Monday, November 26, 2018

பத்து லட்சம் கையெழுத்து வேட்டையில், மலையகத்தில் கரு ஜெயசூரியவின் உருவப் பொம்மை எரிப்பு

பாராளுமன்ற தேர்தலை உடனடியாக நடத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் 10 இலட்சம் கையொப்பங்களை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் இடம்பெற்றன.

வலப்பனை தேர்தல் பிரதேசமான நுவரெலியா, இராகலை நகரில் நேற்று (25) இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது சபாநாயகர் கரு ஜயசூரியவின் உருவ பொம்மைக்கும் தீ மூட்டப்பட்டது.

அமைச்சர் சி.பீ. ரத்னாயக்காவின் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், இராகலை நகர பௌத்த ஆலயத்துக்கு அருகில் ஒன்று கூடிய கட்சி ஆதரவாளர்கள் பேரணியாக இராகலை மேல் நகர தொகுதி சந்தியில் ஒன்று கூடினர்.

இன்றைய அரசியல் சூழ்நிலையில் சரியான தீர்வு ஒன்றை பெற்றுக்கொள்ள உடனடியாக நடவடிக்கைகள் எடுத்து பாராளுமன்ற தேர்தலை நடத்தும்படி வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியவாறு பேரணியில் கலந்து கொண்டவர்கள் ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராக பதாதைகளையும் ஏந்தி வந்தனர்.

இதனை அடுத்து மேடை அமைக்கப்பட்ட இடத்திற்கு வருகை தந்தவர்கள் அங்கு அமைச்சர் சி.பீ. ரத்னாயக்காவின் உரையை தொடர்ந்து தேர்தலை வலியுறுத்திய மகஜரில் கையொப்பமிடும் நடவடிக்கையை மேற்கொண்டனர்.

இதன்போது பேரணியில் ஏந்தி வந்த பாராளுமன்ற சபாநாயகர் கரு ஜயசூரியவின் உருவ பொம்மைக்கு தீ மூட்டியமை குறிப்பிடத்தக்கது.



(மலையக நிருபர் கிரிஷாந்தன்).

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com