Sunday, January 6, 2019

நிறைவேற்று ஜனாதிபதியின் ஆளுநர் நியமன அரசியல்...அருண் ஹேமச்சந்திரா-

கடந்த வெள்ளிக்கிழமை 04ம் திகதி, நம் நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியினால் வழமை போன்று விசித்திரமான சம்பவம் ஒன்று நிகழ்த்தப்பட்டது. கடந்த வெள்ளிக் கிழமைக்குச் சில தினங்களுக்கு முன்னர் தாமாகவே தமது இராஜினாமாக் கடிதங்களை வழங்கிய ஆளுநர்களின் வெற்றிடங்களுக்கே புதிய ஆளுநர்கள் ஐவர்கள் நியமிக்கப்பட்டமையே அச் சம்பவமாகும்.

முதலில் ஆளுநர்கள் என்பவர்கள் யார் ?

ஆளுநர் என்பவர் நம் நாட்டைப் பொறுத்தவரையில் ஜனாதிபதியின் நேரடிப் பிரதிநிதியாவர். உலகின் சில நாடுகளில் குறிப்பாக ஐக்கிய அமரிக்கா, பிலிப்பையின்ஸ் போன்ற நாடுகளில் ஆளுநர்களுக்கான தேர்தல்கள் நிகழ்த்தப்பட்டாலும், இலங்கையைப் பொறுத்தவரையில் அவ்வாறான நிலையொன்றில்லை.

ஆகவே குறித்த ஜனாதிபதியின் கட்சியின் விசுவாசியாகவும், அவரது நிகழ்ச்சி நிரலை நிபந்தனைகள் இன்றி நடைமுறைப்படுத்தும் நபராகவும் இருத்தலே இலங்கையைப் பொறுத்தவரையில் ஆளுநரின் அடிப்படைத் தகைமையாகும். தேர்தல் காலங்களில் அதன் விதிகளை மீறுவதற்கான பினாமிகளாகவும் தொன்று தொட்டு இந்த ஆளுநர்கள் பாவிக்கப்பட்டுள்ளனர்.

சர்ச்சையை ஏற்படுத்திய நியமனங்கள்.

வழமையாக ஆளுநர் ஒருவர் நியமிக்கப்படும் பட்சத்தில் அவர் தமது சேவைக்காலம் அதாவது குறித்த ஜனாதிபதியின் நம்பிக்கைக்கு உட்பட்ட காலம் வரையில் சேவையில் இருப்பார். சிவில் சேவை அதிகாரிகள் போலல்லாமல், ஆளுநர்களைப் பொறுத்தவரையில் எவ்வித அடிப்படைத் தகைமைகளும் தேவையில்லை.

ஜனாதிபதியால் தாம் விரும்பும் யாராவது பொருவரை நியமிக்க முடியும். இதன் அடிப்படையில் முன்பு பதவியில் இல்லாத ஐந்து ஆளுநர்கள் நியமிக்கப்பட்டனர்.

சட்டத்தரணி மைத்திரி குணரத்ன, சரத் ஏக்கநாயக்க, பேஷல ஜயரத்ன, அசாத் சாலி மற்றும் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் ஆகியோரே அந்த ஐவர் ஆவர்.

இக் கட்டுரையில் தனித்தனியாக அனைத்துப் புதிய ஆளுநர்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டாலும், கிழக்கு மாகாண ஆளுநரின் நியமனம் பற்றிச் சற்றுக் கூடுதல் கவனம் செலுத்தப்படும்.

1. சட்டத்தரணி மைத்திரி குணரத்ன – முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சியின் தென் மாகான உறுப்பினரும், பின்னர் அக் கட்சியில் இருந்து பிரிந்து சென்று சுயாதீனமாக இயங்கி, அதனை அடுத்து வாழைப்பழச் சின்னத்தைக் கொண்ட ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியை உருவாக்கி, அதன் தலைவர் பதவியை வகிப்பவருமாவார். முன்னாள் கனிய மணல் கூட்டுத்தாபனத்தின் தலைவரான இவரின் பெயரும் அண்மையில் வெளிவந்த 25 பேர்களைக் கொண்ட புதிய ஜனாதிபதி சட்டத்தரணிகளின் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

2. சரத் ஏக்கநாயக்க – முன்னாள் மத்திய மாகாண முதலமைச்சரான இவர், சிறிலங்காக சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினராவார். ஜனாதிபதயின் மீதும், சுதந்திரக் கட்சியன் மீதும் விசுவாசத்தைக் கொண்டவரக அறிய முடிகின்றது.

3. பேஷல ஜயரத்ன – வட மத்திய மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரான இவர், சிறிலங்க சுதந்திரக் கட்சியின் உறுப்பினராவார்.

4. அசாத் சாலி – கொழும்பு அரசியலில் மிகவும் சர்ச்சைக்குரிய இவர், முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் கொழும்பு மாநகர சபையின் உப தலைவராகக் கடமையாற்றியதுடன், சில காலம் மஹிந்த ராஜபக்சவுடனும் அரசியலில் ஈடுபட்டவர். சுயேற்சை அரசியலைப் பின்னர் தேர்ந்தெடுத்ததாக அவர் குறிப்பிட்டிருந்தாலும், ஐக்கிய தேசியக் கட்சியினால் தனக்கு தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்புரிமை வழங்கப்படாமையை அடுத்து, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூலம் கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் போட்டியிட்டு, வட்டாரத்தில் தோல்வியைத் தழுவியவர். கடந்த காலங்களில் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதிக்கு மிகவும் நம்பிக்கை நிறைந்தவராவார் என்பது அவரது பேச்சுக்கள் மற்றும் செயல்களின் மூலம் தெளிவாகின்றது.

5. எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் – கிழக்கு மாகாண அரசியலில் குறிப்பாக காத்தான்குடியினை மையப்படுத்தி அரசியலில் ஈடுபடும் இவர் கட்சித்தாவல்களுப் பெயர் போனவர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசில் தமது அரசியலை ஆரம்பித்த இவர், முன்னாள் வட கிழக்கு மாகாண சபை உறுப்பினராவார். பின்னர் சந்திரிக்கா ஜனாதிபதி அவர்களின் காலத்தில் தபால் மற்றும் தொலைத்தொடர்புப் பிரதி அமைச்சராக இருந்ததுடன், முஸ்லிம் காங்கிரசுடன் ஏற்பட்ட முரண்பாட்டின் பொருட்டு தேசிய ஐக்கிய முன்னணியுடன் இணைந்து அதன் உப தலைவராச் செயற்பட்டார்.

அடுத்த தேர்தலின் மூலம் பாராளுமன்றம் செல்லத் தவறியமையை அடுத்து, சந்திரிக்கா ஜனாதிபதினால் நீர்ப்பாசன சபையின் தலைவராக நியமிக்கப்பட்டார். மீண்டும் 2004ம் ஆண்டு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்ட இவர், தோல்வியைத் தழுவினார்.

அதனை அடுத்து விமான நிலையங்கள் மற்றும் வான் வழிப் போக்குவரத்து அதிகார சபையின் தலைவராக நியமிக்கப்பட்ட ஹிஸ்புல்லாஹ் அவர்கள் தனது மனைவியுடன் இணைந்து பல கோடி ரூபாய் நிதி மோசடிகளில் ஈடுபட்டதாக பல்வேறு ஆதாரங்கள் காணப்படுகின்றன.

குறிப்பாக இவரது மனைவி 4 நிறுவனக்களின் தலைமைப் பதவியில் இருந்ததாகவும், அவர் மூலம் பணப் பரிமாற்றங்கள் இடம்பெற்றதாகவும் அக்காலத்தில் பல்வேறு தரவுகளுடன் சான்றுகளுடன் வெளிவந்தன.

இக்கட்டுரைக்கும் அதற்கும் நேரடித் தொடர்பு இல்லாதபடியினால் அவற்றை இதனுடன் இணைக்கவில்லை. தேவையுள்ளவர்கள் தொடர்பு கொண்டால் அவற்றினை என்னால் வழங்க முடியும்.

அத்துடன் காத்தான்குடியின் ஒருகாலத்தின் பிரதான பேசுபொருளாக கர்பலா பிரச்சனை திகழ்ந்தது. ஏழை முஸ்லிம்கள் பலருக்கு சொந்தமான ஏக்கர் கணக்கான கடற்கரை காணியை ஹிஸ்புல்லாஹ் தன்னுடைய பினாமி பெயரில் கையகப்படுத்தி வைத்துள்ளதாகவும், 2004 சுனாமிக்கு முன்னர் மக்கள் வாழ்ந்த இடம் எனவும் அந்த மக்களுக்கு எங்கே போயும் காணியை மீட்க முடியவில்லை என்றும் பலர் என்னிடம் நேரில் குறிப்பிட்டிருந்தார்கள்.

தேசிய அரசியலில் இருந்து மீண்டும் முஸ்லிம் காங்கிரசில் சேர்ந்து சில காலம் உறுப்புரிமை வகித்த இவர், பின்னர் பசில் ராஜபக்சவுடன் ஏற்பட்ட இணக்கப்பாட்டின் பிரகாரம் திடீரென்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்மைப்பில் இணைந்து, ஜனாதிபதி செயலகத்தில் வைத்து 2008ம் ஆண்டு இடம்பெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டார். குறித்த தேர்தல் காலங்களில் இவர் தான் முதலமைச்சர் வேட்பாளர் என்று பறை சாற்றினாலும், பின்னர் அப்பதவி பிள்ளையாணிற்கு வழங்கப்பட்டது யாவரும் அறிந்ததே.

அத்தேர்தலின் மூலம் மாகாண சபை சென்ற இவர், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சராகக் கடமையாற்றியதுடன், பின்னர் அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ச அவர்களின் சார்பில் போட்டியிட்டு பாராளுமன்றம் சென்றார். அமைச்சுப் பதவியும் வகித்தார். அடுத்த 2015ம் ஆண்டு இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலில் அதி தீவிர மஹிந்தவாதியாகத் தன்னைக் காட்டிக்கொண்ட இவர் தோல்வியைத் தழுவினார். அக்காலப்பகுதியில் இவர் தன்னை ஒரு தமிழ் இந்து விரோத இனவாதியாகப் பிரச்சாரம் செய்தமை பலராலும் விமர்சிக்கப்பட்டது.

பின்னர் மைத்திரிபால சிறிசேன அவர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியை ஏற்றவுடன் தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்றம் சென்று ராஜாங்க அமைச்சுப் பதவியையும் வகித்தார். அத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும் தழுவினார்.

கடந்த வருடம் இடம்பெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில், காத்தான்குடியில் இவரது வழி நடத்தலின் கீழ் கை சின்னத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அனைத்து வட்டாரங்களையும் வென்றதுடன், ஜனாதிபதி மைத்திரியின் சுதந்திரக் கட்சியின் வாக்கு வங்கியைப் பலப்படுத்தியமை குறிப்பிடத்தகதாகும்.

இந்த நியமனங்கள் என்ன சொல்ல வருகின்றன ?

பலர் பல்வேறு கோணங்களில் இந்நியமனங்க்களைக் குறிப்பாக கிழக்கு மாகாண ஆளுநரின் நியமனம் தொடர்பாகத் தமது கருத்துக்களைத் தெரிவித்து வரும் அதே வேளையில், நாம் இதன் உண்மைப் பின்னணி யாதென்று மக்களுக்குக்கு அறியப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

நாம் இந்த ஒவ்வொரு புதிய ஆளுநர்களையும் எடுத்துப் பார்த்தோம் என்றால், எந்த ஒரு வகையில் சரி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கோ அல்லது ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவிற்கோ நேரடித் தொடர்புடையவர்களாகத்தான் இருக்கின்றார்கள். அரசாங்கத்தில் தனது கட்சி அங்கம் வகிக்காமையைத் தொடர்ந்து மைத்திரி கையில் எடுத்திருக்கும் புதிய ஆயுதமே இந்த ஆளுநர் நியமனங்கள்.

குறிப்பாக நியமித்த திகதிக்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தல் ஒன்றினை எதிர்பார்க்கும் பட்சத்தில் மைத்திரி தனது அன்றாடம் நலிவடைந்துவரும் முகாமைப் பலப்படுத்த நினைக்கின்றார். மாகாண சபைகள் கலைக்கப்பட்டும், உள்ளூர் ஆட்சி சபைகளுள் பாரிய வீழ்ச்சிகளையும் கண்ட மைத்திரி, தற்போது எதிர்நோக்கும் பிரச்சனை அவரது கட்சிக்கு அமைச்சுப்பதவிகள் இல்லாமையே. அதனை ஓரளவேண்டும் நிவர்த்தி செய்ய பாவித்துள்ள ஆயுதங்களே இந்த ஆளுநர்கள்.

அதாவது தேர்தல் இலக்கை மையப்படுத்திய ஆளுநர் நியமனங்களே இவை. இலங்கையில் இதற்கான தேவை இதுவரை காலமும் பாரிய அளவில் காணப்படவில்லை. மாகாணங்களில் ஆளுநர் ஆட்சிகள் இடம்பெற்று வரும் இவ்வேளையில், இவர்கள் மூலம் அதி உச்ச பயனைப் பெற நினைக்கின்றார்.

அத்துடன் ஹிஸ்புல்லாஹ் அவர்கள் தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்றம் சென்றவர். தற்போதோ அவரிடம் அமைச்சுப் பதவி இல்லை. இவரைப் பொறுத்த வரையில் ஒவ்வொரு கால கட்டத்திலும் ஏதோவொரு அரசாங்கப் பதவியை வகித்துள்ளார்.

ஆகவே இவரை மைத்திரி தன்னுடன் தக்கவைத்துக் கொள்வதற்காகப் பாவித்துள்ள ஒரு உத்தியாகவும் இது இருக்கலாம். அத்துடன் இவரது வெற்றிடம் மூலம் தனது பிரச்சாரத்தை பாராளுமன்றத்தில் மேற்கொள்ளக் கூடிய சாந்த பண்டாரவை நியமித்துள்ளார்.

ஆகவே இங்கு நாம் ஒன்றை மாத்திரம் விளக்கமாகப் புரிந்து கொள்ளல் வேண்டும். ஹிஸ்புல்லாஹ் அவர்கள் ஒரு இனவாதியாக இருக்கலாம். அதில் எவ்வித மாற்றுக்கருத்துமில்லை.

அது போன்று கிழக்கிலங்கையில் இதுவரை ஆட்சியமைத்துப் பதவி வகித்த அனைத்து தமிழ் முஸ்லிம் சிங்களத் தலைமைகளும் அவ்வாறே காணப்பட்டனர்.

இங்கு பிரதான பிரச்சனையாக விளங்குவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையே தவிர வேறொன்றும் இல்லை. தனக்குத் தேவையான யாரையும் பதவியில் அமர்த்தலாம் அல்லது விலக்கலாம் என்ற நிலையை உருவாக்கியுள்ள இந்த அதிகாரம் கடந்த நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக நாட்டைத் துவம்சம் செய்து கொண்டிருக்கின்றது. அதனால் ஏற்படுத்தப்படும் தாக்கம் அடிமட்டத்தில் பல்வேறு இனவாத, அடிப்படைவாத சிந்தனைகளைத் தூண்டுகின்றது.

ஆகவே ஒரு சிலரின் பதவி வெறிக்காக பலர் ஒற்றுமையைக் குலைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சிலர் குறுகிய காரணங்களுக்காக ஆதரவளிப்பதும், சிலர் அக்காரணங்களுக்காக்கவே வெறுப்பதும் இங்கு சர்வ சாதாரணமாயுள்ளது. இது ஒருபோதும் நாடு என்ற ரீதியில் நல்ல விடயமல்ல.

சர்வாதிகாரப் போக்கினைத் தொடர்ந்தும் நிரூபித்துக் கொண்டிருக்கும் கொண்ட நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையினை 1994ம் ஆண்டு தொடக்கம் பதவி வகித்துவரும் அனைத்து ஜனாதிபதிகளும் அதனை நீக்குவதகான மக்கள் ஆணையைப் பெற்றும், அதன் பின்னர் ஏற்பட்ட பதவி மோகத்தால் இன்றுவரை நீக்காமல் இருக்கின்றனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கடந்த 2015 ஜனவரி 08 ம் திகதி ஆசனத்தில் மக்கள் அமரவைப்பதற்கான தீர்ப்பை வழங்கினர்.

மைத்திரி அவர்கள் தான் பதவிக்கு வந்தவுடன் இதனை நீக்குவதற்கான நடவடிக்கையை மேற்கொள்வேன் என்றார். நூறு நாள் வேலைத் திட்டம் என்றார். கொழும்பை விட்டு விலகி பொலன்னறுவையில் இருந்து தமது ஆட்சியைப் புரிவேன் என்றார். மக்கள் மீண்டும் ஒரு முறை ஏமார்ந்து இன்னும் இரண்டு நாட்களில் 04 வருடங்கள் நிறைவடைகின்றன. சிக்கல்கள் வலுவடைந்தே செல்கின்றன. இதைக் கடந்த ஒக்டோபர் 26 தொடக்கம் நாடே அனுபவித்தது. இனியும் இதனை ஏன் நீக்கவேண்டும் என்ற விடயத்தில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

நாட்டில் உண்மை ஜனநாயகம் நிலை நாட்டப்பட வேண்டும். சர்வாதிகாரம் ஒழிய வேண்டும், தேசிய ஒற்றுமை ஒங்க வேண்டும். உலகத் தராதரத்தில் நம் நாட்டையும் ஓர் பொருளாதார ரீதியில் பலமிக்க நாடாக மாற்றவேண்டும், அனைவருக்கும் பாரபட்சமற்ற வேலைவாய்ய்பு வழங்கப்படல் வேண்டும் என்ற சிந்தனை உடைய அனைத்து முற்போக்குச் சக்திகளும், இன, மத, மொழி, பால் என்ற பேதங்களைத் துறந்து ஒன்றாக ஸ்தாபனப்படுத்தப்பட வேண்டிய தருணமிது...

-அருண் ஹேமச்சந்திரா-

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com