார்க்கின்றோம். நான் உங்களோடு முரண்பட விரும்பவில்லை.
ஆகவே சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள்ளேயே இருக்கின்ற மிக முற்போக்கான நீங்கள் இருவரும் அதிகாரப் பகிர்விற்காக குரல் கொடுத்து அது காலதாமதம் இல்லாமல் நிறைவேறுவதற்கான எல்லா முயற்சிகளுக்கும் உங்களுடைய ஆதரவையும் கொடுக்க வேண்டுமென்று நாங்கள் வினயமாகக் கேட்டுக் கொள்கின்றோம்.

அதை எப்படியாகச் செய்து முடிக்க வெண்டும் என்பதைக் குறித்து உங்களை வெளியே விட்டு நாங்கள் செயற்பட விரும்பவில்லை. உங்களுடனும் பேசித் தான் இவற்றைச் செய்ய விரும்புகின்றோம். ஆகையினாலே நாட்டிலே ஏற்பட்ட இந்த அரசியல் சூழ்ச்சியை வெற்றியடைய விடாமல் நாங்கள் தடுத்த ஒரு காரணத்திற்காக நீங்கள் உங்களுடைய கொள்கையை தயவு செய்து மாற்ற வேண்டாம்“ என்று தெரிவித்தார்..

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com