Friday, January 25, 2019

ரணில் பதவிக்காகவே போராடினார்-ஜே. வி. பியின் சந்திரசேகர் விசனம்.

52 நாட்கள் இடம்பெற்ற சதித் திட்டம் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் அதுவரை காலமும் ஜனநாயகத்துக்குப் போராடிய ரணில் விக்கிரமசிங்க தற்போது ஜனநாயகத்தைப் பற்றிப் பேசுவதேயில்லை. எனவே, சதித் திட்டத்தின் போது ரணில் விக்கிரமசிங்க ஜனநாயகத்துக்காகப் போராடவில்லை. தன்னுடைய பிரதமர் பதவியைத் தக்க வைத்துக் கொள்வதற்காகவே அவர் முயற்சித்து வருகிறார் என ஜே.வி.பியின் யாழ்.மாவட்ட அமைப்பாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான இராமலிங்கம் சந்திரசேகர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

“ஒக்ரோபர்-26 இல் நிகழ்ந்த அரசியல் மாற்றமும் அதன் பின்னரான எதிர்பார்ப்புக்களும்” எனும் தலைப்பிலான விசேட கருத்தரங்கு ஒன்று கடந்த திங்கட்கிழமை(21) யாழ்.முகாமையாளர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நல்லூர் யூரோவில் மாநாட்டு மண்டபத்தில் சாதனைத் தமிழன் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் தலைமையில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மைத்திரிபால சிறிசேனவும், ஏனைய அரசியல் வாதிகளும் தங்களுடைய அதிகாரங்களைத் தக்க வைத்துக் கொள்வதற்கும், அதிகாரத்தை மேம்படுத்துவதற்கும் எவ்வாறான அரசியல் செய்ய முடியுமோ, எவ்வாறான அரக்கத்தனங்களைக் கட்டவிழ்த்து விட முடியுமோ அனைத்தையும் செய்வதற்குத் தயாரான நிலையில் காணப்படுகின்றார்கள் என்பது கடந்த ஒக்ரோபர் மாதம்-26 ஆம் திகதி மிகத் தெளிவாக கோடிட்டுக் காட்டியுள்ளனர்.

கடந்த ஒக்ரோபர் மாதம்-26 ஆம் திகதி ஏற்பட்ட குழப்ப நிலைக்குப் பின்னர் ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைத்த சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கோ அல்லது ஐக்கிய தேசியக் கட்சிக்கோ ஆட்சியதிகாரத்தை மீளவும் வழங்கக் கூடாது. குறித்த ஆட்சியதிகாரத்தை ஜனநாயக வாதிகளான மக்கள் விடுதலை முன்னணி தங்கள் கையிலெடுத்துக் கொள்ள வேண்டுமென்ற அடிப்படையில் செயற்பட்டோம். தற்போதைய நிலையில் நாட்டுக்கும், மக்களுக்கும் புதிய பாதை, புதிய பயணமொன்று தேவைப்படுகின்றது.

அந்தப் புதிய பயணத்தை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கு புத்திஜீவிகள், கல்விமான்கள், உண்மையில் மக்களை நேசிக்கின்ற அரசியல்வாதிகளுக்கு கூடுதலான சக்தியும், வலுவும் கிடைக்க வேண்டுமென நாங்கள் பிரார்த்திக்கின்றோம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com