Thursday, November 1, 2018

யார் இந்த நாமல் குமார? போட்டுடைக்கின்றார் மகாசோன் படையணியின் தலைவர் அமித் வீரசிங்க.

கண்டி பிரதேசத்தில் முஸ்லிம்கள் மீது கட்டவிழ்க்கப்பட்ட வன்செயல்களுடன் தொடர்புடையவர்கள் எனும் குற்றச்சாட்டடில் மகாசோன் படையணியின் தலைவர் அமித் வீரசிங்க உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டு சுமார் 10 மாத விளக்க மறியலின் பின்னர் நேற்று பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.

பிணையில் விடுதலையாகி வெளியேறிய அமித் வீரசிங்க, ஜனாதிபதியை கொல்வதற்கு சதிமுயற்சி மேற்கொள்ளப்படுகின்றது என்ற பரபரப்பு செய்தியை வெளியிட்டு, நாட்டில் பெரும் அசமந்த நிலையை உருவாக்கிய நாமல் குமார தொடர்பில் பல்வேறு விடயங்களை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

அவர் ஊடகங்கள் முன்னிலையில் தெரிவித்தமை வருமாறு.

“மார்ச் மாதம் கூட்டு எதிர்க்கட்சியினால் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை வெற்றிகொள்வதற்கு ஏதேனும் காரணத்தை தேடிக்கொண்டிருந்த போது, லொத்தர் சீட்டு கிடைத்தது போன்று கண்டி தெல்தெனிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.

முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவினை பெற்றுக் கொள்வதற்காக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

ரணிலின் நண்பரான பிரதிப் பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வா, அப்பாவி இளைஞர்களை கைது செய்தார்.

மார்ச் மாதம் 8ஆம் திகதி என்னுடைய வீட்டில் 10 பேர் கைது செய்யப்பட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டன, ஆனால் அது பொய். என் வீட்டிலிருந்து 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட 11ஆம் நபர்தான் இந்த நாமல் குமார.

எனது வீட்டின் சோபாவில் பிட்டு சாப்பிட்டு உறங்கிக்கொண்டிருந்தவர் தான் இந்த நாமல் குமார.

எங்களை வாகனத்தில் ஏற்றிச் சென்ற போது சிறிது தூரம் சென்றதன் பின்னர் நாமல் குமாரவின் கைவிலங்கை அகற்றி பரதிப் பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வா வேறு வாகனத்தில் அனுப்பி வைத்தார்.

என்னை கைது செய்வதற்கு சன்மானமாக ஐந்து லட்சம் ரூபா வழங்குவதாக பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர உறுதியளித்திருந்தார்.

வழங்கப்பட்ட இந்த ஐந்து இலட்சம் சன்மானத்தை பிரதிப் பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வா பெற்றுக் கொண்டார், அதனை நாமல் குமாரவிற்கு வழங்கவில்லை.

இந்த ஐந்து லட்சம் ரூபாவினை பிரித்துக் கொள்ள முடியாது, பாதாள உலகக் குழுவினர் வங்கியைக் கொள்ளையிட்டு பணத்தை பிரித்துக் கொள்ளும் போது மோதிக் கொள்வது போன்று இருவரும் மோதிக் கொள்கின்றனர்.

கொலைச் சதித் திட்டத்துடன் இருவருக்கும் தொடர்பு உண்டு, பிரதிப் பொலிஸ்மா அதிபர் மீது மட்டும் குற்றம் சுமத்துவதில் பயனில்லை.

நாமல் குமார சொல்லுவதனைப் போன்று அவர் நல்லவர் கிடையாது.

அனுராதபுர சிறைச்சாலையில் நான் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது டென் பிரியசாத் (மஹாசேன் இயக்க செயற்பாட்டாளர்) என்னை சந்திக்க வாந்தார். பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் என்னை அழைத்துள்ளனர் நான் எவ்வாறு பேச வேண்டுமென அவர் என்னிடம் கேட்டார்.

அதற்கு நான் கூறினேன், “உங்களுக்குத் தெரிந்த உண்மைகளை வெளிப்படுத்துமாறு” கூறினேன். இறுதியாக ஒரு பொய்யை சொல்லுமாறு நான் கூறினேன்.

அந்த பொய் என்னவென்றால் “நாமல் குமார உங்களது (நாலக டி சில்வாவினது) குரல் பதிவு ஒன்றை என்னை கேட்கச் செய்தார்” என கூறுமாறு நான் டென் பிரியசாத்திடம் கூறினேன்.

ஏனென்றால் இந்த இருவரும் செய்யும் செயல்களை தாங்கிக்கொள்ள முடியாமல் இவ்வாறு ஓர் பொய் சொல்ல திட்டமிட்டோம்.

இதனைக் கூறிய போது நாலக டி சில்வா எதனையும் சிந்திக்காது கோபப்பட்டு, நமால் குமாரவை கடுமையாக திட்டினார்.

ஏன் அமீத் வீரசிங்க பற்றிய விடயங்களை கூறினாய் என நாலக டி சில்வா கடுமையாக சாடினார்.

உயிர் அச்சுறுத்தல் காரணமாக நாமல் குமார அனைத்து விடயங்களையும் உளறிவிட்டார்.

எனக்கு செய்த காரியத்தையே நமால் குமார, பிரதிப் பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வாவிற்கும் செய்துவிட்டார்.

நாங்களும் எதிர்பார்க்கவில்லை, இருவரும் நீண்ட நாட்களாக உரையாடியவற்றை பதிவு செய்து வைத்திருந்து அவற்றை ஊடகங்களுக்கு வெளிப்படுத்தினார்.

ஒரு பாதாள உலகக்குழு இணைந்து செய்த காரியம் தற்பொழுது ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்த நேரிட்டுள்ளது.

இந்த விடயம் அரசாங்கமொன்று மாறும் அளவிற்கு பாரதூரமாக அமைந்துவிட்டது” என அமீத் வீரசிங்க தெரிவித்துள்ளார்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com