Tuesday, January 15, 2019

வாயால் வடை சுட்டு விற்கின்ற ஏமாற்று வித்தையை முஸ்லிம் காங்கிரஸ் பாடையில் போடுதல் வேண்டும்! சீறுகின்றார் ரிபாஸ்

வாயால் வடை சுட்டு விற்பனை செய்கின்ற ஏமாற்று வித்தையை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தொடர்ந்து செய்து வருவது அவர்களின் இயலாமையையே வெளிப்படுத்திக் காட்டுகின்றது என்று தேசிய காங்கிரஸின் கொள்கை பரப்பு மற்றும் சட்ட விவகாரங்களுக்கான மேலதிக செயலாளரும், கல்முனை மாநகர சபை உறுப்பினருமான சட்டத்தரணி ஏ. எல். ரிபாஸ் தெரிவித்தார்.

இவரின் மருதமுனை இல்லத்தில் நேற்று (14) திங்கட்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்து கல்முனை மாநகரத்தின் நிலை தொடர்பாக குறிப்பிடும் போது மேலும் பேசியவை பின்வருமாறு,

கல்முனை மாநகரம் அழகும், பசுமையும் நிறைந்த மாநகரமாக செழுமை பெற வேண்டிய தேவைப்பாடு பல தசாப்த காலங்களாக பேசப்பட்டு கொண்டே வருகின்றது. ஆயினும் அது பழைய நிலையிலேயே தொடர்ந்தும் இருந்து வருவது கவலைக்குரிய விடயமாகும். இருமினால் இடிந்து விழுகின்ற நிலையில்தான் கல்முனை மாநகர சபை கட்டிடம் உள்ளது என்பதை சொல்லித்தான் தெரிய வேண்டும் என்று இல்லை.

கல்முனை மாநகர சபை முதல்வராக இருந்தவர் சட்டத்தரணி எச். எம். எம். ஹரீஸ். இக்கட்டிடத்தை எமது தலைவர் ஏ. எல். எம். அதாவுல்லா உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சராக பதவி வகித்தபோது புதுப்பித்து தர பகீரத முயற்சிகள் எடுத்தார். ஆயினும் குறுகிய சுய இலாப அரசியலுக்காக ஹரீஸ் போன்றோர் தலையிட்டு எமது தலைவருக்கு முட்டுக்கட்டை போட்டார்கள். இப்போது ஹரீஸ் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சராக உள்ள நிலையில் அதற்கான பிராயச்சித்தமாக நவீன வசதிகளுடன் கூடிய கட்டிடத்தை உருவாக்கி தந்து அவரின் ஆளுமையை நிரூபிக்க வேண்டும். கல்முனை பஸ் தரிப்பிடத்தை நவீன முறையில் மேம்படுத்தி தர வேண்டும். ஏ. ஆர். எம். மன்சூர் பொது நூலகத்தை இந்த நூற்றாண்டுக்கு ஏற்ற வகையில் நவீனமயப்படுத்தி தர வேண்டும். கல்முனை சந்தை ஒல்லாந்தர் கால கட்டிடம் போல காட்சி தருகின்றது. ஆனால் ஊமையின் கையில் கிடைத்த ஒலிவாங்கி போலதான் ஹரீஸுக்கு உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சு கிடைத்து உள்ளது என்பது எனது அபிப்பிராயம் ஆகும்.

ஊரவன் பெற்ற பிள்ளைக்கு அவருடைய பெயரை சூட்டி மகிழ்கின்ற செயலை ஹரீஸ் கைவிட்டு சொந்த முயற்சியில் அபிவிருத்திகளை மேற்கொள்ள வேண்டி உள்ளது. ஏனென்றால் மக்களின் வரி பணத்தில் கொள்வனவு செய்யப்பட்ட திண்ம கழிவகற்றல் இயந்திரத்தை அவருடைய அமைச்சு வழங்கியதாக சொல்லி பொய்யான பெருமை அடைகின்ற அளவில்தான் அவரின் கையாலாகாத்தனம் இருக்கின்றது. ஐக்கிய தேசிய கட்சிக்கு முட்டு கொடுக்கின்ற முஸ்லிம் காங்கிரஸால் கல்முனை மக்களுக்கு எந்த உருப்படியான நன்மைகளும் கிடைத்ததாக இல்லை என்பதே கடந்த கால அனுபவங்கள் கற்று தந்த கசப்பான பாடங்கள் ஆகும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com