Thursday, January 24, 2019

பாரபட்சமாக முன்னெடுக்கப்படும் அபிவிருத்திகள் குறித்து சட்ட நடவடிக்கை தேவை - வடமாகாண ஆளுநருக்கு மகஜர்.

தமது கிராமங்களில் அபிவிருத்தி பணிகள் பாரபட்சமாகவே முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்து, மடு பிரதேச கிராமிய அமைப்புக்கள் பல ஒன்றிணைந்து, வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவனுக்கு மகஜர் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் மடு பிரதேசச் செயலகத்திற்கு முன்பான கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டு பின்னர், குறித்த மகஜரும் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இறுதி யுத்தத்தின் பின் பல்வேறுப்பட்ட வாக்குறுதிகளோடு மீள் குடியேற்றம் செய்யப்பட்ட மக்கள் தற்போதுவரை, துன்பியல் வாழ்விவிற்குள் தள்ளப்பட்டுள்ளனர் என மடு மக்கள் தமது மகஜர் மூலம் கவலை தெரிவித்துள்ளனர்.

மேலும் வீதி அபிவிருத்தி, வீதி மின்விளக்குகள் பொருத்துதல், குடிநீர் வசதிகள், போக்குவரத்து சேவைகள், மருத்துவச் சேவைகள், பாடசாலை அபிவிருத்தி, இளைஞர்களுக்கான தொழில் வாய்ப்பு, கசிப்பு உற்பத்தியை உடன் நிறுத்த நடவடிக்கை, குளங்கள் புனரமைப்பு, வளங்கள் சுரண்டப்படுவதை தடுத்தல், விளையாட்டு மைதானம் அமைத்தல், மயானங்களை புனரமைத்தல், நீர்வடிகால்கள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை உள்ளடக்கி இந்த மகஜர், கலாநிதி சுரேன் ராகவனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அந்த மகஜரின் பிரதிகள், மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகைக்கும் , வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com