Friday, January 25, 2019

திக்கம் வடிசாலையில் பனம் சாராயத்துடன் களவாக கலக்க கொண்டுவந்த எதனோல் விசேட அதிரடிப் படையிடம் இடம் மாட்டியது.


இலங்கையில் தடை செய்யப்பட்ட எதனோல் சட்டவிரோதமாக பாரவூர்தி ஒன்றில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இப்பெரும் தொகை எதனோலானது திக்கம் வடிசாலையில் பனம் சாராயத்துடன் கலக்க களவாக கொண்டுவரப்பட்டது என முதற்கட்ட விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.

ஏழாலைப் பகுதியில் நேற்று (24) வீதி ரோந்தில் ஈடுபட்ட விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலினடிப்படையில் மேற்கொண்ட நடவடிக்கையின் போது 371 எதனோல் போத்தல் கல்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட ஒவ்வொரு கலனும் 20 லீற்றர் கொள்ளளவைக் கொண்டவை என்பதுடன் மொத்தமாக 7420 லீற்றர் எதனோல் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட எதனோல் சுன்னாகம் பொலிஸாரிடம் விசேட அதிரடிப்படையினரால் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொணடு இப்பொருளுடன் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

கடந்த காலங்களில் இவ்வாறு சட்டவிரோதமாக பல தடவைகள் எதனோல் கொண்டுவரப்பட்டு முறையற்ற விதத்தில் கலக்கப்பட்டுள்ளமை தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கண்டியிலிருந்து பாரவூர்த்தில் கொண்டுவரப்பட்ட குறித்த ஏதனோல் தொகை சிறிது சிறிதாக இரவு நேரங்களில் திக்கம் வடிசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பனம் சாராயத்துடன் கலக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதிகளவு எதனோல் கலப்படம் செய்யப்பட்ட பனம் சாராயம் திக்கம் வடிசாலையில் வைத்து மீளவும் போத்தலில் சீல் வைக்கப்படும். இந்த நடவடிக்கை சுமார் 2 ஆண்டுகளாக இடம்பெற்றுள்ளது. இந்த நடவடிக்கையை கடந்த சில நாட்களுக்கு முன்னர் திக்கம் வடிசாலை ஊழியர்கள் கண்டறிந்துள்ளனர்.

அதுதொடர்பில் ஆராய்ந்து அவ்ஊழியர்கள் மல்லாகம் இராணுவ முகாமுக்கு தகவல் வழங்கியுள்ளனர். அதனடிப்படையில் ஏழாலைப் பகுதியில் சுற்றிவளைப்பை முன்னெடுத்த சிறப்பு அதிரடிப்படையினர் நீண்ட காலமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த பாரவூர்தி ஒன்றைச் சோதனையிட்டு 20 லீற்றர் கொள்ளவுடைய 371 கலன்களில் எதனோல் (தூய மதுசாரம்) கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.







0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com