Sunday, December 30, 2018

தோழரைக்கொன்ற தோழருடன் தோழோடு தோழ்சேர்ந்தார் தோழர்.

ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின் வடமாகாண நிர்வாகிகள் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்களுக்கான விசேட சந்திப்பொன்று நேற்று கட்சியின் தலைவர் கே.என். டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றது.

அக்கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில், ஈபிடிபியின் நீண்டநாள் உறுப்பினரும், நெடுந்தீவு தவிசாளருமாகவிருந்த ரெக்சி்ன் என்பவரை சுட்டுக்கொன்றார் என்ற குற்றச்சாட்டுக்குள்ளாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கமல் எனப்படும் கமலேந்திரனும் கலந்து கொண்டுள்ளார்.

பிணையில் விடுதலையாகியுள்ள முன்னாள் யாழ் மாவட்ட ஈபிடிபி பொறுப்பாளரான கமலின் வழக்கு, நிலுவையிலுள்ளது. கொலைக்கு பயன்படுத்தப்பட்டதென இவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட துப்பாக்கியாலேயே கொலை இடம்பெற்றுள்ளது என இரசாயன பகுப்பாய்வு அறிக்கையினூடாக ஊர்ஜிதம் ஆகியுள்ளதாக, சீஐடியினர் நீதிமன்றுக்கு தெரியப்படுத்தியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

ரெக்சியனின் மனைவியுடன் கமலுக்கிருந்த இரகசிய தொடர்பு காரணமாகவே அவர் கொல்லப்பட்டார் என்று விசாரணையாளர்கள் தெரிவித்திருந்த நிலையில், அவ்வமைப்பினால் விலத்தப்பட்டுள்ளதாக பெரும் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையிலேயே கமல் இன்று ஈபிடிபியின் முக்கியஸ்தர்களுடனான கூட்டத்தில் பங்கெடுத்துள்ளார்.

அந்தவகையில் கமல் எனப்படும் கமலேந்திரன் ஈபிடிபியின் முக்கியஸ்தர் அல்லது வட மாகாண ஈபிடிபி நிர்வாகிகளில் ஒருவர் என்றே கணக்கெடுக்கப்படுகின்றார்.

அவ்வாறே பல்வேறு சமூகவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டார் என கட்சியினால் விலத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த, வேலணை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் ''போல்'' என்று அழைக்கப்படும் சின்னையா சிவராசா என்பவரும் கலந்து கொண்டுள்ளார்.

மேலும் கட்சிக்கு சொந்தமான கொழும்பிலுள்ள கட்டடம் ஒன்றின் விவகாரத்தில் தலைவருடன் முரண்பட்டு வெளியேறியிருந்த எஸ். தவராசாவும் குறித்த கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தார். தவராசாவை மாகாண சபையின் எதிர்கட்சி தலைவர் பதவியிலிருந்து நீக்குமாறு டக்ளஸ் தேவானந்தா தேர்தல்கள் ஆணையாளர் மற்றும் வட மாகாண ஆழுநருக்கு கடிதம் எழுதியபோதும் அது நிறைவேறவில்லை.

இவ்வாறான நிலையில் கட்சியிலிருந்து விலகியிருந்த மற்றும் விலக்கியிருந்த பலரை இன்று டக்ளஸ் தேவானந்தா வருந்தி அழைப்பதாக உட்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

எதிர்வரும் தேர்தல்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் கட்சியின் மீள்கட்டுமான செயற்பாடுகளில் சமூகவிரோத செயற்பாடுகள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் உள்ளோரை உள்ளீர்ப்பதால், கட்சிக்கு மேலும் பின்னடைவே ஏற்படும் என அவ்வட்டாரங்கள் விமர்சித்து வருகின்றன.









0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com