Sunday, December 23, 2018

அழுத்தங்களுக்கு அடிபணியாது கடமையினை நிறைவேற்றுவீர். அமைச்சின் செயலாளர்களுக்கு ஜனாதிபதி.

எந்தவொரு அழுத்தங்களுக்கும் அரசாங்க அதிகாரிகள் அடிபணியக் கூடாது என்றும் சட்டவிரோத செயற்பாடு மற்றும் முறைக்கேடு தொடர்பில் எந்த அழுத்தம் ஏற்பட்டாலும், அரசாங்க அதிகாரிகள் அதற்கு இடமளிக்க கூடாதென ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் புதிய அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு நியமனங்களை வழங்கிய பின்னர் ஜனாதிபதி உரையாடினார். நல்லாட்சி அரசாங்கம் எனக் கூறி கொண்டாலும், சுத்தமான அரசாங்கம் என எங்களுக்கு இன்னமும் சான்றிதழ் ஒன்றும் கிடைக்கவில்லை.

சட்டவிரோத செயற்பாடு மற்றும் முறைக்கேடு தொடர்பில் எந்த அழுத்தம் ஏற்பட்டாலும், அரச ஊழியர் ரீதியில் அவற்றில் இருந்து விலகி நேர்மையாக பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டும்.

யார் ஊழல் முறைக்கேடுகளில் ஈடுபட்டாலும் அது பொது மக்களுக்கு தெரியவந்து விடும். எனவே நேர்மையாகவும் பொறுப்புடனும் செயற்பட வேண்டும் என நான் அனைத்து அரச ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளிடம் கேட்டு கொள்கிறேன் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

நல்லாட்சி என்ற சொல்லை நாம் எங்கு பயன்படுத்திய போதும் நாட்டின் அரச நிர்வாகம் தூய்மையானதொரு நிர்வாகம் என்ற சான்றிதழை இன்னும் மக்களிடமிருந்து பெற்றுக்கொள்ளவில்லை என்றும், நாட்டு மக்கள் எதிர்ப்பார்க்கின்ற சிறந்த அரச நிர்வாகத்திற்காக உரிய முறையில் தமது பொறுப்புக்களை நிறைவேற்றுமாறு ஜனாதிபதி அனைத்து அமைச்சுக்களினதும் செயலாளர்களிடம் கேட்டுக்கொண்டார்.

ஊழல், மோசடி மற்றும் முறைகேடுகளுக்கு எதிரான போராட்டத்துடன், தொடர்ந்தும் நாட்டு மக்களுடன் கைகோர்த்துக் கொண்டுள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, அரச வளங்களை சேதப்படுத்தி, மக்களின் பணத்தை திருடி மேற்கொள்ளும் ஊழல், மோசடிகள் எப்போதும் இரகசியமாகவே இருக்காது என்றும், அது என்றைக்காவது ஒரு நாள் மக்களுக்கு தெரியவரும் என்றும், குற்றவாளிகள் உரிய தண்டனையை பெறவேண்டியிருக்குமென்றும் குறிப்பிட்டார்.

வறுமையற்ற நாட்டையும் ஒழுக்கப் பண்பாடான சமூகத்தையும் கட்டியெழுப்புவது இன்று எம்முன் உள்ள முக்கிய சவாலாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அந்த சவாலை வெற்றிகொள்வதில் நாட்டின் அரச அதிகாரிகள் மீது தான் முழுமையாக நம்பிக்கை வைத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

அமைச்சுக்களிலும் அமைச்சுக்களின் கீழ் உள்ள அனைத்து திணைக்களங்கள் கூட்டுத்தாபனங்களின் செயற்பாடுகள் குறித்து தொடர்ச்சியாக கண்டறிந்து அவற்றை சரியாக வழிநடத்துவது அமைச்சுக்களின் செயலாளர்களின் பொறுப்பாகுமெனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, மாதத்திற்கு ஒரு தடவையாவது குறித்த நிறுவனங்களுக்குச் சென்று பணிக்குழாமினரை சந்தித்து அவர்களை வலுவூட்டுவதற்கும் தேவையான வழிகாட்டல்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் புதிய அமைச்சுக்களின் செயலாளர்களின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com