Tuesday, January 22, 2019

மனித உரிமைகளுக்கான முதலாளிகள் விரும்புவது மனித உரிமைகளை அல்ல டொலர்களையும் யூரோக்களையும். ஜனாதிபதி

யுத்தம் முடிவடைந்து 10 வருடங்கள் ஆகின்றது. இந்த யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்கைத்தரத்தை உயர்த்துவதற்குரிய காரியங்களை மேற்கொள்வதற்கு பதிலாக, அவர்களின் மனங்களை குழப்பி அதனூடாக டொலர்களை தேடிக்கொள்ளும் செயற்பாடுகளையே மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் என்போர் மேற்கொள்கின்றனர் எனச் சாடியுள்ளார் மைத்திரிபால சிறிசேன.

நேற்று (21) பிற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற தேசிய பொலிஸ் கற்கை நிலையத்தின் டிப்ளோமா சான்றிதழ் வழங்கும் வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோது மேற்கண்டவாறு தெரிவித்த அவர், இந்நாட்டிலே செயற்படுகின்ற பாதாள உலகத்தினரையும் போதைப்பொருள் வியாபாரிகளையும் மனித உரிமை முதலாளிகள் கூறுவது போல் கையாளமுடியாது, அவர்களை அவர்களின் வழியில் கையாள்வது தொடர்பில் என்னிடம் எந்த எதிர்ப்பும் கிடையாது என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், தேசிய பொலிஸ் கற்கை நிலையத்தை பட்டம் வழங்கும் தரத்திற்கு உயர்த்த வேண்டும் என்பதுடன், அதற்கான தடைகளை நீக்கவும் நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

பொலிஸ் திணைக்களமானது கல்விமான்களைக் கொண்ட தொழில்சார் நிபுணத்துவம் அடைந்த சேவை நிலையமாக வேண்டும் எனவும் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வர்கள் தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, பொலிஸ் திணைக்களத்தினை பலப்படுத்துவதற்கும் அதன் சேவைகளை உயர் தரத்தில் வழங்குவதற்கும் மேற்கொள்ளப்பட வேண்டிய பல செயற்பாடுகள் கடந்த காலத்தில் தவறவிடப்பட்டுள்ளன எனத் தெரிவித்தார். தான் பொலிஸ் திணைக்களத்திணை பொறுப்பேற்று இரண்டு மாதங்களேயான குறுகிய காலத்திற்குள் அதனை பலப்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, பொலிஸ் திணைக்களத்தினை பலப்படுத்துவதற்கான சட்ட திருத்தங்கள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதோடு, தனது ஆலோசனைகளுக்கமைய புதிய சட்டதிட்டங்களை உருவாக்கும் நடவடிக்கைகள் சட்டமா அதிபரினால் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன எனவும் தெரிவித்தார்.

குற்றங்களை தடுத்தல் மற்றும் பாரதூரமான குற்றங்களை புரிந்த குற்றவாளிகள் தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது மனித உரிமைகள் என்ற பெயரில் சிலர் அதற்கு எதிராக குரல் எழுப்புகின்றனர் என ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.

பாதாள உலகத்தினரை இல்லாதொழித்தல், குற்றங்களை தடுத்தல், போதைப்பொருள் கடத்தல்களை ஒழித்தல், பெண்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்கள், சிறுவர் துஷ்பிரயோகங்கள் உள்ளிட்ட சமூகத்தில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளை தடுப்பதற்காக அவர்கள் தமது குரலை எழுப்புவதில்லை என்பதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அவர்கள், எதிர்வரும் தேர்தல் நடவடிக்கைகளில் சாதகமற்ற நிலையை எதிர்கொள்ள நேரிட்ட போதிலும் நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் மேற்கொள்ள வேண்டிய தீர்மானங்களை மேற்கொள்ள தாம் ஒருபோதும் பின்நிற்கப் போவதில்லையெனவும் வலியுறுத்தினார்.

உயிர்த் தியாகங்களை மேற்கொண்டு நாட்டையும் மக்களையும் காப்பாற்றுவதற்கான தமது பொறுப்புக்களை நிறைவேற்றும் பொலிஸாருக்கு பெற்றுக்கொடுக்க வேண்டிய உயர் கௌரவத்தை பெற்றுக்கொடுக்கவும் நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

பொலிஸ் திணைக்கள உறுப்பினர்களுக்கான நலன்புரி நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய கொள்கை ரீதியான தீர்மானங்களை, பொலிஸ் திணைக்களம், பொலிஸ் ஆணைக்குழு, சட்டமும் ஒழுங்கும் அமைச்சு ஆகியவை இணைந்து கலந்தாலோசித்து துரிதமாக செயற்படுத்த வேண்டுமெனவும் அவற்றை ஒருபோதும் தாமதப்படுத்தக் கூடாதெனவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.

ஜனாதிபதியாக நான் இன்று பதவி வகித்தாலும் எனது பாடசாலை காலத்தில் இரண்டு முறை பொலிஸாரிடம் கன்னத்தில் அறைவாங்கியுள்ளேன். ஒரு முறை எம்.ஜி.ஆர். நாட்டை பிடிக்க வருவதாக கூறி எம்.ஜி.ஆரின். திரைப்படம் பொலன்னறுவை திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கையில் அங்கு சென்று தகராறு செய்தோம். அவரது திரைப்படங்கள் இங்கு ஓட கூடாது என்று சண்டை பிடித்தோம்.

இதன்போது அங்கு வந்த பொலிஸார் மீது சிலர் கல்லெறிந்தனர். அச்சம்பவத்தில் அங்கு நானும் இருந்தேன். கல்லெறிந்தவர்கள் ஓட நான் சிக்கிக்கொண்டேன். இதனால் பொலிஸார் என்னை அந்த வேளையில் முதன் முறை கன்னத்தில் அரைந்து மூன்று மாதங்களுக்கு சிறையிலடைத்தனர்.

பின்னர் மீண்டுமொரு முறை 1980 சிறிமாவோ பண்டாரநாயக்கவின் பிரஜாவுரிமையை ரத்து செய்த வேளையில் நான் பொலன்னறுவை வீதியில் இறங்கி போராடினேன். இதன்போது ஒரு நாள் முழுவதும் வீதியை மறித்து வீதியிலேயே படுத்து கிடந்தோம். இதன்போது பொலிஸார் என்னை அடித்து இழுத்துச் சென்றனர்.

இச்சந்தர்ப்பத்திலேயே நான் ஜே.வி.பி.யைச் சேர்ந்தவன் பொலிஸ் நிலையத்தை தாக்கத் திட்டம் தீட்டியுள்ளேன் என கூறி கைதுசெய்து கொலை செய்ய முயற்சித்து பின்னர் என்னை நீதிமன்றம் முன் நிறுத்தி ஒன்றரை வருடங்களுக்கு சிறைத் தண்டனை பெற்றுக்கொடுத்தார்கள்.

பொலிஸாரிடமிருந்து நான் இறந்து பிறந்தே இன்று ஜனாதிபதியாகியுள்ளேன். என்றாலும் எனக்கு ஒருபோதும் பொலிஸாரின் மீது வன்மம் எழவில்லை. ஏனென்றால் அவர்களில் நல்லவர்கள் தீயவர்கள் என இருத்தரப்பினரும் உள்ளனர்.

அதேபோல், அவர்களே நாட்டில் இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முன்னின்று உழைக்கின்றனர். இதனால் இவர்கள் உயிர்த் தியாம் கூட செய்ய நேருகின்றது. இவ்வாறான உண்மைத் தியாகிகள் மீது வன்மம் வளர்த்து என்ன பயன் என தனக்கும் பொலிஸாருக்குமான அனுபவத்தை மென்புன்னகையுடன் கூறி முடித்தார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.

'உறுதிப்பாட்டின் ஊடாக தொழில் நிபுணத்துவம்' எனும் தொனிப்பொருளில் இயங்கிவரும் தேசிய பொலிஸ் கற்கை நிலையத்தின் முதலாவது டிப்ளோமா சான்றிதழ் வழங்கும் வைபவம் ஜனாதிபதியின் தலைமையில் இடம்பெற்றதோடு, பாடநெறியினை வெற்றிகரமாக பூர்த்தி செய்த இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 264 உறுப்பினர்களுக்கு டிப்ளோமா சான்றிதழ்களும் உயர் டிப்ளோமா சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டன.

இதனை அடையாளப்படுத்தும் முகமாக ஜனாதிபதி சில பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு சான்றிதழ்களை வழங்கிவைத்தார்.

பொலிஸ்மா அதிபர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்கள் உள்ளிட்ட பொலிஸ் திணைக்களத்தின் சிரேஷ்ட உத்தியோகத்தர்களும் பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் பலர் இந்த வைபவத்தில் கலந்துகொண்டனர்.

(ஜனாதிபதி ஊடக பிரிவு)


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com