Tuesday, January 29, 2019

ஜனாதிபதியுடன் இணைந்து, ஊழலை மறைக்க, ஐக்கிய தேசிய கட்சி முயற்சிக்கிறது - ரொஷான் ரணசிங்க.

ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் குறித்து, இடம்பெற்று வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளில் இருந்து தப்பிக்கவே, ஐக்கிய தேசியக் கட்சி, தேசிய அரசாங்கத்தை அமைத்ததாக, நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.

இன்றைய தினம் கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே, நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.

சமஷ்டி அரசியலமைப்பொன்றை கொண்டு வரவும், ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காகவும் தான், ஐக்கிய தேசியக் கட்சி, தேசிய அரசாங்கத்தை நிறுவியது.

ஐக்கிய தேசியக் கட்சியானது தற்போது அச்சத்தில் தான் உள்ளது.இந்த நிலையில் கடந்த நான்கு வருடங்களில் இடம்பெற்ற ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்ய, மற்றுமொரு ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று ஸ்தாபிக்கப்படவுள்ளது.

இதன் ஊடாக விசாரணைகள் இடம்பெற்றால், அடுத்த ஜனாதிபதித் தேர்தலின் போது, ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து எவருக்கும் களமிறங்க முடியாது போய் விடும்.

இதனாலேயே, மீண்டும் ஜனாதிபதியுடன் இணைந்து தேசிய அரசாங்கம் ஒன்றை ஸ்தாபிக்க ஐக்கிய தேசியக் கட்சி முயற்சித்து வருகிறது. அத்துடன் அரசியலமைப்பு தொடர்பிலும் ரணில் விக்கிரமசிங்க, தற்போது ஊடகங்கள் மத்தியில் பரவலாக கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார்.

அத்துடன் புதிதாக ஒற்றையாட்சி எனக் கூறி, சமஷ்டி அரசியல் அமைப்பையே இவர்கள் ஸ்தாபிக்கவுள்ளனர்.

புதிய அரசியலமைப்பில் சமஷ்டித் தன்மை இருப்பதாக சம்பந்தனே கூறியுள்ள நிலையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஒற்றையாட்சி தான் எனக் கூறிக் கொண்டு மக்களை ஏமாற்றி வருகின்றார்.

இத்தகைய போலியான கட்சியொன்றுடன் இணைந்து மீண்டும் ஜனாதிபதி, தேசிய அரசாங்கம் ஒன்றை ஒரு போதும் ஸ்தாபிக்க மாட்டார் எனம் நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க, மேலும் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com