Monday, November 26, 2018

சாட்சியங்களுக்கு எதிராக அட்மிரால் விஜேகுணவர்த்தன. நடிவக்கை எடுக்குமாறு சிஐடி பொலிஸ் மா அதிபருக்கு சிபாரிசு.

கொழும்பில காணாமல்போன 11 இளைஞர்களது விடயத்தில் முக்கிய சந்தேக நபராக காணப்படும் நேவி சம்பத் என்பவருக்கு அடைக்கலம் அளித்தார் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள பாதுகாப்பு படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன மீது பாதிக்கப்பட்டவர்கள், சாட்சிகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மூத்த பிரதி காவல்துறை மா அதிபர் ஆர்.பி.செனிவிரத்ன, சிறிலங்கா காவல்துறை மா அதிபரிடம் கோரியுள்ளார்.

குறித்த வழக்கு சம்பந்தமாக விசாரணைகளை மேற்கொண்டுவரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி நிசாந்த சில்வா, விடுதலைப் புலிகளுடன் தொடர்புள்ளவர் என்று அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன குற்றம்சாட்டியிருந்தார்.

எனினும், அந்தச் குற்றச்சாட்டு பொய்யானது என்று காவல்துறை மா அதிபருக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அறிக்கை அளித்திருந்தனர்.

இந்தநிலையில், முக்கியமான விசாரணை அதிகாரி மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி, விசாரணைகளில் தலையீடு செய்ய முயன்ற, அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன மீது பாதிக்கப்பட்டவர்கள், சாட்சிகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மூத்த பிரதி காவல்துறை மா அதிபர் செனிவிரத்ன, சிறிலங்கா காவல்துறை மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவுக்கு எழுத்து மூலம் பரிந்துரைத்துள்ளார்.

இதேநேரம் குறித்த சம்பவம் தொடர்பில் கடற்படையை சேர்ந்த முக்கிய சாட்சியொருவர் முப்படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜயகுணவர்த்தன முன்னிலையில் கடற்படையை சேர்ந்தவர்களால் தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

கடற்படை அதிகாரி லக்சிறி கலகமகே என்பவரே இவ்வாறு தாக்குதலிற்கு உள்ளாகியுள்ளார்.

மேலும் கடற்படை அதிகாரி மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொள்வதற்கும் முப்படைகளின் பிரதானியின் உதவியாளர்கள் முயன்றுள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை கடற்படை தலைமையகத்தில் உள்ள அதிகாரிகள் உணவருந்தும் பகுதியிலிருந்து வெளியேறிக்கொண்டிருந்த கடற்படை அதிகாரி லக்சிறி கலகமகேயை ரவீந்திர விஜயகுணவர்த்தன எதிர்கொண்டுள்ளார்.

லக்சிறி கலகமகே குறிப்பிட்ட பகுதியில் காணப்படுகின்றார் என்ற தகவல் கிடைத்ததை தொடர்ந்தே ஒய்வு பெற்ற கடற்படை தளபதியான ரவீந்திர விஜயகுணவர்த்தன அங்கு சென்றார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

கலகமகேயை பார்த்ததும் சீற்றத்துடன் முப்படைகளின் பிரதானி அவரை தகாதவார்த்தைகளால் ஏசியுள்ளார்.

அதன் பின்னர் தனது உதவியாளர்களிடம் அவரை அழைத்துவருமாறு உத்தரவிட்டுள்ளார்.

எனினும் முப்படைகளின் பிரதானியுடன் மோதலை தவிர்ப்பதற்காக கலகமகே அந்த இடத்திலிருந்து விலகிச்செல்ல முயன்றவேளை ரவீந்திர விஜயகுணவர்த்தனவின் சகாக்கள் அவரை துரத்தி பிடித்துள்ளனர்.

இதன் போது அவர்கள் கைத்துப்பாக்கியை காண்பித்து கடற்படை அதிகாரியை அச்சுறுத்தியுள்ளனர் இதன் காரணமாக தன்மீது துப்பாக்கி பிரயோகம் இடம்பெறலாம் என்ற அச்சம் காரணமாக கடற்படை அதிகாரி தனது காலால் கைத்துப்பாக்கியை உதைத்து வீழ்த்திவிட்டு கடற்படை தலைமையகத்திலிருந்து வெளியே தப்பியோடியுள்ளார்.

இதன் போது இடம்பெற்ற சிறிய மோதலின் போது கடற்படை அதிகாரியின் கையடக்க தொலைபேசி தவறி கீழே விழுந்துவிட்டது எனவும் அதனை முப்படையின் பிரதானியின் உதவியாளர்கள் எடுத்துள்ளனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனை தொடர்ந்து குறிப்பிட்ட கடற்படை அதிகாரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்வதற்கு சென்றுள்ளார் எனினும் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரியை தொடர்புகொண்ட முப்படைகளின் பிரதானி முறைப்பாட்டை ஏற்றுக்கொள்ளவேண்டாம் என அழுத்தம் கொடுத்துள்ளார்.

எனினும் இந்த அழுத்தங்களிற்கு அடிபணியாத குறிப்பிட்ட பொலிஸ் அதிகாரி முறைப்பாட்டை பதிவு செய்துள்ளதுடன் சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக கடற்படை தலைமையகத்திற்கு சென்றுள்ளார்.

முப்படைகளின் பிரதானியின் உத்தரவின் பேரில் சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு குறிப்பிட்ட பொலிஸ் அதிகாரி செல்வதற்கு சிரேஸ்ட கடற்படை அதிகாரிகள் சிலர் தடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com